2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தொற்று நோய்களாக மாறிவரும் தொற்றா நோய்கள் பகுதி - 03

Princiya Dixci   / 2015 நவம்பர் 05 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொற்றா நோய்களின் பொதுக் காரணியாகவும் அடிமைப்படுத்தும் அடிப்படை ஆபத்துக் காரணிகளில் முதல் நிலை முக்கியத்துவம் பெறுவதுமான புகைத்தல் மற்றும் அதனைத் தடுத்தல் பற்றி இந்த வாரப்பகுதி ஆராயவிருக்கிறது.

மனவழுத்தம் மற்றும் மனச்சோர்வு குறைதல், பதற்றம் மற்றும் உடலலுப்பு மறைதல் என்பன புகைபிடித்தல் பழக்கமுடைய படித்தவர்களும் பாமரர்களும் குறிப்பிடுகின்ற பொதுவான மடைமைத்தன நியாயப்படுத்தல்கள் ஆகும்.

இருந்தபோதிலும், அவை புகைத்தலால் அன்றி புகைத்தற் பொருட்களில் காணப்படும் நிக்கொட்டின் (Nicotine) எனப்படும் புகையிலை நஞ்சு, மனித உடற் செயற்பாடுகளின் ஒழுங்குபடுத்தல் மையமான மூளையை, தன் கட்டுப்பாட்டுக்குள் அடக்கி வைத்திருப்பதன் விளைவு என்பதை பலர் அறிந்தும் அறியாமலும் இருக்கின்றனர்.

புகைபிடித்தலை முற்றுமுழுதாக தவிர்க்க வேண்டியதன் நியாயங்கள்:

* உலகில் புகைபிடித்தலால் ஒவ்வொரு 8 வினாடிக்கும் ஒருவர் மரணத்தைத் தழுவிக் கொள்கின்றார். இலங்கையில் புகைத்தலால் ஒவ்வொரு நாளும் அண்ணளவாக 60 பேர் வரையில் இறக்கின்றனர்.

* இலங்கையில் புற்றுநோயாளர்களில் 60 வீதமானவர்கள் புகைப்பவர்கள் என அடையாளப் படுத்தப்பட்டுள்ளனர்.

* இலங்கையில் 39% ஆண்களும், 2.6%  பெண்களும் புகைபிடிக்கிறார்கள். புகைப்பிடிப்பவரின் ஆயுட்காலம், புகைபிடித்தல் பழக்கம் இல்லாத ஒருவருடன் ஒப்பிடுகையில் சராசரியாக 10 வருடங்கள் குறைவானதாகும்.

* புகைப் பிடித்தலினால் இறப்பவர்களில் 20மூ மானோர் புகைபிடித்தல் பழக்கமற்றவர்கள், இவர்கள் பிறவினைப் புகையினால் (புகை பிடிப்பவர்கள் வெளிவிடும் புகை) அநியாய மரணத்தை அணைத்துக் கொள்கின்றனர்.

* புகை பிடித்தலினால் பாதிக்கப்படுவோரில் 80%  மானவர்கள்  இலங்கை போன்ற குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுடைய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

* மூன்றாண்டுகளுக்குள், 13 - 15 வயதுக்கு இடைப்பட்ட  பாடசாலை மாணவர்களில், சிகரெட்டை பயன்படுத்துவோர் தொகை 1.2%  மாகவும் சிகரெட் அல்லாத புகையிலைப் பொருள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 1.6%  மாகவும் அதிகரித்துள்ளது.

* பாடசாலை மாணவர்களில், சிகரெட் பயன்படுத்துவோரில் 11.9%  ஆண்களும் 2%  பெண்களும் உள்ளனர். மேலும் 14.6% ஆண்களும் 0.6% பெண்களும் சிகரெட் அல்லாத புகையிலைப் பொருட்களை பயன்படுத்துகின்றனர்.

* 4.2%  மருத்துவ மாணவர்களும் 1% தாதிய மாணவர்களும் சிகரெட் பயன்படுத்தும் அதேவேளை,  3.9% மருத்துவ மாணவர்களும் 2.8% தாதிய மாணவர்களும் ஏனைய புகையிலைப் பொருட்களையும் பயன்படுத்துகின்றனர்.

* 60% இற்கும் மேற்பட்ட பாடசாலை மற்றும் சுகாதார தொழிற்துறை மாணவர்கள் பொது இடங்களில் பிறவினை புகைத்தல் தொல்லைக்கு உள்ளாகியுள்ளனர்.

* புகை பிடிக்கின்ற பாடசாலை மற்றும் சுகாதார தொழிற்துறை மாணவர்களில், 70மூ இற்கும் மேற்பட்டோர் புகைத்தலை நிறுத்துவதற்கு இணங்கியுள்ளனர்.

* அநேகமான ஆசிரியர்கள், மாணவர்களின் புகைத்தல் நிறுத்தம் பற்றிய போதிய பயிற்சியற்றவர்களாக இருக்கின்றனர்.

* இன்னும் அதிகளவு மாணவர்கள் நேரடி மற்றும் நேரடியற்ற, புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

* பிறவினைப் புகை பிடித்தலால் மிக இலகுவாக, வளர்ந்தவர்கள் சுவாசப்பை, சதையி மற்றும் மார்பு புற்று நோய்களுக்கு ஆளாகின்ற அதேவேளை, சிறுவர்கள் பற்சொத்தை, நடுக்காதுத் தொற்று, ஆஸ்துமா, பின் தங்கிய உடல் விருத்தி மற்றும் கற்றல் குறைபாடுகள் போன்றவற்றுக்கு முகங்கொடுக்கின்றனர்.

புகைபிடித்தலை நிறுத்துவதனால் விளையும் ஆரோக்கிய நலன்கள்:

* புகைப் பிடித்தலினால் ஏற்படும் இரத்த அழுத்த உயர்வு மற்றும் இதயத் துடிப்பு அதிகரிப்பு என்பன வெறும் 20 நிமிடங்களில் குறைவடையும்.

* புகைப் பிடித்தலை நிறுத்திய 12மணி நேரத்திற்குள், குருதியோடு கலந்திருக்கும் நச்சு வாயுவான காபன் மொனொக்சைட்டு (CO) குறைவடையும்.

* 48மணி நேரங்களுக்குள் நரம்புகளின் உணர்திறன், மண நுகர்ச்சி மற்றும் சுவையரும்புகளின் செயற்றிறன்கள் புத்துயிர்ப்பு பெறும்.

* குருதிச் சுற்றோட்டமும் சுவாசப்பை தொழிற்பாடுகளும் புகைபிடித்தலை தவிர்த்த 3 மாதங்களுக்குள் கணிசமான முன்னேற்றமடையும்.

* புகைத்தலினால் விளையும் இருமல் மற்றும் சுவாசத் தடங்கல்கள் என்பன வெறும் 9 மாதங்களுக்குள் குறைந்துவிடும்.

* இதய நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்து ஒரு வருடத்துக்குள் 50 வீதத்தால் குறைவடையும்.

* பாரிச வாதத்துக்கான ஆபத்து முற்று முழுதாக 5 வருடங்களுக்குள் குறைந்துவிடும்.

* வாய், தொண்டை, களம் மற்றும் கருப்பை புற்று நோய்களுக்கான அபாயம் 5 வருடங்களுக்குள் முற்று முழுதாக குறைந்துவிடும்.

* 15 வருடங்களுக்குள் நாட்பட்ட சுவாச அடைப்பு நோய் மற்றும் இருதய நோய்களுக்கான அபாயம் 100%  குறைவடையும்.

* 30 வயதிற்குள் புகைத்தலை நிறுத்துகின்ற ஒருவரின் ஆயுட்காலம், புகை பிடிக்காத ஒருவரின் சராசரியான ஆயுட்காலத்தை அண்மித்துவிடும்.

* புகை பிடித்தலின் பல்வேறு பக்க விளைவுகளையும் சுமந்துக் கொண்டு, 60 வயதில் புகைத்தலை நிறுத்துகின்ற ஒருவரின் ஆயுட்காலம் ஆகக் குறைந்தது மேலும் 3 வருடங்களாவது நீடிக்கும்.

* சத்திர சிகிச்சைக்கு ஒரு மாதத்துக்கு முன்னர் புகைத்தலை நிறுத்துமொருவருக்கு, சத்திர சிகிச்சைக்கு பின்னரான சிக்கல்களின் ஆபத்து 41%  இனால் குறைவடையும்.

* ஆண்களில் இனப்பெருக்க திறனற்ற நிலை கணிசமான அளவுக்கு குறைவடையும்.

* பெண்களில் மாதவிடாய் பிரச்சினைகளும் மகப்பேற்று சிக்கல்களும்  நன்றாக குறைவடையும்.

* புகை பிடித்தலை நிறுத்திய ஒருவரின் சுய கௌரவமும், சமூக அந்தஸ்தும் விருத்தியடையும்.

புகைப் பிடித்தலைத் தவிர்ப்பதைத் தடுக்கும் சவால்கள் எவை?:

* புகை பிடித்தலானது தொற்றா நோய்களின் பொதுவான அடிமைப்படுத்துகின்ற ஆபத்துக் காரணியாகவிருத்தல்.

* புகை பிடிக்கும் போது உட்செல்லுகின்ற புகையிலை நஞ்சானது (நிக்கொட்டின்) அவற்றை தடுப்பதற்கான மருந்துகளை விடவும் வேகமாக மூளையை ஊடுருவி, 

*அதன் சாதாரண செயற்பாடுகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதல்.

* புகை பிடித்தலை தவிர்ப்பதால் ஏற்படுகின்ற நிக்கொட்டின் தவிர்ப்பு அறிகுறிகளை சமாளிப்பதற்கு சிரமப்படல்.

* புகைத்தலானது 80%  இற்கும் அதிகமான அளவில், சமூக பொருளாதார மட்டத்தில் வறுமை நிலையிலுள்ளவர்களையே வாடிக்கையாளர்களாகக் கொண்டிருத்தல்.

* பொது இடங்களில் புகை பிடித்தல் தடைச் சட்டம், நடைமுறையில் நலிவடைந்திருத்தல்.

* 21 வயதிற்குட்பட்டவர்களுக்கான புகைத்தற் பொருட்கள் நேரடியாகவன்றி அவர்களுடைய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சட்டவொழுக்கமற்ற வியாபாரிகள் மூலம் இலகுவாகக் கிடைத்தல்.

* புகையிலைப் பொருட்கள் சட்டவரையறைக்கு உட்பட்ட வகையில் வௌ;வெறு வடிவங்களில் (பதனிடப்பட்ட பாக்கு, பீடா) கிடைக்கக் கூடிய வாய்ப்புகளிருத்தல்.

* புகை பிடித்தல் சார்ந்த திரைப்பட விளம்பரங்கள் மற்றும் திரைப்படக் காணொளிகளை முற்றாக ஒளிபரப்புவதை தவிர்த்து, குறிப்பாக இளைஞர்கள் அவற்றை இன்னும் செய்யத் தூண்டும் வகையில் தடுப்புமுறைகள் அமைதல்.

புகையிலைப் பொருட்கள் உற்பத்தி ஊக்குவிப்பின் திரைக்குப் பின்னால்: 

* மூன்றாம் உலக நாடுகள் சிலவற்றின் வருவாயில் 80% ற்கும் மேற்பட்டவை புகையிலைப் பொருட்களின் மீதான வரியினாலும் விற்பனையினாலும் வருபவை.

* மற்றவர்களின் வேதனைகளிலும் மரணத்திலும் கொளுத்த இலாபமடையும் புகையிலைப் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களின் சமூக நலனற்ற வாணிப நோக்கம்.

* புகையிலை உற்பத்திப் பொருட்கள் நிறுவனங்களின் கணிசமான உரிமையாளர்கள், பணியாளர்கள் தங்களுடைய சொந்த ஆரோக்கியத்தை மாத்திரம் முன்னிலைப்படுத்திய சுயநல புகை பிடித்தல் தவிர்ப்பாளர்களாக இருத்தல்.

* பொதுவாக வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்களை புகையிலை நஞ்சூட்டலின் மூலம் அடிமைகளாக்கி வறுமைக்குழிக்குள் தள்ளிவிடுதல்.

* ஆரோக்கியமற்ற புகையிலை உற்பத்திப் பொருட்களை, கபடமான வர்த்தக நோக்கின் அடிப்படையில், மிகவும் தரமானவை மற்றும் தரமானவை என வளர்ந்த நாடுகளுக்கும் வளர்ந்துவரும் நாடுகளுக்கும் வேறுபடுத்தி விநியோகித்தல்.

புகைப்பிடித்தலைத் தவிர்ப்பதனால் ஏற்படும் நிக்கொட்டின் தவிர்ப்பு அறிகுறிகளும் அவை மறைவதற்கான கால இடைவெளியும்:

புகைப் பிடித்தலைத் தவிர்க்கின்ற போது ஏற்படுகின்ற நிக்கொட்டின் தவிர்ப்பு அறிகுறிகள், மீண்டும் புகைப் பிடித்தலைத் தூண்டுபவையாக குறிப்பிடப்படுகின்ற போதும், அவ்வறிகுறிகள் குறுகிய காலத்துக்கே  இருக்கும் என்பதை கீழுள்ள அட்டவணை சுட்டிக்காட்டுகிறது. 

மேலும், மனதை ஒரு முகப்படுத்தி புகைத்தலை தவிர்ப்பதன் மூலம் புகைத்தலில் இருந்து முற்றாக விடுபடலாம் என்கின்ற, புகைத்தலில் இருந்து முற்றாக மீண்டெழுந்து நல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்களின் நடைமுறை அனுபவங்களையும் இவ்விடத்தில் ஞாபகப்படுத்துவது மிகப் பொருத்தமாகவிருக்கும்.

அத்தோடு மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் அனைத்தும் பாரதூரமற்றவையும் புகைப்பதினால் ஏற்படும் பாதிப்புக்களோடு ஒப்பிடுகையில் புறக்கணிக்கத் தக்கவையுமாகும்.

புகைப் பிடித்தலை நிறுத்துவதற்கு அவசியமான அடிப்படை மனநிலை மாற்றங்கள்:

* புகை பிடித்தலை தவிர்ப்பதிலுள்ள நிலையற்ற குறுகிய காலச்சவால்கள்,

* புகை பிடித்தலை தவிர்த்த பிறகும் பிற்காலத்தில் மீண்டும் ஒரு போதும் மீளவும் புகைக்காமல் இருப்பதற்கான நீண்ட காலச் சவால்கள்,

மேற்குறிப்பிடப்பட்டுள்ள இரு வகையான சவால்களையும் விளைவிக்கின்ற காரணிகளை அடையாளப்படுத்தி அவற்றை களைவதன் மூலமே புகைச் சிறையிலிருந்து முற்று முழுதான விடுதலையைப் பெற முடியும்.

புகைப் பிடித்தலை தவிர்ப்பதற்கு உங்களை நீங்களே கேட்க வேண்டிய கேள்விகள்:

* கீழ் குறிப்பிடப்படுகின்ற வினாக்களுக்கு நீங்கள் தருகின்ற விடைகளிலேயே  உங்களுடைய புகைத்தல் விடுதலைக்கான வெற்றிப் பாதைகள் அமைக்கப்படுகின்றன.

? கே : நான் எந்த வகையான புகை பிடிப்பாளராக இருக்கின்றேன்? குறைந்தளவிலான / மத்தியளவிலான / அதிகளவிலான புகை பிடிப்பவர்.

புகை பிடித்தலை தவிர்ப்பது எனக்கு ஏன் கடினமாகவிருக்கிறது? புகைத்தலுக்கு அடிமையாகவிருத்தல் / புகைத்தலை சமூக அங்கிகார பழக்கமாக ஏற்றிருத்தல்

? கே புகைத்தல் எந்த அளவில் என் ஆரோக்கியத்தை பாதிக்கிறது? 

குறைந்தளவில் / மத்திய தர அளவில் / மிக அதிக அளவில்

? கே நான் எதற்காக உடனடியாகவே புகைத்தலை தவிர்க்க வேண்டும்? 

ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்கு / தொற்றா நோய் தாக்கங்களிலிருந்து தப்புவற்கு / சரிந்து போன சமூக அந்தஸ்தை நிமிர்த்துவதற்கு

? கே புகைத்தலை நிறுத்துவதற்கு நான் நாடவிருக்கின்ற வழிமுறைகள்? 

புகைத்தலை நிறுத்திய நண்பரின் ஆலோசனைகள்/ வைத்திய ஆலோசனையில் மருந்து மாத்திரைகளை பயன்படுத்துதல் / நிபுணர்களின் உள வள ஆலோசனைகளின் மூலம் புகைத்தலை தவிர்ப்பது பற்றிய நடைமுறை வழிவகைகளை நோக்கி நேரடியாகவே பயணிப்பதற்கு முன்னர், புகைத்தலின் பின்னணிக்குள் புதையுண்டிருக்கும் மர்மங்கள் பற்றிய தெளிவைப் பெற்றுக் கொள்வது மிகவும் அவசியமாகின்றது. அதனையே மேற்குறிப்பிட்ட பந்திகள் தெளிவு படுத்தியிருக்கின்றன.

மேற்குறிப்பிட்ட புரிதலில் குறைபாடு காணப்படுமிடத்து, புகைத்தல் மிக இலகுவாகவும் விரைவாகவும் புகைப்பவர்களை மரண வாசலை நோக்கி உந்திச் செல்லும், மாறாக புகைப்பவர்கள், புகைத்தலின் உண்மை முகத்தினையும் கோர வடுக்களையும் அறிந்து கொண்டால், முந்திக் கொண்டு புகைத்தலையே புதை குழிக்குள் புதைத்து விடலாம் என்பது கண்கூடாகும்.

இத்தொடர் கட்டுரையின் அடுத்த பகுதி புகைத்தலை வெற்றி கொள்வதற்கான நடைமுறைச் சாத்திய வழி வகைகளை சுமந்து மலரும்.

-அடுத்த வாரமும் தொடரும்...

Dr.கார்த்திகேசு கார்த்தீபன்
விரிவுரையாளர்
சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம்
கிழக்கு பல்கலைக்கழகம்   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .