2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மணல் அகழ்வு அனுமதிக்கு விவசாயிகள் எதிர்ப்பு

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 05 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் புதிதாக மணல் அகழ்வை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குவதற்கு இடங்களை பார்வையிடுவதற்கு, இன்று (05) அதிகாரிகள் வருகை தந்தனர்.

இதன்போது ஒன்றுகூடிய பிரதேச விவசாயிகள், மணல் அகழ்வினால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் மேலும் மணல் அகழ்வுக்கு இடமளிக்க வேண்டாம் என்றும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

கிரான் பிரசே செயலாளர் பிரிவில் மண் அகழ்வை மேற்கொள்வதற்காக அனுமதி கோரி, இரண்டு விண்ணப்பங்கள் பிரதேச செயலகத்துக்கு கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில், குறித்த இடங்களை பார்வையிடுவதற்காக திணைக்களங்களுடன் இணைந்து பிரதேச செயலக அதிகாரிகளும் இன்று கள விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது, வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தில் பட்டியடி வகுலாவெல, ஆனமடங்கி, தவனை, பிரம்படித்தீவு, நூறு ஏக்கர், மக்குரானை மற்றும் பள்ளிமடு போன்ற விவசாய கண்டங்களைச் சேர்ந்த 15,000 ஏக்கருக்கும் அதிகமான விவசாய காணிகள் மணல் அகழ்வினால் பாதிக்கப்படுவதாக அங்கு வருகை தந்த அதிகாரிகளிடம், விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.

மீண்டும் இப்பகுதியில் மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்கப்படும் பட்சத்தில், விவசாய நிலங்கள் மேலும் பாதிக்கப்படும் என்பதனால் இப்பகுதியில் மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்றும் இப்பகுதியில் அனுமதிப்பத்திரம் இல்லாமல் மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும் அதனை இடைநிறுத்தித் தருமாரும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

விண்ணப்பதாரிகள் தாங்கள் அடையாளப்படுத்திய இடங்கள் நீர்ப்பாசனத் திட்டத்துக்குள் வருவதால், இது தொடர்பாக நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் தங்களது அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என்று, கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .