2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஜனாதிபதித் தேர்தலும் பொருளாதார வாக்குறுதிகளும்

அனுதினன் சுதந்திரநாதன்   / 2019 நவம்பர் 04 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் 8ஆவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் இடம்பெறுவதற்கு 12 நாள்களே உள்ளன. வரலாற்றில் அதிகூடிய ஜனாதிபதி வேட்பாளர்களைக் கொண்டதான இந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு, வேட்பாளர்கள் போல வாக்குறுதிகளும் பஞ்சமில்லாமல் இருக்கிறது. 

ஒவ்வொரு பிரசார மேடையிலும், ஜனாதிபதி வேட்பாளர்கள் கவர்ச்சிகரமான பல்வேறு வாக்குறுதிகளை வழங்குவதுடன், அவற்றை நடத்திக்காட்டுவதாக சபதம் வேறு போட்டுக்கொள்ளுகிறார்கள்.

இதைவிட, தேர்தல் வாக்குறுதி விஞ்ஞாபனம் மூலமாகவும், பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருகிறார்கள். இவை அனைத்தும் நடைமுறைக்கு சாத்தியமானவையா? பொருளாதார ரீதியில் வேட்பாளர்கள் வழங்கும் வாக்குறுதிகள் எந்தளவு தூரத்துக்கு பொருத்தமானதாக, நிறைவேற்றப்படக் கூடியதாக இருக்குமென்பதை சாதாரண மக்களாகிய நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது.

அப்போதுதான், எமது வாக்குப் பலத்தால் ஒருவரைத் தெரிவு செய்கின்றபோது, நடைமுறைக்கு சாத்தியப்படக்கூடிய பொருளாதாரக் கொள்கைகளை உறுதியாக வழங்கியவர்களை நாட்டின் நலனை கருத்திற்கொண்டு தெரிவு செய்ய முடியும்.  

 இந்தப் பத்தியில், இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான சில வேட்பாளர்களின் பிரபலமான பொருளாதாரக் கொள்கைகள், வாக்குறுதிகள் தொடர்பிலும், அவற்றின் நடைமுறை சாத்தியத்தன்மை தொடர்பிலும் பார்க்கலாம்.  

PAYE வருமான வரியை முற்றாக ஒழித்தல்

இலங்கையின் வரி வருமானத்தில் நேரடி வரி வருமான வகைக்குள் PAYE வரி வருமானமானது வகைப்படுத்தப்படுகிறது. தற்போதைய நிலையில், இலங்கையரொருவர் தொழிலாளியாகப் பணிபுரியுமிடத்தில் மாதவருமானமாக 100,000/- பெறுமிடத்தில் இந்த வரியைச் செலுத்தத் தகுதியுடைவர் ஆகிறார். இந்த நிலையில், இந்த வரி வருமானத்தை முழுமையாக ஒழிப்பதன் அவசியம் என்ன? அதன் மூலமாக இழக்கப்படும் வரி வருமானத்தை, இலங்கை அரசு எவ்வாறு ஈடு செய்யப்போகிறது ?  

 குறிப்பாக, இலங்கையில் PAYE வரி வருமானமானது பெரும்பாலும் உயர்வருமான மட்டத்தை நோக்கி முன்னேறி வருபவர்களிடம் அறவிடும் வரி வருமானமாகத்தான் இருக்கிறது. இதனை ஒழிப்பதன் மூலமாக, நாட்டின் அடிப்படைத் தேவைகளையுடைய மக்களுக்கு எவ்விதமான நன்மையும் விளையப்போவதில்லை.

மாறாக, இந்த வரி ஒழிப்பின் மூலமாக ஏற்படும் அரச வருமான இழப்பைச் சீர்செய்ய பொருள்கள், சேவைகள் மீது அறவிடப்படும் வரி அதிகரிக்கப்படும். இதன்மூலமாக, இந்த PAYE வரியைச் செலுத்தாத அப்பாவிப் பொதுமக்களும் மறைமுகமாக இந்த வரியைச் செலுத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலையே ஏற்படும்.  

இலங்கையின் அரச வருமானத்தில் PAYE வரி வருமானமானது 3-5% பங்களிப்பை வழங்கி வருகின்றது. இதனை நிறுத்துவதாக கவர்ச்சிகரமான வாக்குறுதி வழங்குவதன் மூலமாக, குறித்த ஜனாதிபதி வேட்பாளர் சாதாரண மக்களின் வாழ்க்கைச் செலவீனத்தை அதிகரிக்க முனைகிறாரே தவிர, தீர்வொன்றை வழங்குவதாக இல்லை. எனவே, பொதுப்படையாகப் பார்க்கின்றபோது, வரிச்சுமை குறைவதாகத் தெரிந்தாலும், நம் கண்ணுக்குத்தெரியாத மறைமுக வரியின் தாக்கம்  அதிகரிக்கப் போகின்றது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.   

இதேவேளை, மற்றுமொரு ஜனாதிபதி வேட்பாளர் தனது வாக்குறுதிகளில், PAYE வரி வருமானத்தின் அதிகுறைந்த வரி எல்லையான மாதாந்தம் 100,000/- என்கிற எல்லையை 150,000/- ஆக அதிகரிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். இது, நியாயமானதும், அடையப்படக் கூடியதுமான இலக்கு. ஆனாலும், குறித்த மாற்றத்தால் ஏற்படக்கூடிய வருமான இழப்பை எவ்வாறு சீர்செய்யப் போகின்றேன் என்பதையும் குறித்த வேட்பாளர் விளக்கியிருப்பின், பொதுமக்களுக்கு அதுதொடர்பிலான மிகப்பெரும் விழிப்புணர்வு ஏற்படக் கூடியதாக இருந்திருக்கும்.  

பெறுமதி சேர் வரியை (VAT) குறைத்தல்

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில், குறித்த வேட்பாளர் ஒருவரால் முதலில் பெறுமதி சேர் வரி முற்றாக ஒழிக்கப்படுமென மேடைகளில் கூறப்பட்டாலும், அவரது வாக்குறுதிப் புத்தகத்தில் அது 15%த்திலிருந்து 8%ஆகக் குறைக்கப்படுமெனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தக் குறைப்பு வாக்குறுதி கூட எந்தளவுக்கு சாத்தியமானதென பார்க்கலாம்.  

 தற்போதைய பெறுமதி சேர் வரி விகிதம் 15% ஆக இருக்கின்றது. இதனை 8%ஆகக் குறைப்பதென்பது வரவேற்கத்தக்கதாகும். இதன்மூலமாக, இலங்கையின் சிறு வியாபாரங்கள் வளர்ச்சியடைய உந்துதலை வழங்கக் கூடியதாக இருப்பதுடன், இந்த வரியைப் பெரும்பாலும் செலுத்துகின்ற இறுதிநிலை வாடிக்கையாளர்களான சாதாரண பொதுமக்களுக்கும் விடிவுகாலம் ஏற்படக்கூடும்.

ஆனால், இந்த வரிக்குறைப்பின் காரணமாக, இலங்கை அரசு இதுவரை பெற்றுவந்த அரச வருமானத்துக்கு என்ன ஆகப்போகிறது? என்பதையோ, அதனை எப்படி குறித்த ஜனாதிபதி வேட்பாளர் ஈடுசெய்யப்போகிறார் என்பதனையோ வெளிப்படுத்தாதநிலை, மீளவும் அனைவரையும் குழப்பத்தில் வைப்பதாகவே இருக்கிறது.  

குறிப்பாக, இலங்கையின் பெறுமதிசேர் வரியினை 15%த்திலிருந்து 8%ஆக குறைக்கின்றபோது, இலங்கையின் அரச வரி வருமானத்தில் 425 பில்லியன் வருமான இழப்பு ஏற்படுகின்றது. 

இதுவொன்றும், மிகச்சிறிய வருமான இழப்பல்ல. ஏற்கெனவே, நாடு கடனாளியாக, பெற்றுக்கொண்ட கடனை மீளசெலுத்தத் தடுமாறி வருகின்ற நிலையில், இந்த வருமான இழப்பும் இணைந்து கொள்ளுகின்றபோது இலங்கையின் நிலையும், அதில் வாழ்கின்ற நமது நிலையும் எவ்வளவு மோசமானதாக இருக்கப்போகின்றது என எண்ணிப் பார்த்துக்கொள்ளுங்கள். 

இதனால்தான், இந்த வரிக்குறைப்பும், அதற்கான மாற்றுத் திட்டமில்லாத நிலையும், சாத்தியமற்றதாக இருக்கப்போகிறது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.  

இதுவே, மறுபுறத்திலுள்ள வேட்பாளர்களின் வாக்குறுதியைப் பார்க்கின்றபோது, சற்றேனும் நடைமுறைக்குச் சாத்தியமான மிகப்பெரும் கவர்ச்சிகரமற்றதும் ஆனால் நடத்திக் காட்டக்கூடியதுமான தேர்தல் வாக்குறுதியாகவும் இருக்கிறது.

இந்த வாக்குறுதியில், இலங்கையில் அறவிடப்படும் பெறுமதிசேர் வரி (VAT), நாட்டைக் கட்டியெழுப்பும் வரி (NBT) ஆகியவை ஒன்றிணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, 15% VAT வரியும், 2-3%ஆகவுள்ள NBT வரியும் ஒன்றாக்கப்பட்டு, 15% மட்டுமே அறவிடப்படுமென குறிப்பிடப்படுவதுடன், இரண்டு ஆண்டுகளின் பின்பு அதனை 12.5%ஆக குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையில், இரண்டு வரிகளை ஒன்றிணைப்பதன் மூலமாக, இலங்கைக்கு வருமான இழப்பு ஏற்படுகின்றது. ஆனால், இந்த இழப்பானது இரண்டு வரிகளுக்காக இலங்கை கொண்டிருக்கும் வினைத்திறனற்ற அரச செயல்பாடுகளையும், ஆவண செயல்பாடுகளையும் குறைக்கின்றது. 

இந்தச் செலவீன குறைப்பின் மூலமாக, இந்த இழப்பைச் சீர்செய்ய முடியும். வணிகங்களுக்கும் சரி, மக்களுக்கும் சரி வரிகளின் அளவு குறைவதால், ஆவணப்படுத்தலும் , வரி செலுத்துதலும் இலகுவாக்கப்படுகிறது. இதன்மூலமாக, ஒட்டுமொத்த சமூகத்தின் வினைத்திறனையும் அதிகரித்துகொள்ளவும் முடிகிறது. இது நடைமுறைக்கு பொருத்தமானதாக இருப்பதுடன், சாத்தியப்படக்கூடிய வாக்குறுதியாகவும் இருக்கிறது.  

Sanitary Napkin மீதான வரிவிலக்கு

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் பங்குகொள்ளும் வேட்பாளர்களில் பலர் பேசத்தவறிய, பேசத்தயங்கிய விடயமொன்று அரசியல் விளம்பரத்துக்காகவோ அல்லது நல்லெண்ண அடிப்படையிலோ பொதுவெளியில் பேசப்பட ஆரம்பித்திருக்கிறது. அது, எங்கள் வீடுகளிலுள்ள ஒவ்வொரு பெண்களின் உரிமை தொடர்பானதும், எங்கள் வருமானத்தை மறைமுகமாக இதுவரைகாலமும் ஆட்சியிலுள்ள அரசுகள் கபளீரம் செய்துவந்தது தொடர்பானதாகும். 

குறிப்பாக, 2018ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம்வரை, இலங்கையில் பெண்கள் பயன்படுத்தும் Sanitary Napkinகளுக்கு 101.2% ஆன வரி விதிக்கப்பட்டு வந்திருந்தது. குறித்த காலத்தில் சமூக வலைத்தளங்கள் ஊடாக எழுத்த சலசலப்பின் காரணமாக அது 61%ஆகக் குறைக்கப்பட்டது. 

கிட்டத்தட்ட 35%க்கும் அதிகமான வரிக்குறைப்பாக இருந்தாலும், இன்னமும் 60%மான வரியை நாம் செலுத்திக்கொண்டிருக்கும் துர்ப்பாக்கியநிலைதான் இருக்கிறது. ஆடம்பரக் கார்களுக்கும், அத்தியாவசியமான Sanitary Napkinகளுக்கும் இலங்கையில் ஒரேமாதிரியான வரிவிதிப்பாக இருக்கின்றமைதான் கேலிக்குரியதாக இருக்கிறது. இதில் வரிவிலக்கை வழங்குவதன் மூலமாக, கல்வி பெறுகின்ற பெண்கள் வீதத்தை அதிகரிக்க முடிவதுடன், சமூகத்துக்கு பங்களிப்பு வழங்கும் பெண்கள் சதவீதத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் அதிகரிக்க கூடியதாக இருக்கும். 

தேர்தல் மேடைகளில் இதுதொடர்பில் முழுங்குகின்ற வேட்பாளரும் சரி, இவற்றைப் பேசத் தயங்கும் வேட்பாளர்களும் சரி சமூகத்துக்குத் தேவையான, மக்களுக்கு நலன்தரக்கூடிய விடயங்களைப் பேசுவதுடன், நடைமுறைப்படுத்தவும் முன்வருதல் அவசியமாகிறது.  

எனவே, தேர்தல் சார்ந்த வாக்குறுதிகளை ஜனாதிபதி வேட்பாளர்கள் வழங்குகின்றபோது, அவை தொடர்பில் அவதானமாக இருங்கள். இத்தகைய கவர்ச்சிகரமான வாக்குறுதிகளின் பின்னால், ஒழிந்திருக்கும் அபாயத்தைத் தேடி அறிந்து அது தொடர்பிலான விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். இதன்மூலமாக, உங்கள் ஜனாதிபதித் தெரிவில் 
சரியானவரைத் தெரிவு செய்ய முடிவதுடன், நாட்டின் பொருளாதாரத்துக்கும் காத்திரமான பங்களிப்பை வழங்க முடியும்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X