2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விஷமிகளின் வலையில் சிக்காமல் விழிப்பாக இருங்கள்

Editorial   / 2022 செப்டெம்பர் 20 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஷமிகளின் வலையில் சிக்காமல் விழிப்பாக இருங்கள்



பொருளாதார நெருக்கடியால், பெரும்பான்மையான இலங்கையர்கள், உணவுக்கு அல்லாடுகின்றமையை கண்கூடாகக் காண்கிறோம். இலங்கை மக்களில் 87 இலட்சம் பேர் போதிய உணவை உண்பதில்லை என்றும்  ஐந்தில் இரண்டு குடும்பங்கள், தங்களது வருமானத்தில் 75 சதவீதத்தைஉணவுக்காகவே செலவிடுவதாகவும் உலக உணவுத் திட்ட அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.  

தினக் கூலியையோ அல்லது மாதாந்த வருமானத்தையோ பெறும் நபர்கள், தமது சம்பளத்தின் பெரும் பகுதியை உணவுக்காகவே செலவிடுகின்றனர். இந்நிலையில், தமது வருமானத்தை உயர்த்தி குடும்பத்தை எவ்வாறாவது கரை சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் வெளிநாடு செல்ல பலர் முயல்வதை கடவுச்சீட்டு வரிசை காட்டி நிற்கிறது.

கடந்த 8 மாதங்களில் 7 இலட்சத்துக்கும் அதிகமான கடவுச்சீட்டுகள் பெறப்பட்டுள்ளதுடன், கணிசமான தொகையினர், வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புகளைத் தேடிச் சென்றுள்ளனர். முன்னர் பலரிடம் வெளிநாட்டு மோகம் இருந்தபோதும், பொருளாதார நெருக்கடியே வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்வதற்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளை விட, ஐரோப்பிய நாடுகள் மற்றும் சில அபிவிருத்தியடைந்த நாடுகளையே, பலரும் விரும்புகின்றனர். இதனை அறிந்து கொண்டுள்ள மோசடிக் கும்பல்கள் பல, தங்களது வலையில் அவர்களை சிக்கவைத்து பெரும் பணத்தை சுருட்டி வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி, 5 கோடி ரூபாய்க்கும் அதிக நிதி மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர்  கடந்த சனிக்கிழமையன்று நீர்கொழும்பில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதேபோல் வெளிச்சத்துக்கு வராத பல சம்பவங்களும்  அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. அவற்றுக்கான முக்கிய காரணம் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியாகும் கண்கவர் விளம்பரங்களாகும்.

இந்த மோசடிக்கார விஷமிகள், ஐரோப்பிய நாடுகள் அல்லது அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு சென்று விட்டால் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி குடும்பத்துடன் சென்று அங்கேயே தங்கிவிடலாம் என்ற எண்ணத்தையும், ஆசை என்னும் பசியையும் விளம்பரங்கள் மூலமும் பசப்பு வார்த்தைகள் மூலமும் தூண்டி, பொறியில் சிக்க வைக்கின்றனர்.

இந்த விடயத்தில், தகவல்களை உறுதிப்படுத்தாமல் ஏமாறுபவர்களின் கஷ்டம் அவர்களின் கண்களை மறைத்து விடுகிறது. விமோசனம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையும் முன்னேற வேண்டும் என்ற எண்ணமும் அவர்களை சிந்திக்க விடுவதில்லை போலும்.

இந்த நிலையில், வேலைவாய்ப்பு வழங்குவதாக வாக்குறுதியளித்து மோசடி செய்பவர்கள் தொடர்பில்,  வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பணியகம் அண்மையில் அறிவித்திருந்தது.

பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.slbfe.lk அல்லது 1989 என்ற 24 மணி நேர அவசர தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொள்வதன் மூலம், அனுமதிப்பத்திரம் உள்ள வேலைவாய்ப்பு முகவர்களை அடையாளம் கண்டு விழிப்புடன் செயற்படுவதே இப்போதைக்கு உசித்தமானது.

ஏனெனில், தற்போது இருக்கும் நெருக்கடியில், கடன் வாங்கியோ அல்லது உள்ள சொத்துகளை விற்றோ பெருந்தொகை பணத்தை கயவர்களிடம் காவு கொடுத்து விட்டு எஞ்சிய வாழ்க்கையையும் குடும்பத்தையும் மீண்டு வர முடியாத பெரும் கடன் சுமைக்குள் தள்ளிவிடாது, சிந்தித்து செயற்படுவதே காலத்தின் தேவையாகவுள்ளது. (20.09.2022)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .