2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

காலைக் கடன்களை கழிப்பது பயணக் கட்டுப்பாட்டில் தவறா?

Editorial   / 2021 ஜூன் 08 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

காட்டுக்குள் ஓர் ஒதுக்குப்புறமாக சென்று, காலை கடனை முடித்து விட்டு, வீடுக்குத் திரும்பிக்கொண்டிருந்தவர் மீது இராணுவத்தினர், தாக்குதல் நடத்தியுள்ள சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. அவர் மீது கேபிளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கப்பன்புலவு பகுதியை சேர்ந்த ஒருவர் மீதே நேற்றைய (7) தினம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில், தாக்குதலுக்கு உள்ளானவர் கருத்துரைக்கையில்,

உடுவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புன்னாலைக்கட்டுவன், வடக்கு கப்பன் புலவு பகுதியில் வசிக்கும் சுமார் 10 குடும்பங்கள் மலசல கூட வசதிகள் அற்ற நிலையில் வசித்து வருகின்றோம்.

“இது குறித்து பலதடவைகள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். பல நன்கொடையாளர்கள் , அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றிடமும் மலசல கூடங்களை கட்டி தருமாறு கோரியுள்ளோம். ஆனால், இதுவரை எமக்கு எவரும் கட்டி தர நடவடிக்கை எடுக்கவில்லை” என்றார்.

இந்நிலையில், அப்பகுதியில் வசிக்கும் சுமார் 10 குடும்பங்களும் வீடுகளுக்கு சற்று தொலைவில் உள்ள பனங்காணிக்கு சென்றே காலை கடன்களை முடிக்கிறோம் என்று தெரிவித்த அவர், இதனால்  பெண்கள் சிறுவர்கள் என அனைவரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வாழ்ந்து வருகின்றோம். இரவு நேரங்களில் இயற்கை உபாதைகளுக்கு முகம் கொடுத்தால் அந்த காணிக்கு செல்வதற்கு அச்சம் காரணமாக பலரும் சிரமங்களை எதிர்கொண்டு உள்ளனர் என்றார்.

இதேவேளை, காலைக்கடன்களை அதிகாலையில் முடித்து விட்டு திரும்ப வேண்டிய நிலையில் உள்ளோம். சற்று வெளிச்சம் வந்தாலும் வீதிகளில் மக்கள் நடமாட்டம் காணப்படும். அதனால் காலை கடனை முடிக்க முடியாத நிலைக்கு உள்ளாவோம் என்றார்.

வீடுகளுக்கு மலசல கூடங்கள் இல்லாதமையால் , பல சிரமங்களுடனேயே வாழ்ந்து வருகின்றோம். 

இந்த நிலையில் நேற்றைய தினம் காலை கடனை முடித்து விட்டு வீடு திரும்பும் போது , வீட்டுக்கு அருகில் இராணுவத்தினர் என்னை வழிமறித்து பயணத்தடை அமுலில் உள்ள நேரம் எங்கே சென்று வருகின்றாய் என விசாரித்தனர். 

அதன் போது நான் ,காலைக் கடனை முடித்து விட்டு வருகிறேன் என அவர்களுக்கு விளக்கம் சொல்ல முற்பட்ட போது எனக்கு பின்னால் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் கேபிள் கம்பியால், தாக்கி "ஓடு, ஓடு " என விரட்டினார் என தெரிவித்தார்.

அத்துடன், பயணக்கட்டுப்பாடுகள் அமுல் உள்ளன. ஆனால், அக்காலப்பகுதியில் காலைக்கடனை கழிப்பது தவறா? எனவும் அவர், எங்களிடம் வினவினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .