2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’உன்னத பெண் தலைவர் மறைந்தார்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 07 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் தனது 67ஆவது வயதில்  மாரடைப்பால் காலமானார்.

சுஷ்மா ஸ்வராஜ் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறை காரணமாக சிகிச்சை பெற்று வந்தமையால்,  அவர் கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. இருப்பினும் அவருக்கு கவர்னர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று திடீரென சுஷ்மாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் அவர் சிகிச்சையின் பலனின்றி காலமாகிவிட்டதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்தது.

சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, ப.ஜ.தலைவர்கள் என பல பிரபலங்கள் உட்பட அனைவரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து அஞ்சலி செலுத்தினர்.

பொது சேவைக்காக வாழ்வை அர்ப்பணித்த ஒரு உன்னத பெண் தலைவரை இந்தியா இழந்துள்ளதாக, பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார். அனைத்து கட்சியினரிடமும் நல்ல நட்பு கொண்டவர் என்றும், அவர் ஆன்மா சாந்தி அடையட்டும் என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் முக ஸ்டாலின், உள்பட பல தலைவர்கள் மறைந்த சுஷ்மா ஸ்வராஜ் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தான் இருக்கும் கட்சியினர் மட்டுமின்றி மாற்று கட்சியினர்களும் மதிக்கும் வகையில் நடந்து கொண்ட மிகச்சில தலைவர்களில் ஒருவராக சுஷ்மா ஸ்வராஜ் திகழ்ந்தார். தனது 40 ஆண்டுகள் அரசியலில் பல்வேறு பதவிகளை வகித்தாலும், கட்சி மாறுபாடின்றி அனைத்துக் கட்சியினரும் மதிக்கும் தலைவராக அவர் விளங்கியதுதான் மிகச்சிறப்பானது

1952ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் திகதி அரியானா மாநிலம், அம்பாலா என்ற பகுதியில் பிறந்த சுஷ்மா, சிறுவயதிலேயே படிப்பில் சிறந்து விளங்கினார்.

தந்தை ஆர்.எஸ்.எஸ்.சில் தீவிரமாக இருந்து வந்ததால், அவருக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மீது ஒரு ஈடுபாடு ஏற்பட்டது.1970களில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பில் இணைந்து, தனது 18ஆவது வயதில் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார் சுஷ்மா.

அம்பாலா கண்டோன்மெண்ட்டில் உள்ள சனாதன் தர்மா கல்லூரி சட்டம் படித்த சுஷ்மா ஸ்வராஜ், உச்சநீதிமன்றத்தில் ஒருசில ஆண்டுகள்வழக்கறிஞராகப் பணிபுரிந்தார்.

1977ஆம் ஆண்டில் எம்.எல்.ஏ. ஆகி, 25 வயதிலேயே அமைச்சராகவும் பொறுப்பேற்று கொண்டார். டெல்லி முதலமைச்சர், மத்திய அமைச்சர், ப.ஜ.க பொதுச்செயலாளர், செய்தித் தொடர்பாளர், எதிர்க்கட்சித் தலைவர், வெளியுறவு அமைச்சர் போன்ற பெருமைக்குரிய பல பதவிகளை வகித்த பாஜகவின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பெற்றவர் சுஷ்மா ஆவார்.

சட்டசபைக்கு 3 முறையும் மக்களவைக்கு 7 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்ட சுஷ்மா, வாஜ்பாய் அமைச்சரவையில் கெபினட் அமைச்சராகப் பணியாற்றினார். அதன்பின்னர் 2014-19இல் மோடி அரசியல் வெளியுறவு அமைச்சராக பதவி வகித்தபோது, வெளிநாடுகளில் பாதிக்கப்படும் இந்தியர்கள் நாடு திரும்ப உடனடி முயற்சிகளை மேற்கொண்டார்.

குறிப்பாக இலங்கை அரசால் பிடித்து வைக்கப்பட்ட தமிழர்களை மீட்பதில் இவரது பெரும் பங்கும் இருந்தது. சமூகவலைதளங்களில் எழுப்பப்படும் கேள்விக்கு உடனுக்குடன் பதில் அளிக்கும் தலைவர்களில் ஒருவர் சுஷ்மா என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் சிறந்த பேச்சாளர், கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து கட்சியினரின் நட்பை பெற்றவர். மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது இந்தியாவுக்கு வருகை தந்த
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் எனில் இவரைப் போல் இருக்க வேண்டும் என்று பாராட்டியுள்ளார்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்ட நாளில் பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தார் சுஷ்மா ஸ்வராஜ். தமது வாழ்நாளில் இந்த நாளைக் காண்பதற்காகத்தான் தாம் உயிர் வாழ்வதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். இதுதான் அவர் பதிவு செய்த கடைசி டுவிட் ஆகும்.

சுஷ்மாவின் மறைவு பாஜகவுக்கு மட்டுமின்றி இந்திய மக்களுக்கே ஒரு பேரிழப்பு தான். அவரது ஆன்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்தனை செய்வோமாக.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .