2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

குதிரை ஓடிய பின்னர், லாயத்தை பூட்டினால்

Editorial   / 2021 மார்ச் 22 , பி.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

குதிரை ஓடிய பின்னர், லாயத்தை அடைப்பதில் பிரயோசனம் இல்லை

சில அறிப்புகள் வெளியாகும் போதுதான், சம்பவம் பலரது ஞாபகத்தையும் நெருடும். இன்னும் சிலர், அப்படியாவென வாயைப் பிளந்து கேட்டுக்கொண்டிருப்பர். அவற்றில் பல சம்பவங்கள், அரசியலுக்காக விழுங்கப்பட்டு, புதிய ஆட்சியில் வாந்தி எடுப்பவையாக இருக்கும்.

இன்னும் சில சம்பவங்கள், அதிகாரத்தைப் பயன்படுத்தி, மூடி மறைக்கப்பட்டவையாகவே இருக்கும். இரண்டிலுமே நிர்வாக துஷ்பிரயோகம் இடம்பெறாமல் இருப்பதற்கான வாய்ப்புகளே இல்லை. ஆட்சியதிகார துஷ்பிரயோகங்களுக்கு புதிய ஆட்சியிலேயே நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

ஆதலால், கடந்த ஆட்சியின் மோசடிகளை பின்னோக்கிச் சென்றுதான் பார்க்கவேண்டும். ஆனால், ‘அபிவிருத்தித் திட்டம்’ ஒன்றில் ஊழல், மோசடிகள் இடம்பெறுகின்றமை இனங்காணப்படுமாயின், அத்திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி, விசாரணைகளை முன்னெடுப்பதே உசிதமாகும்.

தேசிய, பிரதேச ரீதியில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் கண்காணிப்பதற்குக் கட்சிசார்பில்லாத குழுவொன்றை நியமித்துக் கண்காணித்தல் அவசியமாகும். ஏனெனில், எதிலும் ஊழலும் மோசடிகளும் சுரண்டல்களும் மலிந்து கிடக்கின்றன.

அதனோர் அங்கமாகவே, பதுளை-லுணுகலை 13ஆம் மைல்கல்லில் இடம்பெற்ற அகோர விபத்தைப் பார்க்க வேண்டியுள்ளது, 15 பேரைப் பலியெடுத்து, 45 பயணிகளைக் காயப்படுத்திய அந்தச் சம்பவம், கொரோனா வைரஸின் ஞாபகத்தைச் சற்று மறக்கடிச் செய்துள்ளது. எனினும், சுகாதார வழிகாட்டல்கள் பஸ்ஸில் கடைப்பிடிக்கப்படவில்லை என்பது தெட்டத்தெளிவாகி இருக்கிறது. 

வீதியைச் செப்பனிட்ட நிறுவனமொன்று, வீதியில் சரிந்துநிற்கும் கற்பாறையை அகற்றாமையால், அவ்விடத்தில் வீதி குறுகிவிட்டதாகவும் பலமுறை எடுத்துகூறியும் அதிகாரத்தில் இருந்தவர்கள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை என்பதே பிரதேசவாசிகளின் குற்றச்சாட்டாகும்.

பல வளைவுகளைக் கொண்டிருக்கும் மலைப்பாங்கான பிரதேசங்களில், சீரற்ற வானிலையால் அவ்வப்போது மண்சரிவுகள் ஏற்படும். கருங்கல் பாறைகளும் புரண்டு விழும்; எனினும், வீதி பராமரிப்பாளர்கள் இன்றேல், வீதியைச் செப்பனிடுவோர், மண் திட்டை மட்டும் அகற்றிவிட்டு, பாறைகளைக் கைவிட்டுச் சென்றுவிடுவர் என்கின்றனர்.

ஆகையால், வீதிப் பராமரிப்பு அல்லது செப்பனிடுவதற்காகக் குத்தகைக்கு வழங்கும் நிறுவனங்களுக்குக் கடும் சட்டதிட்டங்களை வகுப்பது  அதிகாரிகளின் தார்மிக கடமையாகும். மெத்தைக் கடைக்கு அண்மையில், வீதியில் சரிந்து கிடக்கும், பாறாங்கல்லை அகற்றியிருந்தால், பல ஊர்களில் இன்று மரண ஓலங்கள் கேட்டிருக்காது.

அதேபோல, ஒரே வீதியில் அன்றாடம் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளுக்கு, வீதியின் நெளிவு சுழிவுகள், ஆபத்தான இடங்கள், மேடுபள்ளங்கள், வளைவுகள், நன்கு நினைவில் நிற்கும். ஏன்? ஒலியெழுப்ப வேண்டிய இடங்களில் தானாகச் சென்று ஆழியைக்  கைகள் அழுத்திவிடும்.

அப்படியிருக்கையில், வேகத்தை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தி இருந்தால், இவ்வனர்த்தம் ஏற்பட்டிருக்காது என்பதே பலருடைய கருத்தாகும். இருப்பினும், வீதியில் சரிந்திருக்கும் பாறாங்கல்லையே பிரதான சூத்திரதாரியாகப் பலரும் கூறுகின்றனர். ஆகையால், பந்தை பரிமாற்றிவிடாது, நீதியை நிலைநாட்டுவதே படிப்பினையாக அமையும். (22.03.2021)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .