2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சுரண்டிப் பார்க்க ஒரு தருணம்

Editorial   / 2023 ஜனவரி 06 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஆணையை சுரண்டிப் பார்க்க ஒரு தருணம் கிடைத்துள்ளது

ஆட்சியில் இருக்கும் அரசாங்கம், தமது பலத்தை சுரண்டிப் பார்ப்பதற்கு முன்னர், தமக்கேற்ற சுற்றுவட்டத்தை ஏற்படுத்திக்கொண்டு, தேர்தலுக்குச் செல்லும். எதிர்பார்த்ததைப் போல மக்கள் ஆணை கிடைக்காவிடின், அடுத்தடுத்த தேர்தல்களுக்குச் செல்வதை காலந்தாழ்த்திவிடும்.

மற்றுமொரு புறத்தில் பார்த்தோமெனில், அரசாங்கத்தின் மீதான மக்களின் செல்வாக்கு உச்சம் தொட்டிருக்கும் நேரத்தில், மக்கள் மனங்கவர் வாக்குறுதிகளை அள்ளிவீசி, தேர்தலுக்குச் சென்று தமது பலத்தை நிரூபித்து காட்டிவிட்டு, பதவிக்காலம் நிறைவடையும் வரையிலும் தனது போக்கிலேயே சென்றுகொண்டிருக்கும்.

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் மட்டுமே சுரண்டிப் பார்க்கமுடியும். மாகாண, பாராளுமன்ற தேர்தல்களில் மக்களின் செல்வாக்கே, முக்கிய இடத்தை பிடித்திருக்கும். ஆக, சுரண்டிப் பார்ப்பதற்கான சந்தர்ப்பமொன்று கிடைத்துள்ளது.  
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான இந்த அரசாங்கம் தேர்தலுக்குச் செல்லவேண்டிய தருணமல்ல. எனினும், பதவிக்காலம் நிறைவடைந்ததன் பின்னர், தேர்தல் ஆணைக்குழு தேர்தலை நடத்தியே ஆகவேண்டும். அதனால்தான், உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு கோரப்பட்டுள்ளது.

24 மாநகரம், 41 நகரம், 276 பிரதேச சபைகள் உள்ளடங்களாக 341 உள்ளூராட்சி  சபைகளுக்கு,  ஜனவரி 18ஆம் திகதியிலிருந்து 21ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. இதற்கிடையில், உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்த​லை நடத்தினால், அரிசியை கொள்வனவுச் செய்யமுடியாத நிலைமை ஏற்படுமென ஆளும் தரப்பைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பகிரங்கமாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டை கட்டியெழுப்புவதற்கான அதிகாரங்களே தன்னிடம் வழங்கப்பட்டுள்ளன. ஆகையால், எந்தவொரு கட்சிக்கும் ஆதரவளிக்கமாட்டேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக அறிவித்துவிட்டார். உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பிலான ஆலோசனைகளை சட்டமா அதிபரிடம் அரசாங்கம் கோரியும் உள்ளது.  ஒரு சில கட்சிகளைப் பொறுத்தவரையில், வேட்புமனுக்களைத் தயார் செய்வதற்கான ஏற்பாடுகளையும் வேட்பாளர்கள் தெரிவையும்  மும்முரமாக முடுக்கிவிட்டுள்ளன. எனினும், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பே சகலவற்றையும் தீர்மானிக்கும்.  உள்ளூராட்சி மன்றங்களில் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகமாகும். அவற்றை குறைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்றத்தில் வைத்து அறிவித்திருந்தார். எனினும், அதுதொடர்பில் சகலருமே மௌனம் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

உள்ளூராட்சிமன்ற ​தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டதன் பின்னர், தேர்தலுக்குச் சென்றிருந்தால், உறுப்பினர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்திருக்கும். தெரிவுக்குப் பின்னரான செலவுகளையும் குறைத்து இருக்கலாம். எனினும், சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான ஆர்வத்தை பாராளுமன்றம் காண்பிக்கவில்லை.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் மூலமாகவே தமக்கான நேரடி பிரதிநிதியை மக்கள் தேர்ந்தெடுத்து கொள்வர். அதற்கான ஜனநாயக உரிமையும்   ஆணையை சுரண்டிப் பார்க்க தருணமும் கிடைத்துள்ளது. (06.01.2023)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X