2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'அன்று மாணவர்கள், இன்று ஆசிரியர்கள்சிறைகளை நிரப்புகின்றனர்'

George   / 2016 ஜூலை 22 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

'சிறைச்சாலையை நிரப்பும் செயற்பாட்டில் மாணவர்களை ஆசிரியர்கள் மிஞ்சுகின்றார்களோ என்ற சந்தேகம் எழுகின்றது. ஆசிரியரோ மாணவரோ எவரும் சட்டத்தை கையில் எடுத்துச் செயற்படக் கூடாது'  என  யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், வியாழக்கிழமை தெரிவித்தார்.

போதைபொருன் தொடர்பான வழக்கின் பிணை மனு மீதான விசாரணை ஒன்றின் போதே நீதிபதி இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், 'பாடசாலைகள், பாடசாலை வளாகங்கள், கல்லூரி வளாகங்கள் என்பன குற்றச்செயல் புரிவதற்கு அனுமதிக்கப்பட்ட பிரதேசமல்ல. சட்டத்தைக் கையில் எடுத்துச் செயற்படுபவர்கள் சட்டவாட்சிக்கு எதிரானவர்களாகவே கருதப்படுவார்கள். மாணவர்கள் தொடர்பிலான குற்றச் செயல்களுக்கு மேல் நீதிமன்றம் கடுமையான போக்கையே எடுக்கும்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல குற்றச்செயல்களில் பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டார்கள். குற்றச்செயல்களுக்கு எதிராக இறுக்கமான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதனால், தற்சமயம் மாணவர்கள் குற்றங்கள் புரிவது குறைவடைந்துள்ளது.

ஆனால் ஆசிரியர்கள், மாணவர்கள் மீது குற்றச் செயல்கள் புரிவதாக புதிய பிரச்சினை தோன்றியுள்ளது. சிறுவர்கள், மாணவ மாணவிகள் மீது குற்றம் புரியும் சம்பவங்களை, சமாதானமாக இணங்கி வைக்க முடியாது. அக்குற்றச் செயல்கள் பற்றி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட வேண்டும்.

பாலியல் ரீதியில் துன்புறுத்தும் ஆசிரியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என தண்டனைச் சட்டக்கோவை, மேல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைக்கின்றது.

மாணவர்கள் மீது ஆசிரியர்கள் தாக்குதல் நடத்துவதை சிறுவர் பாதுகாப்புக் கட்டளைச் சட்டம் பாரதூரமான குற்றமாகக் கருதுகின்றது. இந்தக் குற்றத்துக்கு மேல் நீதிமன்றத்தினால் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க முடியும்.

ஆசிரியர் மாணவனுக்கு அடிப்பது என்பது, ஒழுக்கத்தை வலியுறுத்துவதற்கான ஒரு நடவடிக்கை என முன்னொரு காலத்தில் கருதப்பட்டது. அது மாணவர்களுக்கான ஒழுக்காற்று நடவடிக்கை என்ற அடிப்படையில் அன்று அதனை சமூகம் அங்கிகரித்திருந்தது. அது ஒரு குற்றமாக அப்போது கருதப்படவி;ல்லை.

ஆனால் இன்று ஆசிரியர் மாணவனுக்கு அடிப்பது என்பது ஒரு பாரதூரமான குற்றச்செயல் என நியதிச் சட்டங்கள் குறிப்பிட்டிருக்கின்றன. அதன் அடிப்படையில் மாணவர்களை அடிக்கின்ற ஆசிரியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு இடமளிக்கப்பட்டிருக்கின்றது. அத்தகைய குற்றங்களுக்கு சிறைத் தண்டனை வழங்க மேல் நீதிமன்றத்துக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் மட்டுமல்ல. மாணவர்களும் ஆசிரியர்கள் மீது பொய்க்குற்றம் சுமத்தி குற்றச் செயல்புரிய முடியாது. அதற்கு சட்டம் இடமளிக்கவில்லை. பாடசாலையின் கௌவரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற போர்வையில் குற்றச் செயலை மூடி மறைப்பது தண்டனைக்குரிய குற்றச்செயலாகும் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .