2024 மார்ச் 28, வியாழக்கிழமை

உருண்டோடி விட்டாலும் உயிர்ப்பலியின் கறை கழுவப்படவில்லை

Editorial   / 2021 ஏப்ரல் 21 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

உருண்டோடி விட்டாலும் உயிர்ப்பலியின் கறை கழுவப்படவில்லை

இன்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர், இன்றைய போன்றதொரு நாளை எவரும் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள். இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த அந்த 2019ஆம் ஆண்டு 21ஆம் திகதி, அப்பாவி உயிர்கள் பல காவுகொள்ளப்பட்டன.

மனிதநேயமுள்ள மக்களின் வாழ்விலும், ஒரு துன்பகரமான நாளாகவே அன்று விடிந்தது. கொழும்பு, மட்டக்களப்பு, கட்டான உள்ளிட்ட எட்டு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள், வெடிப்புச் சம்பவங்களால் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் பலியெடுக்கப்பட்டனர்; கடுங்காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். இதனால், நாட்டின் பாதுகாப்பு மீதான சந்தேகம் வலுப்பெற்றது. பொருளாதார ரீதியில் அதுபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

தற்கொலைத் தாக்குதல்களால் பலர் கடுங்காயங்களுக்கு உள்ளாகி, அங்கவீனமாகினர். மீளாத்துயில் கொண்டிருப்பவர்களுக்கு இரண்டாவது வருட நினைவு இன்றையதினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. அதனையொட்டி, கிறிஸ்தவ தேவாலயங்களின் பாதுகாப்பு பன்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன-மத சௌஜன்யத்தை விரும்பாத குழுவொன்றால், மிலேச்சத்தனமாக அன்றையதினம் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களால் ஏற்பட்ட வடுக்கள், இன்னும் ஆறாமலே இருக்கின்றன.

ஆனால், நொண்டிச் சாட்டுகளைப் புரட்டிப்புரட்டி போட்டுக்கொண்டிருக்கும் அரசியல் களத்தில், ஒருவரையொருவர் நோக்கி விரல்களை நீட்டிக்கொள்கின்றனரே தவிர, உண்மையான குற்றவாளி, சட்டத்தின் முன் இன்னுமே நிறுத்தப்படவில்லை.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்கு உரிமைகோரிய அமைப்பைச் சேர்ந்த தலைவரென அறியப்பட்ட சஹ்ரானும், அவ்வமைப்பின் முன்னணி உறுப்பினர்களும் தற்கொலை செய்துகொண்டனர். இன்னும் பலர் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதல்கள் எதிர்காலத்திலும் இடம்பெறாதவகையில், தடுப்பதற்கான முன்னாயத்தங்களைச் செய்வதும், பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீண்டெழுவதற்கான உதவிக்கரங்களை நீட்டுவதுமே  உசிதமானதாய் இருக்கும்.

சந்தேக நபரொருவரை நீதிமன்றமே குற்றவாளியா அல்லது நிரபராதியா என்பதை இனங்கண்டு தீர்ப்பளிக்கும். ஆனால், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் குற்றவாளியை இனங்காணாவிடின், நாடளாவிய ரீதியில், போராட்டங்கள் வெடிக்குமென அறிவிக்கப்பட்டதன் பின்னர், குற்றவாளி சிக்கிவிட்டார் என்ற அறிவிப்பு திடீரென வெளியானது.

அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் முக்கியஸ்தர்கள், ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒருவரை குற்றவாளியாகச் சித்திரித்தனர். ஆக, நீதிமன்றத்தின் நான்கு சுவர்களுக்குள் தீர்ப்பளிக்க வேண்டிய சட்டம், எல்லைகளை கடந்து சென்றிருக்கிறது என்பது மட்டுமே அவ்வறிப்பின் ஊடாகத் தெட்டத்தெளிவானது.

குற்றவாளியை இனங்கண்டுவிட்டோம் என்பதெல்லாம், அப்பாவி மக்களுக்குப் பூச்சாண்டி காட்டுவதாகும். குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்கும் பொறிமுறையைத் தேடுதல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுதல், பாதுகாப்பை பலப்படுத்தல், எதிர்காலத்தில் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறாமல் தடுத்தல் என்பனவே எமது கண்முன்னே நிற்கும் ஆக்கபூர்வமானதும் முக்கியமானதுமான காரணிகளாகும். 21.04.2021


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X