2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

திலீபனின் நினைவேந்தலை நடத்த 24 பேருக்கு தடை உத்தரவு

Niroshini   / 2021 செப்டெம்பர் 26 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

 

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை நடத்துவதற்கு, முல்லைத்தீவு மாவட்டத்தில், ஐந்து பொலிஸ் நிலையங்கள் ஊடக 24 பேருக்கு  முல்லைத்தீவு மாவட்ட நீதவான்  நீதிமன்றின் ஊடாக தடையுத்தரவுகள் பெறப்பட்டுள்ளன.

அந்தத் தடை உத்தரவுகள், நேற்று  (25)   உரியவர்களிடம் முல்லைத்தீவு, முள்ளியவளை, புதுக்குடியிருப்பு, மாங்குளம், மல்லாவி ஆகிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளால்  ஒப்படைக்கப்பட்டு உள்ளன.

முல்லைத்தீவு பொலிஸாரால் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், எம்.கே.சிவாஜிலிங்கம், அன்டன் ஜெகநாதன், முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி நான்கு பேருக்கும் தடை உத்தரவு கட்டளை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முள்ளியவளை பொலிஸாரால் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கமலநாதன் விஜிந்தன், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சுமித்கட்சன் சந்திரலீலா, கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான தவராசா அமலன், இரத்தினம் ஜெகதீஸ்வரன், கனகையா தவராசா, திருச்செல்வம் ரவீந்திரன், சின்னராசா லோகேஸ்வரன், சமூக செயற்பாட்டாளர்களான இராஜசேகரம் இராசம்மா, பகீரதன் ஜெகதீஸ்வரன், ஞானதாஸ் யூட்பிரசாத், காளிமுத்து சண்முகம் ஆகியோருக்கு தடை உத்தரவு கையளிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பொலிஸாரால் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் தர்மலிங்கம் நவநீதன் மற்றும் முருகுப்பிள்ளை பார்த்தீபன் ஆகியோருக்கும் மாங்குளம், மல்லாவி பொலிஸாரால் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், அரசியல் கட்சி பிரதிநிதிகள் சமூக செயற்பாட்டாளர்களான திலகநாதன் கிந்துஜன், ரகுநாதன் துஷ்யந்தன், புன்சிதபாதம் ரவீந்திரன், ராசமணி சிவராசா, மகாதேவன் ரூபானந்த் ஆகியோருக்கும் தடை உத்தரவு கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த  தடையுத்தரவில், 'தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த இராசையா பார்த்தீபன் என்பவர் தொடர்பில் நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்தவுகள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென,  பொலிஸார் அறிக்கை செய்துள்ளனர்.

'எனவே  நீங்களும், உங்கள் ஆதரவாளர்களும்  24.09.2021 தொடக்கம் 27.09.2021 வரையான காலப்பகுதிக்குள் இராசையா பார்த்தீபன் தொடர்பிலான எந்தவொரு நினைவுகூரலையும் மேற்கொள்ளக்கூடாதென்ற தடைக்கட்டளையை குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவையின் பிரிவு 106க்கு அமைவாக பிறப்பிக்கின்றேன்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .