2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விரலுக்கேற்ற வீக்கத்தைப் போல வாழப்பழகிக் கொள்ள வேண்டும்

Editorial   / 2022 செப்டெம்பர் 18 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

விரலுக்கேற்ற வீக்கத்தைப் போல வாழப்பழகிக் கொள்ள வேண்டும்

வாழ்க்கைச் செலவு விண்ணைத் தொட்டுள்ள நிலையில், மக்கள் தமது நாளாந்த அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்குக்கூட பெரும் சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந்த நிலைமை, இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீண்டு செல்லுமென எதிர்வுகூற முடியாதுள்ளது.

உணவுப் பொருட்கள் முதல் ஆடைகள், போக்குவரத்து, மின்சாரம், நீர், தொலைபேசி, இணையம் என அனைத்து வசதிகளுக்குமான கட்டணங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், பல குடும்பங்களின் குடும்ப வருமானம் குறைவடைந்துள்ளது. குறிப்பாக, மாதாந்த சம்பளம் பெறுவோரின், மேலதிக கொடுப்பனவுகள், மேலதிகநேர கொடுப்பனவுகள், தரகு போன்ற ஊக்குவிப்பு மற்றும் சலுகைக் கொடுப்பனவுகள் பெருமளவில் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன. ஏனெனில், அவர்கள் பணிபுரியும் வியாபார, வணிக நிறுவனங்கள்கூட நிதி நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளன.

கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்னர், பல குடும்பங்களில் நிலவிய வருமான மட்டம் தற்போது இல்லை. இதனால், குடும்ப செலவுகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன. அவசியமான செலவுகளைக்கூட, கட்டுப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் பலருக்கு எழுந்துள்ளது.

குறிப்பாக, குடும்ப விநோத அம்சங்கள், திரையரங்குகளுக்கு செல்வது, வார இறுதியில் தூரப் பயணம் செல்வது, குடும்ப சுற்றுலா, உணவகங்களுக்கு செல்வது போன்ற பல விடயங்களை தவிர்க்கும் நிலையை பல குடும்பங்கள் எதிர்கொண்டுள்ளன.

சேமிப்பு என்பது மிகவும் முக்கியமானது என்பதை, நாம் பள்ளிப் பருவம் முதலே பயின்று வருகின்றோம். நாடு இன்றைய நெருக்கடி நிலைக்கு முகங்கொடுப்பதற்கும் நாட்டில் அந்நியச் செலாவணி சேமிப்பு இன்மையும் ஒரு காரணம் எனக்கூறினால் அது தவறில்லை.

இந்நிலையில், தமது மாத வருமானத்தில் ஒரு பகுதியை சேமிப்பில் இட்டவர்கள், தற்போது அதைத் தவிர்த்து வருவதுடன், அவர்கள் சேமித்த தொகையிலிருந்து, தமது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள, அவற்றைப் பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்கும் ஆளாகியுள்ளனர்.

மொத்தத்தில் ரூபாயின் மதிப்பு என்பது பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது. விலை அதிகரிப்புக்கு ஆளாவதை தற்காலிகமாக தவிர்க்கும் வகையில், மக்கள் சுப்பர் மார்கெட்களில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பொருட்களில் பழைய கையிருப்புகளை தேடி வாங்குவதை பெருமளவில் அவதானிக்க முடிகின்றது. ஊர் கடைகளில், பழைய விலைகளின் மீது, புதிய விலைகளை எழுதி ஒட்டி, அல்லது அச்சிட்டு ஒட்டி விலைகளை அதிகரித்து விற்பதால் அதன் பயன் அம்மக்களுக்கு கிடைப்பதில்லை.

இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் பல மடங்கு அதிகரிக்கையில், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களும், உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதாக காரணம் காண்பித்து சில மடங்கேனும் அதிகரித்துள்ளன.

இவ்வாறான செலவுகள் அதிகரித்து, வருமானம் குறைவடைந்துள்ள சூழலில், விரலுக்கேற்ற வீக்கத்தைப் போன்று, வருமானத்துக்கேற்ப நாளாந்த செலவுகளைக் கட்டுப்படுத்திக் கொள்வதுடன், சேமிப்பையும் பொருத்தமான முதலீடுகளில் பேணி வருவது காலத்தின் தேவையாகும். (07.09.2022)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X