2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

எரிபொருள் வழங்குமாறு கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Freelancer   / 2022 ஜூன் 19 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

எரிபொருள் வழங்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்டத்தில் கா.பொ.த.சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் முன்னெடுத்த பணி பகிஸ்கரிப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் வழங்கிய உறுதிமொழிகளையடுத்து கைவிடப்பட்டது.

இன்று காலை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரிக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்ட பேரணியானது ஆரம்பமானது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் பொன்னுத்துரை உதயரூபன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், க.பொ.த சாதாரண பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபட்ட சுமார் 1200 ஆசிரியர்கள் இன்றையதினம் கலந்துகொண்டார்கள்.

மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தர தேசிய பாடசாலை, புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை, புனித மிக்கேல் கல்லூரி போன்ற பரீட்சை மதிப்பீட்டு நிலையங்களில் கடமையாற்றும் ஆசிரியர்களே ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, எரிபொருள் வழங்குவதில் இலகுவான பொறிமுறையை வழங்கவேண்டுமென கோரிக்கையை முன்வைத்தார்கள்.

"பரீட்சை ஆணையாளர் நாயகத்தின் பணிப்புரையயை நடமுறைப்படுத்தி, பரீட்சை மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களின் மனநிலையை குழப்பி கல்வியை சீரழிக்காதே, பரீட்சை மதிப்பீட்டாளர்களுக்கு உடன் எரிபொருள் வழங்கு" என சுலோக அட்டையை ஏந்தியவாறு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இந்த பேரணியானது மட்டக்களப்பு நகரூடாக சென்று மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தினை சென்றடைந்து அங்கு பொலிஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தினை முற்றாக முடக்கிய போராட்டக்காரர்கள் அங்கு தமக்கான எரிபொருளை கோரி போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இதன்போது தமக்கு அந்த அதிகாரம் இல்லையெனவும், தமது சேவைக்கு இடமளிக்குமாறும் அவ்வாறு இல்லாவிட்டால் பொலிஸாரினால் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தவேண்டிய நிலையேற்படும் என மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்ததை தொடர்ந்து, ஆர்ப்பாட்ட பேரணியானது மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் சென்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்ட பேரணி சென்ற நிலையில், அங்கு வாயிற்கதவுகள் பூட்டப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில், ஐந்து பேர் மாவட்ட அரசாங்க அதிபருடன் பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில், பரீட்சை மதீப்பீட்டு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஐந்து லீட்டர் பெற்றோல் வழங்குவது அல்லது போக்குவரத்து ஒழுங்குகளை செய்து வழங்குவது அல்லது பரீட்சை ஆணையாளருடன் கலந்துரையாடி தற்காலிகமாக மதீப்பீட்டு நடவடிக்கைகளை ஒத்திவைப்பது என தீர்மானிக்கப்பட்டதாகவும், இதனை தற்காலிமாக ஏற்றுக்கொண்டு போராட்டத்தினை இடைநிறுத்தி தமது கடமைகளில் ஈடுபடுவதாகவும்,  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் பொன்னுத்துரை உதயரூபன் தெரிவித்தார்.

மேலும், பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் பரீட்சை மதிப்பீட்டடாளர்களுக்கு வழங்கப்பட்ட கடிதத்தை எந்தவொரு எரிபொருள் நிலைய பொறுப்பாளர்களும், பணியில் ஈடுபட்டுள்ள பொலிஸாரும் முன்னுரிமை வழங்கவில்லை என பரீட்சை மதிப்பீட்டு ஆசிரியர்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X