2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தொழிலாளர்களுக்கு ரூ.1,000 கிடைப்பதில்லை

Freelancer   / 2021 ஒக்டோபர் 16 , பி.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
 
எஸ்.கணேசன்

" தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாய் கிடைத்துவிட்டது என பாற்சோறு சமைத்து, பட்டாசுகொளுத்தி சில தொழிற்சங்க பிரமுகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், இன்று என்ன நடக்கின்றது, ஆயிரம் ரூபாய் கிடைப்பதில்லை. தோட்டத் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
  
பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் தலவாக்கலை நகரில் இன்று (16)  நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

" நாட்டில் இன்று உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தேயிலை உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதும் இல்லை. 

இந்நிலையில் பொருட்களின் விலையும் எகிறியுள்ளது. இதனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மக்களுக்கு சுமைகளை திணிக்காமல், அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும்.  

நாட்டிலுள்ள ஆட்சியாளர்கள் என்ன செய்கின்றனர்? கொரோனாவை காட்டியே தப்பிக்க பார்க்கின்றனர். பங்களாதேசிலும் பிரச்சினைதான். ஆனால் அங்குள்ளவர்கள் நாட்டை உரியமுறையில் நிர்வகிக்கின்றனர். இங்குள்ளவர்களுக்கு அதற்கான இயலுமை இல்லை.

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைத்துவிட்டது என குறிப்பிட்டு பாற்சோறு சமைத்து, சில தொழிற்சங்க தலைவர்கள் பட்டாசு கொளுத்தினர். 

இன்று அந்த கொடுப்பனவு கிடைப்பதில்லை. 20 கிலோவுக்கு மேல் கொழுந்து பறிக்கவேண்டிய நிலைமை. தோட்ட முகாமைத்துவம் தொழிலாளர்களை தாக்குகின்றது. ஆளுங்கட்சியில் இருப்பவர்கள் மௌனம் காக்கின்றனர்"  என்றார். 

தலவாக்கலை நகரில் இடம்பெற்ற இப்போராட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன, பிரதித் தலைவர்களான திகாம்பரம், இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், உதயகுமார் மற்றும் கட்சி  செயற்பாட்டாளர்களும், மக்களும் பங்கேற்றிருந்தனர்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையை உடன் குறைக்குமாறும், வரவு – செலவுத் திட்டம் ஊடாக மக்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டதுடன்,  விவசாயிகளுக்கான உரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோஷம் எழுப்பட்டது.

 அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படவில்லை. தொழில் சுமையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலைமை மாறவேண்டும், நிர்வாகங்களின் அடாவடி முடிவுக்கு வரவேண்டும் எனவும் போராட்டத்தின்போது குரல் எழுப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .