2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய கோரி மாணவர்கள் போராட்டம்

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 06 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய கோரி யாழ்.புத்தூர் புத்தகலட்டி ஸ்ரீ விஷ்ணு வித்தியாலய மாணவர்கள் பாடசாலை வாயிலை மறித்து வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை (06) காலை ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டத்தினை அடுத்து பாடசாலைக்கு சென்ற யாழ் வலயக்கல்வி அதிகாரிகள் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுக்களை நடாத்தி, எதிர்வரும் 16ஆம் திகதி பாடசாலைக்கு தேவையான ஆசிரியர்களை நியமிப்போம் என உறுதி மொழியை வழங்கியதால் மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

அதேவேளை 16ஆம் திகதி ஆசியர்கள் நியமிக்கப்படாவிடின் 17ஆம் திகதி முதல் தாம் மீண்டும் போராட்டத்தில் குதிப்போம் என மாணவர்கள் எச்சரிக்கையும் விடுத்தனர்.

ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் பெற்றோர் ஒருவர் கருத்து தெரிவிக்கும் போது, 'இந்த பாடசாலையில் தரம் 1 முதல் தரம் 11 வரையிலான வகுப்புக்கள் நடைபெறுகின்றன. இங்குள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற போல் இந்த பாடசாலையில் 16 ஆசிரியர்கள் கடமையாற்ற வேண்டும்.

ஆனால் இங்கு 11 ஆசிரியர்களே கடமையாற்றுகின்றனர். இதில் இருவர் சங்கீத ஆசிரியர்கள், நால்வர் பகுதிநேர ஆசிரியர்கள், மிகுதி 5 பேரே அனைத்து வகுப்புக்களும் ஆசிரியர்கள்.

இதனால் க.பொ.த.சாதரணதரம் மற்றும் தரம் 8, 9, 10 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு பிரதானமான பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதனால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இது தொடர்பாக பாடசாலை அதிபர் பல தடவைகள் யாழ்.கல்வி வலயத்திற்கு தெரியப்படுத்தி ஆசியர்களை நியமிக்குமாறு கோரிய போதிலும் இதுவரை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.

இறுதியாக அதிபர் கோரிய போது விசேட தேவையுடைய ஆசிரியர்களை நியமிக்கவா? என அதிகாரிகள் கேட்டுள்ளனராம். அதற்கு அதிபர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதனை அடுத்து கடந்த 2ஆம் திகதி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என உறுதியளித்து இருந்தனர். ஆனால் இன்று வரை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. அதையடுத்தே இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டோம் என தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .