2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

காட்டுப் பகுதியில் கைவிட்டு சென்றதால் பரபரப்பு

Nirosh   / 2021 செப்டெம்பர் 20 , பி.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஸீன் ரஸ்மின்)

ஆனமடுவ கொட்டுக்கச்சி பிரதேசத்தில் வேன் ஒன்றினால் மோதப்பட்டு காயமடைந்த நபரை, அதே வேனில் சிகிச்சைக்கு அழைத்து செல்வதாக கூறி, காட்டுப் பகுதியில் கைவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இவ்வாறு கட்டுப் பகுதியில் கைவிடப்பட்டிருந்த நபர், சுமார் 6 மணித்தியாலயங்களுக்குப் பின் மீட்கப்பட்டு புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனமடுவ கொட்டுக்கச்சி நீர்ப்பாசன சந்தி பகுதியை சேர்ந்த 53 வயதான ஓய்வுபெற்ற இராணுவ வீரரான சரத் பண்டார அத்தபத்து என்பவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் விபத்தை ஏற்படுத்திய வேனின் உரிமையாளர் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
நேற்று ஞாயிற்றுக்கிழமை (19)  குறித்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர்; வயல் வேலைக்காக சென்றுவிட்டு பின்னர் தனது வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது ஆனமடுவ பகுதியிலிருந்து புத்தளம் பகுதியை நோக்கி பயணித்த வேன் மோதியதில் விபத்துக்குள்ளானார்.

அத்துடன், விபத்துச் சம்வபம் இடம்பெற்ற வேளை அங்கு ஒன்றுகூடிய பிரதேச மக்கள் விபத்துடன் தொடர்புடைய வேனை சூழ்ந்துகொண்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் அமைதியின்மை ஏற்பட்டது. எனினும் விபத்தில் காயமடைந்தவரை சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலைக்கு அழைத்து செல்வதாக கூறி, அதே வேனில் ஏற்றிக் கொண்டு சந்தேக நபர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.

இந்நிலையில், காயமடைந்த நபரின் உறவினர்கள் புத்தளம் மற்றும் ஆனமடுவ ஆகிய வைத்தியசாலைகளில் படுகாயமடைந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் தொடர்பில் விசாரித்தபோது, அவ்வாறு எவரும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து இதுபற்றி புத்தளம் மற்றும் ஆனமடுவ பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துச் சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அங்கு ஒன்றுகூடிய பிரதேசவசிகளில் பெண் ஒருவர் விபத்தை ஏற்படுத்திய குறித்த வேனை தனது கையடக்கத் தொலைபேசியில் படமெடுத்திருந்த நிலையில், அந்த புகைப்படம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்போது அந்த வேனின் இலக்கத் தகட்டை வைத்து ஆனமடுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

விபத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்த பொலிஸார், அவர்களிடம் முன்னெடுத்த விசாரணைக்கமைய, காயமடைந்தவரைக் கைவிட்டு சென்ற காட்டுப் பகுதியையும் கண்டுபிடித்து, அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .