2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மின் தடை சதியா, கோளாறா ?

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 01 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொத்மலையில் இருந்து பியகம உப மின் நிலையத்துக்கு மின் விநியோகிக்கும் கேபிள்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நேற்று முன்தினம் (29) இரவு நாட்டின் பல பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டமை தொடர்பில், உள்ளக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக, இலங்கை மின்சார சபையின் பொது
முகாமையாளர் ஆர்.எம்.ரணதுங்க, நேற்று (30) தெரிவித்தார்.

மின் தடை, இயற்கையாக இடம்பெற்றதா அல்லது திட்டமிடப்பட்ட ஒன்றா என்பது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று, மின்சார தொழிநுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், ஏ.ஜீ.யூ. நிசாந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

மின்சாரசபை கட்டமைப்பின் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் வெளியேறியமையே மின் விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவருவதற்குத் தாமதமாகியதாகத் தெரிவித்த அவர், சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் பொறியியலாளர்களின் தலையீட்டுடனேயே மின் விநியோகம் வழமைக்குக் கொண்டுவரப்பட்டமதாகவும் சுட்டிக்காட்டினார்.

கொத்மலையில் இருந்து பியகம உப மின் நிலையத்துக்கு மின் விநியோகிக்கும் 220 கிலோ வோற் மின்னழுத்த கேபிள்கள் இரண்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.விநியோக கேபிள்களில் ஏற்பட்ட துண்டிப்பு காரணமாக, மகாவலி நீர் மின் உற்பத்தி நிலையம் நிறுத்தப்பட்டு அதிர்வெண் வீழ்ச்சியை சந்தித்ததுடன், இதன்காரணமாக, சில உப மின் நிலையங்கள் செயற்பட முடியாமல் தானாக அணைந்து விட்டன என்று தெரிவிக்கப்பட்டது.

பியகம, கொட்டுகொட, ஹபரணை, காலி, மாத்தறை, பன்னிபிட்டிய, இரத்மலானை, ஸ்ரீ ஜயவர்தனபுர, குருநாகல், கிரிபத்கும்புர, அதுருகிரிய, கொஸ்கம மற்றும்
சபுகஸ்கந்த ஆகிய உப மின் நிலையங்களில் திடீர் மின் தடை ஏற்பட்டதையடுத்தே நாட்டின் பல பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டது.

நேற்று முன்தினம் (29) இரவு 7.30 மணியிலிருந்து மின் விநியோகம் தடைப்பட்டிருந்த போதும், ஒருசில மணி நேரத்தில் மின் விநியோகம் மீண்டும் வழமைக்குத் திரும்பியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X