2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

மஹிந்த வென்றிருந்தால் தமிழ் மக்களின் தனித்துவம் இல்லாது போயிருக்கும்: மாவை

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 06 , மு.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஜனாதிபதி ஆகியிருந்தால் தொடர்ந்து 08 ஆண்டுகள் ஆட்சி புரிந்து தமிழ் மக்களின் தேசிய தனித்துவங்களை இல்லாது அழித்தொழித்து இருப்பார் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

புறநெகும திட்டத்தின் கீழ் 52 மில்லியன் ரூபாய் செலவில் திருநெல்வேலியில் அமைக்கப்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 03 மாடி கட்டட திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்,

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னர் இருந்த வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, இராணுவ தளபதிகள் ஆகியோர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்தவர்களை பாடசாலை மற்றும் பொது நிகழ்வுகளுக்கும் அழைக்கக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தனர். மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் நாங்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஆளுநரும், இராணுவத்தினரும் இருந்தனர்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எம்மீது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினர் தாக்குதலை தொடுத்தார்கள். அது மிகவும் அசிங்கமான சூழல்.

எங்களையும் இந்த புதிய அரசாங்கத்தில் சேர்ந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. பேரம் பேச நாங்கள் வரவில்லை என்று அவர்களுக்குத் தெரிவித்தோம்.

எம்முடன் இந்த பேச்சுவார்த்தை நடந்தது தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்னர். ஆனால் பொது எதிரணியின் செயற்பாடுகள் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டு விட்டன. பொது எதிரணி வேட்பாளர் 'மைத்திரிபால சிறிசேன' என மஹிந்த ராஜபக்ஷவின் உளவாளிகளுக்கும் வேறு யாருக்கும் தெரியாது. சந்திரிகாவுக்கு மட்டுமே தெரியும்
மாகாணத்துக்கு அதிகாரங்களை கொடுக்காமல் அரசாங்கம் இருந்துள்ளது. 1992ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் சந்திரிகா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக இருந்த போது ஒரு பிரேரணையை முன்வைத்தார். அது ஒரு முன்னேற்றமான பிரேரணையாக இருந்தது.

நாங்கள் 1985ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் இந்திய அரசாங்கத்துக்கு கொடுத்த பிரேரணையில் எவை இருந்ததோ அதை மேம்படுத்திய பிரேரணையாக அது இருந்தது. அதனை ஐக்கிய தேசியக் கட்சி ஆதரிக்க தவறி, அதில் மாற்றங்களை ஏற்படுத்தியதால் அதில் குறைபாடுகள் ஏற்பட்டது.

அந்தப் பிரேரணையில் ஒற்றையாட்சி அகற்றப்பட்டு பிராந்திய மொழி ஒன்றியம் என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டு இருந்தது. மாகாணத்துக்கு உயர்ந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டு இருந்தன.

வடக்கு, கிழக்கு இணைந்து எங்களது தாயகத்தின் அடித்தளத்திலே அங்கீகாரம் பகிரப்படுவதற்கு அங்கீகாரம் இருந்தது. முஸ்லிம்களுக்கு அங்கே அவர்களது பிரதேசத்தில் ஆட்சி செய்ய உரித்து வழங்கி இருந்தது. அதற்கு நாங்களும் உடன்பட்டோம்; என்றார்.

அம்பாறையில் இருந்த சிங்கள மக்களுக்கு ஒரு தனியான அலகு அல்லது அவர்கள் ஊவா மாகாணத்துடன் இணைக்கப்படவேண்டும். அப்போது தான் தமிழ் முஸ்லிம் மக்களது பெரும்பான்மை பலமடையும்.

திஸ்ஸ அத்தநாயக்க பெற்றுக்கொண்ட விலை சிறைவாசம்

ரணில் விக்கிரமசிங்காவுக்கும் மைத்திரிபால சிறிசேனாவுக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக பொய்யான ஆவணங்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டில் திஸ்ஸ அத்தநாயக்க இன்று சிறைவாசம் அனுபவிக்கின்றார்.

மைத்திரிபால சிறிசேனாவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும், புலம்பெயர் தமிழர்களும் சர்வதேச நாடுகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து மஹிந்த ராஜபக்ஷவை மின்சார கதிரையில் அமர்த்தப் போவதாக தென்னிலங்கையில் தேர்தல் பிரசாரங்களை செய்தார்கள்.

தமிழர்களின் தனித்துவத்தை தேசியத்தை அழிப்பதே திட்டம்

மஹிந்த ராஜபக்ஷவின் வரவு – செலவுத்திட்டத்தில் இரணைமடுவுக்கு பக்கத்தில் 10 ஆயிரம் இராணுவ வீரர்களுக்கு வீடு அமைத்துக் கொடுக்க ஒதுக்கீடு செய்தார்கள். 10 ஆயிரம் வீடுகள் கட்டப்படுவதன் மூலம் 50 ஆயிரம் பேரை அங்கே குடியமர்த்த முயன்றார்கள். பௌத்தர்கள் இல்லாத இடங்களில் எல்லாம் பௌத்த விகாரைகளை கட்டுகின்றார்கள். விகாரைகள் கட்டுவதற்காக எங்கள் கோயில்களை இடிகின்றார்கள்.

இதன்மூலம் தமிழர்களின் தனித்துவம் தேசியம் என்பவற்றை இல்லாது அழித்து ஒழிக்க முயல்கின்றார்கள்.

அதற்காவே 1 இலட்சம் இராணுவத்தினரை தமிழர் பிரதேசங்களில் நிலை நிறுத்தினார்கள். அதன் மூலம் தமிழர் பிரதேசங்களை சிங்கள மயமாக்குவதே ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தின் திட்டமாக இருந்தது.

தமிழ் மக்களின் நகைகள் கொள்ளை

தமிழ் மக்களுக்கு சொந்தமான நகைகளை வன்னியிலிருந்து மூன்று பெரிய கொள்கலன்கள் மூலம் (கெண்டெயினரில்) எடுத்து சென்றுவிட்டு, தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னர் அதில் 100 பேரின் சிறிய தொகை நகையை கையளித்தனர்.

முன்னர் இராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா கூறினார், தான் மட்டும் 200 கிலோ தங்கத்தை கையளித்ததாக. தமிழ் மக்களுக்கு சொந்தமான நகைகள் எல்லாம் தற்போது எங்கே என தெரியவில்லை.

பசில் எனது நண்பர்

வரவு - செலவுத்திட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு இராணுவத்துக்காக ஒதுக்கி இருந்தார்கள். அப்போது நான் நாடாளுமன்றில் யுத்தத்தில் வாழ்விழந்தவர்கள், வீடு இழந்தவர்களுக்கு நிதி ஒதுக்காமல் இராணுவத்தினருக்கு இவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது தொடர்பில் பேசினேன்.

அதன் பிறகு நான் அமர்வு முடிந்து வெளியேறிய போது, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ என்னை மறித்து சொன்னார், கடைசியில் நீங்கள் என்னையும் தாக்க தொடங்கிட்டீங்களே என்று. அதற்கு நான் சொன்னேன் உங்களை நான் தாக்கவில்லை வாழ்விழந்தவர்கள், வீடு இழந்தவர்களுக்கு நிதி ஒதுக்குங்கள் என்றே கேட்டேன்.

கடந்த ஆட்சி சர்வாதிகாரத்தை விட மோசமான ஆட்சி

கடந்த ஆட்சி காலத்தில் நாங்கள் எங்கள் நிலத்தைக் கேட்டுப் போராடினோம். காணாமற்போனவர்களை மீட்கப் போராடினோம். அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி போராடினோம். அந்த போராட்டங்களை நசுக்க முயன்றார்கள்.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உளவாளிகள் மற்றும் அவர்களின் அடியாட்கள் போராட்டம் நடத்தியவர்களை அச்சுறுத்தினார்கள். தாக்குதல் நடத்தினார்கள். பெண்கள் மீதும் தாக்குதலை தொடுத்தார்கள். வீடுகளை உடைத்தார்கள். வாகனங்களை உடைத்தார்கள். கழிவு எண்ணெய் வீசினார்கள். கற்களை வீசினார்கள்.

அப்போது வட மாகாண ஆளுநராக இருந்த ஜி.ஏ.சந்திரசிறி ஒரு போர்க்குற்றவாளி. யுத்தம் நடைபெற்ற வேளை, அவர் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதியாக இருந்தவர். அவரையே ராஜபக்ஷ ஆளுநராக நியமித்து இருந்தார்.

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறி மீண்டும் அவரையே ஆளுநராக நியமித்தார். இந்த செயல்கள் எல்லாம் ஒரு மோசமான ஆட்சியில் தான் நடந்தேறியது.

இந்த ஆட்சியை மாற்ற வேண்டும் என நாங்கள் தீர்மானிக்க முதல் தமிழ் மக்கள் தீர்மானித்து விட்டார்கள்.  அதனால் தான் நாங்கள் அறிவிக்க முதலே ராஜபக்ஷவுக்கு எதிராக தபால் மூலம் வாக்களித்து விட்டார்கள். நாங்கள் சில தந்திரோபாயமான நடவடிக்கை காரணமாகவே தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அறிவித்தோம்.

தமிழ் மக்கள் ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களித்ததன் மூலம், சிங்கள மக்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். ஆனால் இன்னமும் தமிழ் மக்கள் அதனை அனுபவிக்கவில்லை.

இங்கே இல்லாத விளையாட்டுக்காக கோல்ப் மைதானத்தை மக்களின் காணியில் அமைத்துள்ளார்கள். தமிழ் மக்களின் காணிகளில் உல்லாச விடுதிகள் தாம் உல்லாசமாக நீராட நீச்சல் தடாகங்கள் என்பவற்றை அமைத்துள்ளார்கள்.

கடந்த ஆட்சியாளர்களின் ஊழல்கள் விசாரிக்கப்பட்டு தங்களுக்கு பிரச்சினை வரபோகின்றது என்பதற்காக இந்த ஆட்சியை தகர்க்க முற்படுகின்றார்கள்.

தமிழ் மக்கள் அளித்த வாக்கினாலையே மைத்திரிபால சிறிசேனா வெற்றி பெற்றார். நாட்டில் மலையகம் உட்பட எங்கெல்லாம் தமிழ் மக்கள் வாழ்கின்றார்களோ அங்கு எல்லாம் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து அளித்த வாக்கினாலையே வெற்றி பெற்றார். இதனை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.

இராணுவ ஆக்கிரமிப்பை முற்றாக அகற்ற வேண்டும். நாளைய தினமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதியை சந்திக்க உள்ளோம். அப்போதும் நாம் இதனை வலியுறுத்துவோம்.

இரண்டு ஆட்சி காலத்திலும் தமிழ் மக்களின் தனித்துவத்தையும் தேசியத்தையும் அழிக்க முயன்ற மஹிந்த ராஜபக்ஷ இந்த தேர்தலில் வெற்றி பெற்று இருந்தால் இன்னமும் எட்டு ஆண்டுகள் ஆட்சியில் இருந்து முற்றாக அழித்து ஒழித்து இருப்பார் என்பதை தேர்தலை புறக்கணிக்க கோரியவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியாக ஒன்றிணைந்து அளித்த தீர்ப்பினாலையே இந்த மாற்றம் ஏற்பட்டது என அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X