2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ப.ஆப்டீன் என்ற பேரமைதி

Kogilavani   / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இருபது வருடங்களுக்கு மேலாக ஒரே இடத்தில் ஆங்கிலப் பாடம் படிப்பித்து இலக்கிய ஆர்வமுள்ள மாணவர்களைத் தட்டிக் கொடுத்து, நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்து, வாசிக்க வைத்து, வாசித்தவைகளை ஒரு மாலைப் பொழுதில் அமர்ந்து கலந்தரையாடி இலக்கியத்தை விதைத்தவர் ப.ஆப்டீன்.

இலக்கியமும் விதை போன்றதுதான். நிலமறிந்து விதைத்துவிட்டால் மட்டும் போதாது, முளைவிடும் கலப்பகுதியில் அவற்றைத் திறம்படப் பராமரிக்கவும் வேண்டும். நல்ல அறுவடை வேண்டுமானால் விசக்கிருமிகள், கெட்ட புழுக்கள், கொடிய பூச்சிகள் போன்றவற்றின் கொடிய தாக்குதல்களில் இருந்து கண்ணும் கருத்துமாக பாதுகாக்கவும் வேண்டும். அப்படிப் பாதுகாப்பாளனாகச் செயற்படுபவன் காரிய கெட்டிக்காரனாகவும் இருக்கவும் வேண்டும். நல்ல திறம் படைத்தவனாக இருக்கவும் வேண்டும். அப்படித் திறம் படைத்த ஒருவராகத்தான் ப.ஆப்டீன் வாழ்ந்தார். படைப்பிலக்கியவாதியின் திறம் என்பது வெறும் எழுத்தால் மட்டும் தீர்மானிக்கப்படுவதன்று. அவனது இயல்பு மற்றும் குணாம்சங்கள் அதில் கூடுதல் தாக்கம் செலுத்தும். மற்றவர்களுடன் அவன் பழகும் விதம் நடந்துகொள்ளும் விதம் சக படைப்பாளியைக் கையாலும் விதம் என்று எல்லாமும்தான் அவனது திறத்தின் கனதியைத் தீர்மானிக்கின்றன.

1937 நவம்பர் 11ஆம் திகதி பிறந்த ப.ஆப்டீன், „இரவின் ராகங்கள்(1987)..., „நாம் பயணித்த புகைவண்டி(2002)..., „கொங்கானி(2014)... ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் „கருக்கொண்ட மேகங்கள்(1999)..., „மலையூற்றுக்கள்... ஆகிய நாவல்களையும் „பேராசிரியர் நந்தியும் மலையகமும்... என்ற ஆய்வையும் தந்தவர். இத்தனையையும் தந்துவிட்டு அவர் அமைதியாகவே இருந்தார். அவரது அமைதியும் அடக்கமும்தான் அவர்மீது அளவிலாத பற்றை நம் மீது ஏற்படுத்துகின்றன.

ஆர்ப்பாட்டமுள்ள இலக்கியக் கலகக்காரர்கள் பலருக்கு ப.ஆப்டீனைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் ஆப்டீனைப் பற்றியோ அல்லது அவரது படைப்பிலக்கியம் பற்றியோ தேடி அல்லது பேசிக் கூட இருக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்களெல்லாம் இப்போது ஆகாயத்திலேயோ அல்லது பூமிக்கடியிலேயோ இருந்து நவீன இலக்கியம் படைத்துக் கொண்டிருப்பார்கள். அல்லது யாரைப்பற்றியாவது குறைகழுவிக் கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்ட இலக்கிய ஆர்ப்பாட்டக்காரர்களின் ஆர்ப்பரிப்புக்களையெல்லாம் தாண்டி அவர்களின் மாபெரும், அதிசிறந்த அதி அற்புதமான என்ற சான்றிதழ்களுக்காக காத்திருக்காது ஒதுங்கிக் கொண்டவர்களில் ஆப்டீன் சேரும் ஒருவர்.

ஆப்டீன் சேரிடம் ஆங்கிலமும் இலக்கியமும் பயின்றவன் நான். சப்தமிட்டு எதற்காகவும் அதட்டத் தெரியாதவர். மல்வானையில் யதாமா பாடசாலைதான் எங்கள் இலக்கியத் தோட்டம். அங்கு அவர் இலக்கியத்தை எமக்குள் விதைத்து  சிறந்த அறுவடைக்காகப் பராமரித்தார்.

நீர்கொழும்பைச் சேர்ந்த ரிஸ்வான் என்பவர் ஆப்டீன் சேரின் ஆசிர்வாதத்துடன் ஒரு கவிதைத் தொகுதியை 2000ஆம் ஆண்டுகளில் வெளியிட்டார். நான் கொஞ்சம் தாமதம். காசுக்குப் பறக்கும் கலாபூஞ்சனங்களுக்கு இடையே காலம் தாழ்த்தி அவரது திறமைக்கும் ஆற்றலுக்குமாக 2012ஆம் ஆண்டுதான் கலாபூசணம் விருது அவரைச் சேர்ந்து பெருமைபெற்றது. அவர் எந்தச் சால்வைக்காகவும் ஓடவுமில்லை பாயவுமில்லை. யாரையும் காக்காய் பிடித்து இலக்கியத் தம்பட்டம் அடித்துக் கொள்ளவுமில்லை. அவர் பாட்டில் அவர் பணியைச் செய்தார். இப்போது அவருக்காக நாங்கள் செய்ய வேண்டியதைச் செய்கின்றோம். மலாய் சமுகத்தின் வரலாற்றை மையப்படுத்தி ஒரு நாவலை எழுதும் முயற்சியில் இறுதித் தருணத்தில் அவர் ஈடுபட்டிருந்ததாகவும் தகவல் கிடைக்கின்றது. அத்துடன் இன்னும் சில சிறுகதைகளும் குறு நாவல்களும் புத்தக வடிவம் பெறாமல் இருக்கின்றன. அவற்றைப் பதிப்பிப்பதோடு அவர் தமிழ் இலக்கிய உலகுக்குச் செய்த பங்களிப்பின் பெறுமதியை வரலாற்றில் பதிவு செய்வதுமே அவருக்கு எழுத்துலகில் நாம் செய்ய முடியுமான சிறிய உபகாரம்.

எதிர்வரும் 25ஆம் திகதி காலை கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் அவருக்கான ஒரு நினைவுக்கூட்டம் நடத்த இருப்பதாக மேமன் கவி தந்த தகவலையும் இங்கு பதிவு செய்து கொண்டு அவரின் மறுவுலக வாழ்க்கையின் ஈடேற்றத்துக்காகப் பிரார்த்திக்கிறேன்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .