2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மறுக்கப்படும் கருக்கலைப்பு

Princiya Dixci   / 2021 ஜூலை 17 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறைந்து போகும் உயிர்கள்

பெண்ணின் பிரசவ வலிக்கு முன்னால், ஓர் ஆண்மையின் வீரமும் மண்டியிட்டு வணக்கும் என்கின்றனர். பிரசவம் என்பது பெண்களின் பிறப்புரிமை. அதையே நிஜப் பெண்ணுரிமை எனலாம்.

அந்த உரிமை தனக்கு வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை பெண்ணே தீர்மானிக்க வேண்டும். ஆனால், அந்த உரிமை இங்கு மறுக்கப்படுகின்றது. விருப்பம் இல்லாவிட்டாலும் அவர்கள் பிரவசத்துக்குத் திணிக்கப்படுகின்றனர்.

இதனால், திரை மறைவுக்குப் பின்னால் நிகழும் சட்டவிரோதக் கருக்கலைப்புகள் ஒவ்வொன்றும் பல ஆயிரம் வலிகளை சுமந்துநிற்கின்றன.

இலங்கையில் ‘கருக்கலைப்பு’ என்பது சட்டவிரோதச் செயலாகும். எனினும், கருக்கலைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று, நாட்டின் வைத்திய நிபுணர்கள் நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகின்றனர். இந்த வலியுறுத்தல்கள் அனைத்தும் செவிடன் காதில், சங்கு ஊதுவதாகவே இன்று வரை உள்ளன. 

இதன் துரதிர்ஷ்டத்தாலோ என்னவோ, இவ்வார ஆரம்பத்தில் பறிபோன இரு உயிர்களைப் பற்றி இங்கு யாரும் பெரிதாக அலட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை.

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட   மோரா தோட்ட மேற்பிரிவிலுள்ள வீடொன்றில், நான்கு பிள்ளைகளின் தாயொருவர் (வயது 36) திடீரென இறந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த திங்கட்கிழமை (12) இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில், தகவலறிந்து அவ்வீட்டுக்குச் சென்ற பொலிஸார், வீட்டிலிருந்த இரத்தகறைபடிந்த ஆடைகள் சிலவற்றை மீட்டனர். அத்துடன், ஆடையொன்றால் சுற்றப்பட்டிருந்த சுமார் 7 மாதங்கள் மட்டுமே மதிக்கத்தக்க பெண் சிசுவொன்றின் சடலத்தையும் மீட்டனர்.

வீட்டுக்குள் வைத்து மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோதமான கருக்கலைப்புக் காரணமாகவே, இவ்விரு உயிரிழப்புகளும் இடம்பெற்றிருப்பதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, மரணமடைந்த பெண்ணுடன் அடிக்கடி தொடர்பைப் பேணிவந்த 35 வயதான பெண்ணொருவரை, சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்தனர்.  

தடயவியல் பொலிஸார், சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டதுடன், ஹட்டன் மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் மரண விசாரணைகளும் இடம்பெற்றன. பின்னர், பிரேத பரிசோதனைக்காக சடலம், டிக்கோயா-கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

அதன்பின்னர், இந்தச் சம்பவம் குறித்த பின்னணியை யாரும் தேடியதாக இல்லை. இலங்கையில் நாளொன்றுக்கு 600 -1000 வரையிலான சட்டவிரோத கருக்கலைப்பு இடம் பெறுவதாகக் கூறப்படுகின்றது. இது தாய்மாருக்கு பெரும் ஆபத்தாகவும் அமைகின்றது.

உண்மையில், இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்காகவே கருக்கலைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டுமென வைத்திய நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

குறைந்தபட்சம் இரண்டு காரணங்களுக்காக கருக்கலைப்புச் செய்வதற்கு அனுமதிக்க வேண்டுமென அவர்கள் வாதிடுகின்றனர். முதலாவது, கடுமையான ஊனமுடைய கருவை தாய் சுமக்கும்போது. இரண்டாவது, பாலியல் வன்புணர்வு காரணமாக ஒரு பெண் கருத்தரிக்கும்போது.

இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் கருக்கலைப்புச் செய்வதாக இருந்தால் இரண்டு விசேட வைத்திய நிபுணர்களின் அனுமதியைப் பெறுவது அவசியமாகும். இருந்தபோதிலும் கருக்கலைப்புச் செய்துகொள்வதா இல்லையா என்பது குறித்த இறுதி முடிவை எடுக்கும் உரிமையை கருவை சுமக்கும் தாய்க்கு வழங்கவேண்டும் என வைத்திய நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகின்றது.

இந்த இரண்டு விடயங்களையும் உள்ளடக்கிய புதிய சட்ட சீர்திருத்தத்துக்கு கடந்த அரசாங்கத்தில், அதாவது 2017ஆம் ஆண்டு அனுமதியளிக்கும் வகையில் ஆலோசனை அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டது.

இந்த அறிக்கைக்கு அமைச்சரவையில் அங்கிகாரமும் பெறப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், நீதி அமைச்சின் அதிகாரபூர்வ கோரிக்கைக்கு இன்று வரை காத்திருப்பதாக சட்ட வரைவுத் திணைக்களம் கூறுகின்றது.

இவ்வாறு கருக்கலைப்புச் சட்டத் திருத்த வரைவு தடைப்பட்டிருப்பதற்கு மதத் தலைவர்களிடமிருந்து எழுந்த பாரிய எதிர்ப்புகளே பிரதான காரணமாக அமைந்துள்ளன.

பௌத்தம், கத்தோலிக்கம், இஸ்லாமிய மதத் தலைவர்கள் எந்தவொரு காரணங்களுக்காகவும் கருக்கலைப்பு என்பது சட்ட ரீதியாக அனுமதிக்க முடியாது எனத் தொடர்ந்து தெரிவித்து வருவதால் இது தொடர்பான திருத்தச் சட்டத்தை கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

பொதுவாக பெண்களின் இனப்பெருக்க உரிமைகள் பற்றி பார்க்கும்போது, வைத்திய நிபுணர்கள் பரிந்துரைத்துள்ள இரு சந்தர்ப்பங்களிலாவது கருக்கலைப்புக்கு அனுமதியளிக்காவிட்டால், அல்லது அதற்கு எதிராகச் செயற்படுவார்களேயானால் இந்த நாட்டில் பெண்களுக்கான அடிப்படை உரிமை கூட இல்லையென்றே கருத வேண்டும்.

இலங்கையில் கருவினால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரமே கருக்கலைப்புச் செய்யலாம் என குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 303 பிரிவு கூறுகிறது.

இலங்கையில் வருடாந்தம் சராசரி 6,000 பிறப்புக் குறைபாடுடைய பிரசவங்கள் இடம்பெறுவதாக சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார நிலையத் தகவல்களின்படி அறியமுடிகிறது. கருவில் குறைபாடு இருக்கு என மருத்துவ ரீதியாக ஆரம்பத்திலேயே கண்டறியப்படுகின்ற போதிலும், கருக்கலைப்புச் செய்ய முடியாத காரணத்தால், 10 மாங்களுக்கு அக்கருவை சுமக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குப் பெண்கள் பலர் தள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு கருவில் குறைபாடுகளுடன் பிறக்கும் 68 சதவீதமான சிசுக்கள் ஒரு வாரத்துக்குள் இறக்கின்றன என்றும் 500 - 600 வரையிலான சிசுக்கள் ஒரு வருடத்துக்குள் இறக்கின்றன என்றும் 1,700 சிசுக்கள் தாயின் கருவிலே உயிரிழக்கின்றன என்றும் சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார நிலையம் சுட்டிக்காட்டுகின்றது.

அடுத்து வன்புணர்வுகளால் ஏற்படும் கர்ப்பம் தரித்தல்களை நோக்குமிடத்து, இலங்கையில் பெரும்பாலான சிறுமிகளும் பெண்களும் குடும்பத்தில் நெருங்கியவர்களாலேயே வன்புணர்வுகளுக்கு உள்ளாகின்றனர். இதற்கு தற்போது வெளியாகியிருக்கு 15 வயது மற்றும் 13 வயது சிறுமிகள் இருவரது துஷ்பிரயோகங்களுமே சாட்சிகளாக நிற்கின்றன. இவர்கள் இருவருமே தமது தந்தையர்களாலேயே முதன்முதலில் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் பலருக்குக் கைமாற்றப்பட்டுள்ளனர். 

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில், சிறுமி அல்லது பெண் ஒருவரின் வயிற்றில் தன்னை வன்புணர்வுக்கு உட்படுத்திய நபரின் சிசு வளரும்போது, அந்தக் கருவைப் பற்றிய அவரது உணர்வு, நிச்சயம் உயிர்க் குமுறலாக, மன வலியின் உச்சமாகவே இருக்கும்.

சிசு பிறந்த பின்னர், அந்தக் சிசுவின் மீதான தாயின் எண்ண ஓட்டம் எப்படியிருப்பும் என்பதை எழுத்துகளால் விவரிக்க முடியாது. தனது தந்தை, சகோதரன், சித்தப்பா, பெரியப்பா, மாமா, தாத்தா போன்ற நெருங்கிய உறவுகளால் வன்புணர்வுக்கு உட்பட்டிருந்தால் கூட பெண் கருக்கலைப்பில் ஈடுபடக்கூடாது என வாதிடுகின்றவர்களை என்னவென்று கூறுவது?

இலங்கையில் மேற்கொள்ளப்படும் பெரும்பாலான சட்டவிரோத கருக்கலைப்புகள் திருமணமான பெண்களினால் மேற்கொள்ளப்படுகின்றன. தவறான உறவின் மூலம் உருவான கருவை அழிப்பதற்காக இவர்கள் கருக்கலைப்பில் ஈடுபடவில்லை. சட்டரீதியான திருமணத்தின் மூலம் உருவான கருவை, பொருளாதார நெருக்கடி அல்லது வேறு காரணங்களுக்காக கருக்கலைப்புச் செய்கிறார்கள் என்பதே துரதிர்ஷ்டம்.

சற்று வளர்ந்த கருவொன்றை கலைப்பதற்கு அல்லது நீக்குவதற்கு பெண் உறுப்பினூடாகக் கூரான ஆயுதமொன்றைச் செலுத்தி, வளர்ந்த கருவை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, பெண்ணுறுப்பினூடாக வெளியில் எடுக்கப்படுகிறது. இவ்வாறான முயற்சிகள் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் போது, இறுதியில் அதிக இரத்தப் போக்கு ஏற்பட்டு, அப்பெண் உயிரிழக்கக்கூடிய நிலை ஏற்படுகின்றது.

ஒரு பிரசவத்தில் சிசு மட்டுமல்ல, ஒரு தாயும் சேர்ந்தே பிறக்கிறாள். இந்தப் பிரசவ உயிர்வலி தனக்கு வேண்டுமா வேண்டாமா என்பதை பெண்ணானவளே தீர்மானிக்க வேண்டும்.

ஒரு கட்டுரையாளராக நான் கருக்கலைப்பை இங்கு நியாயப்படுத்தவில்லை. எனினும், நாட்டில் கருக்கலைப்புகள் மறுக்கப்படுவதால், பல சந்தர்ப்பங்களில் ஓர் உயிர்க்குப் பதில் இரண்டு உயிர்கள் பலியாகும் துரதிர்ஷ்டத்தை நிச்சயம் தடுக்க வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X