2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

இரைப்பைக்கும் வாதம் வரலாம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 30 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

திட உணவானது, சாப்பிட்ட நான்கு மணி நேரத்திலும் திரவ உணவு, ஒரு மணி நேரத்துக்குள்ளும் சமிபாடடைய வேண்டும். இதுதான் இயல்பு. இரைப்பையின் உள் இயக்கம் தடைப்பட்டு, சாப்பிட்ட உணவு 12 மணி நேரத்துக்கும் மேலாகச் சமிபாடடையாமல் இரைப்பையிலேயே தங்கிவிடுவதுதான், ‘கேஸ்ட்ரோ பெரிசிஸ்’ என்ற இரைப்பை வாதமாகும்.  

சாப்பிட்ட உணவு சமிபாடு அடையாமல்  அப்படியே இருக்க வேண்டும் என்பதில்லை. சாப்பிட்ட உணவில் 10 சதவீதம், சாப்பிட்ட 10 மணி நேரத்துக்கும் மேல் சமிபாடு அடையாமல் இருந்தாலும், பிரச்சினை தான். இரைப்பை வாதத்துக்கென்று தனியான அறிகுறிகள் கிடையாது. வாயுத் தொல்லை, சமிபாடின்மை, குடற்புண் போன்றவற்றுக்கான அறிகுறிகள் போலவே, இரைப்பை வாதத்துக்கும் இருக்கும்.

உணவு சாப்பிட்டு பல மணி நேரம் கடந்து வாந்தி எடுக்கும்போது, உணவு சமிபாடு அடையாமல் அப்படியே வெளியில் வரும். சிலருக்கு, வயிற்று வலி, வாந்தி வரும் உணர்வு, சாப்பிடத் தொடங்கியதும் வயிறு அடைத்துக் கொள்ளும் உணர்வு ஏற்படலாம். நீண்ட காலமாக சர்க்கரைக் கோளாறு இருந்தால், இரைப்பையும் பாதிக்கப்படலாம்.

சர்க்கரைக் கோளாறைத் தவிர, இரைப்பையின் உள் நரம்பு பாதிப்பது, வைரஸ் தொற்று, நீண்ட நாள்களாகச் சாப்பிடும் வலி நிவாரணிகள், நரம்புக் கோளாறுகள் போன்ற பல காரணங்களாலும், இரைப்பையின் தசைகள் செயலிழந்து, உள் இயக்கம் முற்றிலும் தடைபடுவதாலேயே, இந்தப் பிரச்சினை வருகிறது.

சமிபாட்டுக்கான மாத்திரை சாப்பிட்டும் பலனில்லை என்றால், குடல், இரைப்பை மருத்துவரிடம் ஆலோசனைப்பெற வேண்டும். குடலில் அடைப்பு இருந்தாலும், உணவு சமிபாடடையாது. ஆறு மணி நேரம் சாப்பிடாமல் இருந்து, வெறும் வயிற்றில் ‘எண்டோஸ்கோபி’ செய்து, அடைப்பு இல்லை ஆனாலும், இரவு சாப்பிட்ட உணவு சமிபாடு அடையாமல் இருந்தால், இரைப்பை வாதமாக இருக்கலாம்.

இப்பிரச்சினை இருந்தால், வழக்கத்தை விடவும் மிக மெதுவாக, சிறுகுடலுக்கு உணவு செல்லும். இதை உறுதி செய்வதற்கு, பிரத்தியேகமாக, ‘சின்டி’ ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும். இதற்கென்று உள்ள கருவியின் உதவியுடன் உணவு செலுத்தி, 15 நிமிடங்களுக்கு ஒருமுறை, கேமரா வழியாக எவ்வளவு நேரத்தில் உணவு சிறு குடலுக்குச் செல்கிறது என்று கண்காணிக்கப்படும்.  வழக்கமாக, நான்கு மணி நேரத்துக்குள்  உணவு, சிறுகுடலுக்குச் சென்றுவிடும்.

குறிப்பிட்ட நேரத்துக்குப் பின், குறைந்தது 10 சதவீத உணவு வயிற்றிலேயே தங்கிவிட்டாலே, இரைப்பை வாதம் என்று முடிவு செய்யலாம். இதைச் சரிசெய்ய, சர்க்கரையைக் கட்டுக்குள் வைப்பது, ஊட்டச்சத்து மிகுந்த திரவ உணவைத் தருவது என்று ஆரம்பத்தில் செய்யப்படும். இதில் பலன் இல்லையென்றால், இரண்டாவது கட்டத்தில், மருந்து, மாத்திரைகள் கொடுக்கப்படும். இதிலும் சரியாகவில்லை என்றால், இரைப்பையில் இருந்து சிறுகுடலுக்குச் செல்லும் பாதையை விரிவுபடுத்தும் அறுவை சிகிச்சை செய்யப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .