2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

ஆசிரியர்களுக்கு பிரதமரின் அறிவிப்பு

Freelancer   / 2021 ஜூலை 27 , பி.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து இறுதி தீர்மானம் எட்டப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இன்று (27) அலரி மாளிகையில் வைத்து தெரிவித்தார்.

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பது தொடர்பில் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பணியாற்றுவதற்கு தயாராகுமாறு அதிபர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கத்தினரிடம்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடுகள் இருபத்து நான்கு ஆண்டு காலமாக காணப்படுகின்ற போதிலும் இதுவரை ஒரு நியாயமான தீர்வு கிடைக்கவில்லை என்றும், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து தெளிவான புரிந்துணர்வை கொண்டிருப்பதால் ஒரே தடவையில் சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள முடியாவிடினும், சம்பள முரண்பாட்டை குறைப்பதற்கு விளக்க அறிக்கையின்படி கொள்கை தீர்மானமொன்றை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் இதன்போது வேண்டுகோள் விடுத்தனர்.

அதன்போது கருத்து தெரிவித்த பிரதமர்,

அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பில் நான் தெளிவான புரிதலை கொண்டுள்ளேன். சம்பள முரண்பாட்டை குறைப்பது அவசியம் என்பதை ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

எனினும் நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் உலகளாவிய நிலைமை காரணமாக நாட்டின் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சி மட்டத்தில் காணப்படுவதால் அரசாங்கத்தினால் விரைவில் சம்பள அதிகரிப்பை மேற்கொள்வது முடியாத விடயம் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

உங்களது பிரச்சினை தொடர்பில் கல்வி அமைச்சர் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்தார். அமைச்சரவையில் நான், அதிபர், ஆசிரியர்களுக்காக முன்நிற்பேன். 

இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு நாம் தயாராகவுள்ளோம். எனினும் சம்பள ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி சம்பளம் வழங்குவது தொடர்பில் தீர்மானிக்கப்பட வேண்டும் என பிரதமர் சுட்டிக்காட்டினார்.

சமூக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் பரப்பப்படுவதாக சுட்டிக்காட்டிய தொழிற்சங்க பிரதிநிதிகள், சம்பள முரண்பாடு குறித்த விளக்க அறிக்கைக்கு தொழிற்சங்கங்கள் உடன்படுவதாகவும், அதன் உள்ளடக்கங்கள் அமைச்சரவை பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை என்றும் கூறினர்.

அதற்கு பதிலளித்து உரையாற்றிய கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பிலான உயர்நீதிமன்ற தீர்ப்பு, அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானம் மற்றும் விளக்க அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதிபர், ஆசிரியர் சேவையை வரை விட்ட சேவையாக (மூடிய சேவை - Closed Service) பிரகடனப்படுத்துவதன் நோக்கம் பிற அரச சேவைகளின் சம்பள அளவுகோள்களை பாதிக்காத வகையில் அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டை குறைத்தலாகும் எனவும், இதுவரை அதிபர், ஆசிரியர் சேவையை வரை விட்ட சேவையாக மாற்றுவதற்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் சில மாதங்கள் ஆய்வு செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட வரைவை சமர்ப்பித்து கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த  தெரிவித்தார்.

கடந்த ஐந்து ஆண்டு காலப்பகுதியில் காணப்பட்ட அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பில் பிரதமரின் தலையீட்டுகு இதன்போது தொழிற்சங்க பிரதிநிதிகள் தங்களது நன்றியினை தெரிவித்தனர்.

குறித்த கலந்துரையாடலில், கௌரவ அமைச்சர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், விமல் வீரவங்ச, ரமேஷ் பதிரண, காமினி லொகுகே, பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, லசந்த அழகியவன்ன, பிரதமரின் மேலதிக செயலாளர் பேராசிரியர் கபில சி.கே.பெரேரா, கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சின் செயலாளர் கலாநிதி எம். உபாலி சேதர உள்ளிட்ட அதிபர் சேவையை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க பிரதிநிதிகள்  பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .