2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

செதுக்கப்படாத மறுபாதி

Johnsan Bastiampillai   / 2021 ஒக்டோபர் 11 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரவிச்சந்திரன் பிரஷாஹினி
(நான்காம் வருடம்,
ஊடக கற்கைகள் துறை,
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்) 
prashaprashahini@gmail.com

மலையகம் என்ற உடனே ஞாபகம் வருவது தேயிலைகள் தான். அது என்னவோ, ஒரு பக்கம் சார்பாக பேசி வருபவர்கள் மலையகத்தின் மறுபாதி பக்கத்தை மறந்துவிடுகின்றனர். மலையக மக்களின் அன்றாட வாழ்க்கை தேயிலை செடியினை மட்டுமே நம்பியதாக இல்லை. அம்மக்களின் பொருளாதாரத்தில் இறப்பர் மரமும் பாரிய பங்காற்றி வருவதை பற்றி யாரும் அவ்வளவாக பேசவில்லை என்பதே உண்மை. 

மலையகப் பிரதேசங்களில் பொறுத்தவரையில் குறிப்பாக இறப்பர் மரத்தினையும் இறப்பர் பாலையும் நம்பியும் அன்றாடப் பிழைப்பு உள்ளது. 

பதுளை மாவட்டத்தின் ஹொப்டன் பிரதேசத்தில் வாழ்கின்ற ஒரு சிறிய குடும்பம் அது. பெருந்தோட்ட நிர்வாக ரீதியாக இறப்பர்பால் உற்பத்தி ஒருபுறம் இருந்தாலும், சுய தொழிலாக இறப்பர் உற்பத்தி செய்பவர்கள் இவர்கள் என்பதை  சமரவீரவுடனான உரையாடல் மூலமாக அறியமுடிந்தது. 

கேள்வி: பொதுவாகவே இந்த இறப்பர் உற்பத்தியினை நீங்கள் எவ்வாறு மேற்கொண்டு வருகிறீர்கள்? பாலாக இருந்து இறப்பர் சீட்டாக மாற்றுவதற்கு இடையிலான வேலைகள் எப்படியானவை?

பதில்: குறிப்பாக நான், என் மனைவி இரண்டு பேரும் இணைந்து இதனை செய்து வருகிறோம். ஒரு சிறிய இறப்பர் தோட்டம் உள்ளது. என் வீட்டிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை செல்ல வேண்டும். குறித்த நேரத்துக்குள் சென்று இறப்பர் பாலை  சேகரித்து வந்தால் தான், தொடர்ந்து வேலைகள் செய்து முடிக்கலாம். எனவே நான் அதிகாலை 3 மணியளவில் தேநீர் அருந்தி விட்டு புறப்பட்டு செல்வேன். பின்னர் இறப்பர் மரத்தை தேர்ந்தெடுத்து முந்தையநாள் வெட்டி சிந்திய பாலை சுத்தம் செய்துவிட்டு உளியால் மரப்பட்டையை அகற்ற வேண்டும்.

மரப்பட்டையை உளியால் சீவியவுடன் பால் கசிய ஆரம்பிக்கும். மரத்தில் கட்டி உள்ள கோப்பையில் வழிந்து நிரம்பும். இவ்வாறு ஒவ்வொரு மரமாக சீவி பின்னர் இரண்டு மூன்று மணித்தியாலங்களின் பின்னர் கோப்பையில் சிந்திய பால் அனைத்தையும் மீண்டும் பெரிய வாளியில் ஊற்றி வீட்டிற்கு கொண்டு வருவேன். பின்னர், எனது மனைவி இறப்பர் தட்டுகளை அடுக்கி இரண்டு லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் கோப்பை வீதம் தட்டுகளில் பாலை ஊற்றுவார். இவ்வாறு ஒவ்வொரு தட்டிலும் ஊற்றிய பின்னர் இறப்பர் அசிட்டை யோகட்கப்பில் அரைவாசி என்ற வீதம் ஊற்றி பாலில் கலந்த பின்னர் 4 அல்லது 5 மணி நேரம் அது கெட்டியாக விடவேண்டும்.

அதற்கு அடுத்ததாக இறப்பரை மெல்லியதாக்கும் இயந்திரத்தில் மூன்று முறை போட்டு கணக்கான அளவு மெல்லியதாக்க வேண்டும். அதன் பின்னர் அச்சு பதிக்கும்  இயந்திரத்தில் போட்டு அச்சுபதித்த பின்னர் இரண்டு மூன்று நாள்கள் வெயிலில் உலர விட்டு  தூசிகள், கழிவுகள் அகற்றிய பின்னர் அது விற்பனைக்கு தயாராகி விடும்.

கேள்வி: இதில் இத்தனை வேலைகளையும் நீங்கள் இருவர் மட்டுமே செய்கிறீர்கள். உங்களுக்கு இதில் பிரச்சினைகள், சிக்கல்கள் எதுவும் இல்லையா?

பதில்: (சிரிப்புடன் ) ஏன் இல்லை? அதிகாலை எழுந்து அத்தனை கிலோமீட்டர் தூரம் காட்டினை கடந்து தான் செல்ல வேண்டும். செல்லும் வழியில் காட்டு விலங்குகளின் அச்சுறுத்தல்கள் அதிகமாக இருக்கும். சில சமயங்களில் காட்டு யானைகள், பாம்புகள் கூட தென்படுவது உண்டு. அவற்றை எல்லாம் கடந்து தான் சென்று பால் வெட்ட வேண்டும். பாதையும் சீராக இருக்காது. வாகனத்தில் பயணிக்கும் போது மிகச் சிரமமாக இருக்கும். என்ன செய்வது இவற்றை எல்லாம் பார்த்தால், குடும்ப வருமானம் என்னாவது? எந்தத் தொழிலில் தான் பிரச்சினை இல்லை?

கேள்வி: இரண்டு பேர் மட்டுமே முழு வேலைகளையும் செய்கிறீர்கள். உங்களால் மட்டும் எப்படி சமாளிக்க முடிகிறது?

பதில்: ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் போகப்போக பழக்கத்துக்கு வந்துவிட்டது. நான் பாலை சேகரித்து வந்தவுடன் அதற்கடுத்த வேலைகளை இருவரும் இணைந்தே செய்வோம். என் மனைவி வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்த பின்னர் எனக்கு உதவுவார். எனவே, இருவரும் இணைந்தே இயந்திரங்களை இயக்குவோம். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டம் என்றாலும் கூட, என் மனைவி எனக்கு பக்கத்துணையாக இருப்பதால் நீண்ட காலமாக என்னால் இதனை செய்ய முடிகிறது.

கேள்வி: இறப்பர் பாலினை உற்பத்தி செய்யும் போது என்ன மாதிரியான விடயங்கள் உங்களுக்கு சவாலாக இருக்கும்?

பதில்: இறப்பர் பால் சேகரித்து வருவது எளிமையாக இருந்தாலும் இறப்பர் பாலை கெட்டியாக்குவதுதான் மிகவும் சிரமம். பால், நீர், அசிட் என்பவற்றை சரியான அளவில் கலக்க வேண்டும். அத்துடன் இயந்திரங்களை கைகளாலேயே இயக்குவதும், அச்சு பதிக்காவிட்டால் அவை விற்பனைக்கு உகந்ததற்றதாக ஆகிவிடும். அத்தோடு தரம் பிரிக்கும் போதும் தூசுக்கள் இருந்தால் அவை தரம் குறைவு என குறைவான விலைக்கே விற்பனையாகும். 

இலங்கையைப் பொறுத்தவரையில் இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இறப்பர் பால் பதனிடும் தொழிற்சாலைகள் காணப்படுகின்றன. இறப்பர், பிளாஸ்டிக் சார் கைத்தொழிலுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சந்தை வாய்ப்பு காணப்படுகின்றது. எனவே பதப்படுத்தப்படும் இறப்பர் பால், உள்நாட்டில் உள்ள இறப்பர் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்படுவதுடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது  இலங்கையில் பொருளாதாரத்தில் வருமானத்தை ஈட்டி தருவதில் முக்கிய பங்கினை ஆற்றுகின்றது.

இறப்பர் உற்பத்தியினை பொறுத்தவரையில் இறப்பர் தொழிற்சாலைகளில் பணி புரிதல், இறப்பர் பால் சேகரித்தல் போன்றவற்றிற்காக பெருமளவு தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். இறப்பர் உற்பத்தி மேற்கொள்ளப்படும் பிரதேசங்களிலுள்ள பெரும்பாலான ஆண்கள், பெண்கள் இறப்பர் தோட்டங்களில் குறைந்த கூலியில் தொழில் புரிகின்றார்கள். 

2021.03.01ஆம் திகதி வெளியிடப்பட்ட அமைச்சரவை தீர்மானத்துக்கான ஊடக அறிக்கையில், இலங்கையில் இறப்பர் செய்கை மற்றும் அது சார்ந்த கைத்தொழில் அபிவிருத்தி குழு ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டது.

பொதுவாகவே, மலையகத்தைப் பொறுத்தவரையில் தேயிலைச் செடிகள் பற்றிய எண்ணக்கரு, தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பற்றிய பிரச்சினைகள் மட்டுமே பேசப்படுகிறது. ஆனால் மலையக பிரதேசங்களில் இறப்பர் உற்பத்தியினை சுய தொழிலாக மேற்கொண்டு வருபவர்கள் பற்றியும் இறப்பர் உற்பத்தியில் உள்ள பிரச்சினைகள் பற்றியும் பேசுவது கிடையாது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .