2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தூய நீருக்கான செயலணி உருவாக்கம்

Menaka Mookandi   / 2015 ஜனவரி 28 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

சுன்னாகம் பகுதியிலுள்ள கிணறுகளில் ஏற்பட்ட கழிவு எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தூயநீர் வழங்குவதற்கான செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

யாழ். பொது நூலகத்தில் கேட்போர் கூடத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் புதன்கிழமை (28) நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த செயலணி உருவாக்கப்பட்டது.

இந்த செயலணியின் இணைத் தலைவர்களாக வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோரும், துணைத்தலைவராக யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகமும், செயலாளராக விவசாய அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

மத்திய சுற்றாடல் அமைச்சின் தலைவர், நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் யாழ்;. மாவட்ட பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் அங்கம் வகிப்பவர்கள், அனர்த்த முகாமைத்துவ பிரிவு, வலிகாமம் வடக்கு, வலிகாமம் தெற்கு, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர்கள், பொதுமக்கள் சார்பில் இரு பிரதிநிதிகள் ஆகியோர் இந்த செயலணியில் அடங்குகின்றனர்.

இந்தச் செயலணியில் சேர விருப்பம் தெரிவித்த வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா, எதிர்க்கட்சி உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர். இந்த செயலணியின் செயற்பாடுகளில் ஏற்கனவே நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும் இதில் இணைக்கப்பட்டுள்ளார்.

இந்த குழு தொடர்பில் அமைச்சர் ஐங்கரநேசன் கருத்து கூறுகையில், 'பிரதேச சபைகள், செயலகங்கள், அனர்த்த முகாமைத்துவப்பிரிவு, அரசியல்வாதிகள், சுகாதாரப் பிரிவினர், முகாமைத்துவப் பிரிவினர் என பல்வேறு தரப்பினரும் இந்த எண்ணெய் கசிவு தொடர்பில் ஏற்பட்ட குடிநீர்ப் பிரச்சினை தொடர்பில் நடவடிக்கைகளையும், உதவிகளையும் செய்து வருகின்றனர். அனைவரையும் ஒருங்கிணைத்து செயற்படுத்தவே இந்தச் செயலணி உருவாக்கப்பட்டுள்ளது' என்றார்.

'இந்தச் செயலணி உருவாக்குவதன் நோக்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி குடிநீர் வழங்குதல் மற்றும் நிலத்தடி நீருள் கலந்துள்ள எண்ணெயை அகற்றுவதற்காக தொடர்ச்சியான அணுகுமுறைகளை மேற்கொள்ளுதல் ஆகும். வெவ்வேறு தரப்பினர் ஒருங்கிணைந்து செயற்படுவதன் மூலம் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும்.

பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள நீர்ப்பிரச்சினை தொடர்பில் அறியத்தருவதற்கு 021 221 1265 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

நீர் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த போதும், பூரணமான முடிவை இதுவரையில் எட்டமுடியவில்லை. இதில் யாரையும் குறைசொல்ல முடியாது. இந்த விடயம் தொடர்பாக அனைவரும் வெளிப்படைத் தன்மையுடன் செயற்படவேண்டும். மக்களை பீதியடைச் செய்யும் நடவடிக்கைகளை யாரும் மேற்கொள்ளக்கூடாது' என்றார்.

இலங்கை மின்சார சபைக்கு மின்சாரம் வழங்கும் நொதேர்ன் பவர் நிறுவனத்தின் மின்பிறப்பாக்கியிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய் பாதுகாப்பற்ற முறையில் நிலத்தில் விடப்பட்டமையே சுன்னாகம் பகுதியிலுள்ள கிணறுகளுக்கு எண்ணெய் கசிவு ஏற்பட்டதாகக்கூறி அந்நிறுவனத்தை தற்காலிகமாக மூடுமாறு மல்லாகம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (27) உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X