2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

16க்கு 16 பந்து எவரது கைகளில் இருக்கிறது

Editorial   / 2021 மார்ச் 25 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

46/1 புதிய பிரேரணையில் 16க்கு 16 பந்து எவரது கைகளில் இருக்கிறது

கடந்த ஒரு மாத காலமாகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்க சமர்ப்பிக்கப்பட்ட 46/1 பிரேரணைக்கு 22 நாடுகள் ஆதரவளித்து நிறைவேற்றியுள்ளன.

இலங்கை அரசாங்கத்தின் கடந்த ஒரு வருடகால நிலைமைகள், திருப்திகரமாக இல்லையென அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக, யுத்த காலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட விடயங்கள், இந்தப் பிரேரணையில் உள்ளடக்கப்படவில்லை என்பது மட்டுமே உறுதியாகியுள்ளது. அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டாலும் பயங்கரவாத தடைச்சட்டம் இன்னும் அமுலிலேயே இருக்கிறது. அதன்கீழ், பலரும் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். அச்சட்டத்தின் கீழ் கைதானவர்களுக்கு பிணை என்பது, நினைத்தும் பார்க்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது. அச்சட்டத்தை மீளாய்வு செய்யுமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட 46/1 பிரேரணையில், 16 பரிந்துரைகளும் 16 அவதானிப்புகளும் உள்ளக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் ஊடாக, இலங்கை தோல்வியடைந்திருந்தாலும் அது தமிழர்களுக்கான நீதியல்ல என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. ஏனெனில், பிரேரணைக்கான பொறுப்புக்கூறல் இலங்கை அரசிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படும் காலப்பகுதிக்குள் வடக்கு,கிழக்கில் உரிமைப் போராட்டங்களும் தென்னிலங்கையில் ஐ.நாவுக்கு எதிரான ​எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் ​முன்னெடுக்கப்படுவது வழமையாகும். பிரேரணை நிறைவேற்றப்பட்டமையால் பல போராட்டங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

காணாமால்போன தங்களுடைய உறவுகளைத் தேடி முன்னெடுக்கப்படும் போராட்டம், மிக வலுவானதாய் இருக்கிறது. அப்போராட்டத்தில் பங்கேற்றிருந்த பலர், மரணித்தும் உள்ளனர். இந்நிலையில், காணாமல் போனோர், இழப்பீடு அலுவலகம் என்பன சுயாதீனமாக இயங்கவேண்டுமென பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புரையோடிப் போயிருக்கும் பிரச்சினையான தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், சகல அரசியல் கட்சிகளுடனும் பேச்சு நடத்தி, ஓர் இணக்கப்பாட்டில் அரசியல் தீர்வைக் காணுமாறும் கோரப்பட்டுள்ளது. ஆக, அரசாங்கத்தின் கைகளிலே​யே பந்து பாரப்படுத்தப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டிலிருந்து ஒப்பிட்டுப் பார்க்கும் போது, மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு, இலங்கைக்கு கிடைத்த ஆதரவு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வருகின்றமையை அவதானிக்கக்கூடியதாய் உள்ளது.  2015-2019 நல்லாட்சி காலப்பகுதியில் இலங்கை இணை அனுசரணை வழங்கியதால், வாக்கெடுப்பின்றி பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், 2021 பிரேரணைக்கு ஆதவாக 22 நாடுகள் வாக்களித்துள்ளன. அப்பிரேரணைக்கு எதிர்ப்பைத் தெரிவித்த 11 நாடுகள் மட்டும் வாக்களிப்பைத் தவிர்த்த 14 நாடுகளையும்  கூட்டினால், ஆதரவு குறைவாகுமென்பது அரசாங்கத்தின் கூட்டல் கழித்தலாகும்.

நாட்டின் இறைமைக்குள் யாரும் தலையிடமுடியாது. ஆனால், இறைமை, ஒருமைப்பாட்டு, நல்லிணக்கம், பொறுப்புகூறல் ஆகியவற்றுக்குப் பங்கம் ஏற்படுத்தாதவற்றை நிறைவேற்றினால், சர்வதேசத்தின் தலையீடுகள் குறையும் என்பதே எங்களது வலியுறுத்தலாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X