2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தின் மீள் அறிமுகத்தில் கூகைக்கட்டு தடுப்பு வக்சீன் அறிமுகம்

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 14 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் கூகைக்கட்டு தடுப்பு வக்சீன் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.

இந்த புதிய வக்சீன் வகையை அறிமுகம் செய்யும் நிகழ்வில் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பிரதம வைத்திய நிபுணர் வைத்தியர் பபா பலிஹவதன கருத்து தெரிவிக்கையில்...

'சுமார் 3 வருட காலத்தின் பின்னர் தொற்றுநோய் தடுப்பு பிரிவினால் அறிமுகப்படுத்தப்படும் புதிய கூகைக்கட்டு தடுப்பு வக்சீனானது கடந்த ஜனவரி மாதம் முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள தேசிய நோய்த்தடுப்பு திட்டத்துக்கு மேலும் வலுச்சேர்ப்பதாக அமையும் என்பதில் ஐயமில்லை' என்றார்.

சுகாதார அமைச்சும் யுனிசெவ் அமைப்பும் இணைந்து நோய்த்தடுப்புகளை உரிய காலத்தில் வழங்குவதன் முக்கியத்துவம் குறித்து தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு செயற்றிட்டத்தை கடந்த ஜனவரி மாதம் முதல் முன்னெடுத்து வருகிறது. இந்த திட்டத்துக்கு 'உறங்கிக் கொண்டிருக்கும் பேய்களை எழுப்பாதீர்கள்' என பெயரிடப்பட்டிருந்தது. போலியோ, சயரோகம், தொண்டைக்கரப்பன், குக்கல், ஏற்புவலி, ஹெபடைடிஸ் பீ, ஹீமோபிலஸ் இன்புளுவென்ஸா பீ (ஹிபீ) நோய், சின்னம்மை, மூளைக்காய்ச்சல், ருபெல்லா, கூகைக்கட்டு போன்ற கொடிய நோய்களை இலங்கையில் இல்லாதொழிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு உந்துசக்தியாக இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பதில் வைத்திய நிபுணர் வைத்தியர் சுதத் பீரிஸ் கருத்து தெரிவிக்கையில் 'தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தின் மீள அறிமுகப்படுத்தும் செயற்பாடுகள் இந்த ஆண்டு மிகவும் துரித கதியில் நேர்த்தியான வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. யுனிசெவ் அமைப்பின் ஆதரவுடன், நாம் ஊடகங்கள், வைத்திய நிபுணர்கள், பெற்றோர் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோரை இலக்காக கொண்டு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த செயற்பாடுகளின் காரணமாக இலங்கையின் தேசிய நோய்த்தடுப்பு திட்டமானது மீண்டும் உலகளாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு திட்டமாக தெரிவாகும் நிலைக்கு முன்னேற்றம் கண்டு வருகிறது' என்றார்.

தொற்றுநோய் தடுப்பு பிரிவின் உதவி வைத்திய நிபுணர் வைத்தியர் ஆனந்த அமரசிங்க கருத்து தெரிவிக்கையில்...

'இந்தியா மற்றும் ஈரான் போன்ற 11 ஆசிய பிராந்திய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இலங்கையில் நோய்த்தடுப்பு தொடர்பான பயிற்சி நெறியில் கலந்து கொண்டு பயிற்சிகளை பெற்றிருந்தனர். சர்வதேச ரீதியில் வக்சீன் மூலம் தவிர்க்கப்படக்கூடிய கொடிய நோய்கள் குறித்து விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நெறிகளை வழங்குவதில் நாம் பெருமையடைகிறோம்' என்றார்.

ஜனவரி மாதம் 24ஆம் திகதி சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் ஆரம்பமான தேசிய நோய்த்தடுப்பு திட்டமானது, விளம்பரங்கள், பொது உறவுகள், ஊடக உறவுகள், பாடசாலைமட்ட போட்டி நிகழ்வுகள் மற்றும் இதர அறிவுறுத்தல்கள் போன்ற பல வழிகளில் பொதுமக்கள் மத்தியில் நோய்த்தடுப்புகள் வழங்கப்படுவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன் விளைவாக கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நோய்த்தடுப்புகளை பெற்றுக்கொண்ட நபர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பும் காணப்பட்டுள்ளது.

நோய்த்தடுப்பு வழங்கலானது உயிர் காவு நோய்களுக்கெதிராக வழங்கப்படும் நோய் எதிர்ப்பு மருந்து என்பதுடன், உலகளாவிய ரீதியில் வருடாந்தம் சுமார் 2 மில்லியன் உயிரிழப்புகளை தவிர்க்க உதவுகிறது.

தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஒவ்வொரு நோய்த்தடுப்பு மருந்தினதும் தரம் மற்றும் பாதுகாப்பு உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெற்றுள்ளது.

நோய்த்தடுப்பு பற்றி:

  • வக்சீன் வழங்கலின் மூலம் தவிர்க்கப்படக்கூடிய நோய்களில் 99 வீதம் நோய்த்தடுப்புகள் வழங்கப்படுவதன் மூலம் தவிர்க்கப்படுகிறது.
  • உலகளாவிய ரீதியில் வக்சீன்களின் மூலம் தவிர்க்கப்படக்கூடிய நோய்களினால் சுமார் 3 மில்லியன் சிறுவர்கள் இறக்கின்றனர். 200,000 பேர் வரை அங்கவீனமடைகின்றனர். 150,000 வரை பார்வையை இழக்கின்றனர். இலங்கையில் வெற்றிகரமான நோய்த்தடுப்பு திட்டத்தின் மூலம் இந்நோய்களின் தாக்கம் முற்றாக தவிர்க்கப்பட்டுள்ளது.
  • தட்டம்மை நோய் மூலம் 1.6 மில்லியன் சிறுவர்கள் வருடாந்தம் உயிரிழக்கின்றனர். இதற்கு எதிராக வக்சீன் வழங்கப்படுவதன் மூலம் சிறுவர் இறப்பு வீதத்தை 30 வீதத்தினால் குறைக்க முடியும்.
  • நோய்த்தடுப்பு வழங்கும் வீதம் அதிகரிப்பு, சுத்தமான நீர் மற்றும் சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட்டமை மற்றும் சிறந்த சுகாதார நல சேவைகளின் மூலம் வருடாந்தம் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 10 மில்லியனை விட குறைந்துள்ளது. (உலக சுகாதார அமைப்பு)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .