2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

சிந்தனையில் மாற்றம் வேண்டும்

Editorial   / 2022 ஓகஸ்ட் 24 , மு.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்ட மக்களினதும் அரசியல்வாதிகளினதும் சிந்தனையில் மாற்றம் வேண்டும்

நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டிக்கொடுப்பதில், மாடாய் உழைத்து, ஓடாய்த் தேயும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையின் இன்னல்களைப் பார்க்குமிடத்து, இந்த நவீன காலத்தில் இப்படியொரு சமூகம் வாழ்ந்துகொண்டு இருக்கின்றதா என, பலரும் கேள்வி கேட்கத்தான் செய்கின்றனர்.

குறைந்த வருமானத்துக்கு அதிகூடிய வேலை செய்யும் ‘கௌரவ பிச்சைக்காரர்’கள் அல்லது, ‘கையேந்துபவர்கள்’ என்று கூறுவதிலும் தவறு இருக்காது. ஆனாலும், கடுமையான கஷ்டங்களுக்கு மத்தியில், கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, அந்தச் சமூகத்திலிருந்து வெளியேறி, நல்ல நிலைகளில் இருப்பவர்களையும் மறந்துவிடக்கூடாது.

விடாமுயற்சியும் அர்ப்பணிப்பும் தூரநோக்கு சிந்தனையும் இருக்குமாயின், இலகுவில் முன்னேற்றம் அடைந்துவிடலாம். அவற்றை நோக்கிச் சிந்திப்பதற்குத் தூண்டவேண்டும். இல்லையேல், ‘ஆமாம் சாமி’ போடும் நிலைமையில், மாற்றங்களை ஏற்படுத்தமுடியாது.

நகர்ப்புறங்களில், செல்வந்தர்களின் வீடுகளில் வேலை செய்வோரைப் பார்க்குமிடத்து, பெரும்பாலானவர்கள் சிறுமிகளாகவே இருப்பர். அவர்கள்தான் எதிர்த்துப் பேச மாட்டார்கள்; கூடுதலான சம்பளத்தைக் கேட்கமாட்டார்கள்; வெளியில் அழைத்துச் செல்லவேண்டிய தேவையும் இருக்காது.

இவ்வாறு சட்டவிரோதமாக, பணிப்பெண்களாக அமர்த்தப்படும் சிறுமிகளில் பலர், மர்மமான முறையில் உயிரிழந்து விடுகின்றனர். வீட்டு வேலைகளுக்காக, சிறுமிகளை அழைத்துவரும் தரகர்கள் இருக்கும் வரையிலும், வீட்டு வேலைகளுக்காகத் தங்களுடைய பிள்ளைகளை அனுப்பிவைக்கும் பெற்றோர்களும் உறவினர்களும் இருக்கும் வரையிலும், மஸ்கெலியா, மொக்கா தோட்டத்தைச் சேர்ந்த சிறுமியின் உயிரிழப்பு இறுதியானதாக இருக்காது. 

டயகம சிறுமி ஹிஷாலினியின் மர்மச் சாவுக்குப் பின்னர், பல்வேறு தரப்பினரும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர். சமூகத்தின்பால் அக்கறை கொண்டவர்கள் அனைவரும், “வீட்டு வேலைக்களுக்காக எங்களுடைய தோட்டத்தில் இருந்து, சிறுமிகளை அனுப்பமாட்டோம்” எனச் சபதமும் எடுத்திருந்தனர். அந்தச் சபதமும் காற்றோடு கலந்துவிட்டது.

பாடசாலைகளில் இருந்து இடைவிலகுவோரைக் கணக்கிட்டு, அவர்களை மீளவும் பாடசாலைகளில் சேர்ப்பதற்கு வழிசமைக்கப்படுமென அரசியல்வாதிகள் அறிக்கைகளை விட்டனர். அவ்வாறான அறிக்கைகளை இன்னுமே விட்டுக்கொண்டுதான் இருக்கின்றனரே தவிர, செயற்பாடுகள் எவையும் இல்லை.

நல்லமுறையில் கல்விகற்று, சமூகத்திலிருந்து வெளியேறிவிட்டால், தங்களுடைய இருப்பு கேள்விக்குறியாகிவிடும் என்பது, அரசியல்வாதிகளிடம் நிலைகொண்டிருக்கும் பெரும் பயமாகும். அப்பயத்தைக் களைய வேண்டுமாயின், மலையகத்தில் தொழிற்றுறைகளை உருவாக்கவேண்டும். வருமானம் ஈட்டி, முன்னேறிச் செல்லும் வகையில் திட்டங்களை வகுக்கவேண்டும்.

ஓர் அரசியல்வாதியின் இருப்பு, அந்தச் சமூகத்தை சார்ந்தவர்களின் கைகளிலேயே இருக்கிறது. ஆகையால், பெருந்தோட்ட மக்களினதும் அரசியல்வாதிகளினதும் சிந்தனையில் மாற்றங்கள் ஏற்படவேண்டும்.

இல்லையேல், வீட்டு வேலைகளுக்காகச் சிறுமிகளை அனுப்புவதற்கு எதிராக, அவ்வப்போது சபதம் எடுப்பதையும் போராட்டங்களை நடத்துவதையும் அறிக்கைகளை விடுவதையும், தவிர்க்கவே முடியாது என்பதை நினைவூட்டுகின்றோம். (24.08.2022)

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .