2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நிரபராதிகள் மீதான அரச பயங்கரவாதத்தின் மிலேச்சத்தன தாக்குதல்

Editorial   / 2022 மே 10 , மு.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிரபராதிகள் மீதான அரச பயங்கரவாதத்தின் மிலேச்சத்தன தாக்குதல்

ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக ஒரு மாதகாலமாக காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட ‘கோட்டா ஹோ கம’, அலரிமாளிகையின் முன்பாக 13 நாள்களாக நடத்தப்பட்ட ‘மைனா ஹோ கம’ மீது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் குண்டர்களால் நேற்று (09) மிலேச்சத்தனமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன; அவை கண்டிக்கத்தக்கவை. உலக வங்கி, மனித உரிமை நிறுவனங்கள் உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புகள், நாடுகள் இத்தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளன. 

ஒவ்வொரு பொருளுக்கும் பல நாள்களாக நீண்ட வரிசையில் நின்றிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதை அடுத்தும், அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு, தாங்கிக்கொள்ள முடியாத விலை அதிகரிப்பை அடுத்துமே, ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தன.

ஜனாதிபதியையும் பிரதமரையும் முழு அமைச்சரவையையும் இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தப்பட்டது. இறுதியில் 225 பேரும் வீட்டுக்குச் செல்லவேண்டுமென்ற கோஷம் வலுப்பெற்றது. இந்நிலையில்தான், ‘கோட்டா ஹோ கம’வும், அதற்குப் பின்னர், ‘மைனா ஹோ கம’வும் உருவாக்கப்பட்டன. அதன் கிளைகளும் ஆங்காங்கே முளைத்தன.

மேற்படி கிராமங்களிலும், அதன் கிளைகளிலும் எந்தவோர் அசம்பாவிதமும் கடந்த 30 நாள்களில் சம்பவிக்கவில்லை. தங்களுடைய மனக்கிலேசங்களை, ஒவ்வொருவரும் போராட்டக்களத்தில் வெளிப்படுத்தினர். போராட்டங்கள் பல தளங்களுக்குச் சென்று விரிவடைந்தன.

திரைப்பட பாணியிலான வசனத்தில் கூறுவதாயின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்பது போல் மக்களின் சுயஆதரவு பெருகியது. எனினும் நேற்றைய (09) சம்பவத்தில்,  மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவளிக்கும் வகையில், அழைத்துவரப்பட்ட கைகூலிகளுக்கு 2,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக, பிணைக்கைதிகளாக சிக்கிக்கொண்டவர்கள் ஒப்புதல் வாக்குமூலமளித்துள்ளனர்.

‘சூடான’ பானமும் வாய்க்கு ருசியான நொறுக்குத் தீனிகளும், தங்களை மெய்மறக்கச் செய்துவிட்டுள்ளன.  அதனோர் அங்கமாகவே ‘மைனா ஹோ கம’ தாக்கப்பட்டு, எரியூட்டப்பட்டது; வன்முறையும் அங்கிருந்த ஆரம்பிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டம் என்றாலே, தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனத்துடன் தயாராக இருக்கும் பொலிஸார், அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இருக்கும் அலரிமாளிகைக்கு முன்பாக, ஆர்ப்பாட்டம் நடக்கவிருக்கிறது என்பதை அறிந்திருந்தும் தயாராக இருக்கவில்லை. பொலிஸார் கைகட்டி, வாய்பொத்தி பார்த்துக்கொண்டிருந்தனர்.

இரும்புக் கம்பிகள், குண்டாந்தடிகளுடன் ரகளையில் ஈடுபட்டிருந்த மஹிந்தவுக்கு ஆதரவான குழு, ‘கோட்டா ஹோ கம’வுக்குச் சென்று, போராட்டக்காரர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டது. பெண்களெனப் பார்க்காது இழுத்துப் போட்டு தாக்கியது. எதிர்க்கட்சித் தலைவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதன்போது விரைந்துவந்த தண்ணீர் பீச்சியடிக்கும் பொலிஸ் வாகனம், போராட்டக்காரர்களை விட்டுவிட்டு, ‘கோட்டா ஹோ கம’ மீது தண்ணீர் பீச்சியடித்தது. ஆக, எல்லாமே திட்டமிட்ட முறையில் அரங்கேற்றப்பட்டமை அம்பலம்!

இந்தத் தாக்குதல்கள் மூலமாக,  இழைக்கக்கூடாத தவறு ஒன்றை அரசாங்கம் இழைத்துள்ளது. இதுதான், ‘சொந்த செலவில் சூனியம் வைக்கும் செயற்பாடு’ என்பது! அதுமட்டுமன்றி, நிரபராதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட அரச பயங்கரவாதத்தின் மிலேச்சத்தனமான தாக்குதலாகும். இதனை நாமும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .