2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஈனச்செயலை உடனடியாக கைவிடவும்

Editorial   / 2023 ஜனவரி 03 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணிகளை சூறையாடும் ஈனச்செயலை உடனடியாக கைவிடவும்

யுத்த காலத்திலும் அதற்கு பிந்திய காலங்களிலும் ஏன் இன்றுவரையிலும் சிறுபான்மையின மக்களுக்குச் சொந்தமான காணிகளை அடாத்தாக கைப்பற்றும், அபகரிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.  அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல போராட்டங்கள் இன்னுமே வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படுகின்றன.

இனப்பிரச்சினைக்கு பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திர தினத்துக்கு முன்னர் தீர்வு காணப்படுமென ஜனாதிபதி அறிவித்ததன் பின்னர் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், வடக்கு, கிழக்கில் படையினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் மக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் பிரதான கோரிக்கைகளில் ஒன்றாக இருந்தது.

படையினர் வசமிருக்கும் பொதுமக்களின் காணிகள் விடுக்கப்படுமென பேச்சுகளின் போது உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்த்தரப்பினர் அறிவித்திருந்தாலும் அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் கூட, இதுவரையிலும் முன்னெடுக்கப்படவே இல்லை என்பதுதான் யதார்த்தமாக இருக்கிறது.
இதற்கிடையில், தங்களுக்கு சொந்தமான பூர்வீக காணிகளை விடுவிக்க வலியுறுத்தும் போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றுக்கிடையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லக் காணிகளையும் சூறையாடும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மட்டக்களப்பு, தரவை மாவீரர் துயிலும் இல்லப் பகுதியை சூறையாடும் ஈனச்செயல் நடந்து கொண்டிருக்கின்றது எனக் குற்றஞ்சாட்டிய தரவை மாவீரர் இல்ல ஏற்பாட்டுகுழு தலைவர் லவக்குமார், காணி விவகாரத்துக்கு தீர்வு கிடைக்காவிடின்,   ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகளை தமிழ்த் தேசிய கட்சிகள்  புறக்கணிக்க வேண்டுமெனக் கோரியுள்ளார்.

சிறுபான்மையின மக்களுக்குச் சொந்தமான காணிகள், மிகவும் சூட்சுமமான முறையில் அபகரிக்கும் செயற்பாட்டை எந்தவோர் அரசாங்கமும் கைவிடவில்லை என்பது, தரவை மாவீரர் துயிலும் இல்லப் பகுதி விவகாரத்தில் இருந்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தொல்பொருள் ஆராய்ச்சி என்னும் போர்வைக்குள் மறைந்து​கொண்டு வடக்கில், தமிழர்களுக்குச் சொந்தமான காணிகளும் கிழக்கில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளும் அபகரிக்கப்பட்டுள்ளமை கடந்தகால கசப்பான உண்மையாகும்.

காணிகளை அபகரிப்பது மட்டுமன்றி, பலவந்தமாக குடியேற்றங்களை முன்னெடுப்பதையும் அரசாங்கம் கச்சிதமாக முன்னெடுத்துக்கொண்டுதான் இருக்கின்றது. சிறுபான்மை இன மக்கள் செறிந்துவாழும் வடக்கு, கிழக்கில் இவ்வாறான ஈனச்செயல்கள் முன்னெடுப்படுகின்றன. இது, அங்குவாழும் சிறுபான்மையின இனப்பரம்பலை சீர்குலையச் செய்யும் செயற்பாடாகும்.

இவையெல்லாம் எதிர்காலத்தில்  பெரும் தாக்கத்தைச் செலுத்தும். உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள், பாராளுமன்றம் ஆகியவற்றுக்கான பிரதிநிதிகள் தெரிவில் கடும் பாதிப்புகள் ஏற்படும் என்பதை, சிறுபான்மையின மக்களின் பிரதிநிதிகள் கவனத்தில் கொண்டு, பூர்வீக காணிகளை கபளீகரம் செய்வதை தடுத்து நிறுத்தவும், சுவீகரிக்கப்பட்டிருக்கும் காணிகளை மீளவும் பெற்றுக்கொடுக்கவும் வழிசமைக்க வேண்டும்.

ஜனாதிபதி ரணிலுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருக்கும் தரப்பினர், காணி விவகாரத்துக்கு கடுமையான அழுத்தங்களை பிரயோகிக்கவே வேண்டும். ஏனெனில், 2023 பெப்ரவரி 4ஆம் திகதிக்கு இன்னும் நீண்ட நாள்கள் இல்லையென்பதை நினைவூட்டுகின்றோம். 03.01.2023


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .