2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அழித்தொழித்து, ஆடக்கியாண்ட அவசரகாலச் சட்டத்துக்குள் நாடு

Editorial   / 2022 ஜூலை 19 , மு.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழித்தொழித்து, ஆடக்கியாண்ட அவசரகாலச் சட்டத்துக்குள் நாடு

இலங்கையின் அரசியல் வரலாற்றை சற்று பின்னோக்கி பார்த்தோமெனில், 1942ஆம் ஆண்டுமுதல் ஆட்சியிலிருந்த எந்தவோர் அரசாங்கமும் அவசரகாலச் சட்டத்தை அமல்படுத்தாது, ஆட்சியில் இருந்ததே இல்லை. அந்தளவுக்கு மக்களின் வெறுப்பலைகளுக்கும் எழுச்சிக்கும் போராட்டங்களுக்கும் அஞ்சியே, ஆட்சியில் இருந்தது.

புதிதாக ஆட்சிப்பீடம் ஏறும்போது, மக்கள் நசுக்கும் எந்தவொரு சட்டமும் அமல்படுத்தப்படாது. ஐந்து நட்சத்திர ஜனநாயகத்தின் கீழ், ஜனநாயக ஆட்சியை முன்னெடுப்போமென அச்சமின்றி கூறியவர்கள் எல்லோருமே, ஆட்சியை தக்கவைத்துக்குக் கொள்வதற்காக, ‘அவசரகாலச் சட்டத்தை’ ஓர் ஆயுதமாக அவ்வப்போது பயன்படுத்தியே வந்துள்ளனர்.

அவசரகாலச் சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம் ஆகிய இவ்விரண்டும், எவ்வளவு பயங்கரமானவை என்பதை, இன்றைக்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, தமிழர்கள் அனுபவித்து வந்திருக்கின்றனர். இன்றுதான், அது எவ்வளவு பயங்கரமான ஆயுதம் என்பதை, தென்னிலங்கை பெரும்பான்மையின மக்கள் புரியக்கூடியதாய் இருக்கின்றது.

இது ஜூலை மாதம், இலங்கை வரலாற்றில் கறைபடித்த மாதம்; தமிழர்களின் உணர்வலைகளை கொப்பளிக்கச் செய்த மாதம். 1983 கலவரத்துக்கும் இந்த அவசரக்காலச் சட்டமே மறைமுகமாக ஓர் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது. அதனை வைத்துக்கொண்டுதான், தமிழர்கள் உயிரோடு கொளுத்தப்பட்டனர்; சொத்துகள் சூறையாடப்பட்டன; அழிக்கப்பட்டன.

அரசாங்கத்தின் இரும்பு கரங்களுக்குள் மக்கள் சிக்கி அல்லல்படும் போதெல்லாம், மனித உரிமை அமைப்புகள் குரல்கொடுக்கும். அதேபோல, அவசரகால, பயங்கரவாத சட்டங்கள் தொடர்பில் ஜெனீவாவில் பல தடவைகள் பிரஸ்தாபிக்கப்பட்டன. எதிர்வரும் அமர்வுகளின் போது, மேற்படி இவ்விரு சட்டங்களுக்கு எதிரான கேள்விகளுக்கும் இலங்கை அரசு, பதில்சொல்லியே ஆகவேண்டும்.

ஜெனீவாவின் அழுத்தங்களுக்கு இடையில், அவசரகால சட்டம் 2011 நீக்கப்பட்டது. எனினும், அதிலிருந்த அதிகாரங்கள் பல, நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட ஜனாதிபதிக்கு கைமாறின.  2018 மார்ச் 6, கண்டி- திகன சம்பவத்துக்குப் பின்னர், சில நாள்கள் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச்சட்டம், 2019 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குப் பின், மீண்டும் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது.

தப்பியோடிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் ஆட்சியிலும் அவசரகாலச்சட்டம் அமல்படுத்தப்பட்டது. பதில் ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்க, பதவிப்பிரமாணம் செய்த கையுடன், அவசரகாலச்சட்டத்தையும் ஊரடங்குச் சட்டத்தையும் பிறப்பித்தார். எனினும், அச்சட்டத்தை துளியளவேனும் கணக்கிலெடுக்காத போராட்டக்காரர்கள், ஜூலை 13ஆம் திகதியன்று அலரிமாளிகையை கைப்பற்றினர்.

அதற்குப் பின்னரும் போராட்டக்காரர்கள் களத்தில் நின்றுகொண்டிருக்கின்றனர். பதில் ஜனாதிபதிக்கு எதிரான கோஷங்கள் வலுப்பெற்றுள்ளன.

இதற்கிடையில், நாடு முழுவதும் மீண்டுமொரு தடவை அவசரகாலச்சட்டம் நேற்று (18) காலை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆக, இரும்பு கரத்துக்குள் நாட்டை வைத்துக்கொண்டு, செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். (19.07.2022)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .