2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

முஸ்லிம்களும் புதிய திருத்தமும்

Johnsan Bastiampillai   / 2022 நவம்பர் 02 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு உள்ளதை அரசாங்கம் கொண்டாடுகின்றது. இதன்மூலம் உள்ளக குழப்பங்கள், குத்துவெட்டுகளை எல்லாம் மறைத்து, அரசியல் பலமும் ஸ்திரத்தன்மையும் இன்னும் இருப்பதான ஒரு விம்பத்தைக் கட்டியெழுப்ப, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கமும் முயல்கின்றது. 

பாராளுமன்றத்தில் ஒக்டோபர் 21ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 22ஆம் திருத்தச் சட்டமூலத்தில், சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்த்தன நேற்று (31) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். அத்துடன், இந்த 22ஆவது திருத்தச் சட்டமூலம், அரசியலமைப்பின் 21ஆவது திருத்தமாக நேற்று முதல் (31) அமலுக்கு வந்தது.   

அரசியலமைப்பு திருத்தங்கள், சட்டத் திருத்தங்கள் ஒட்டுமொத்தமாக மக்கள் நலனைக் கருத்தில் கொண்டது என்று ஆட்சியாளர்கள் கூறி வருகின்ற போதிலும், 90 சதவீதமான திருத்தங்கள், சட்டமூலங்கள், கொள்கை வகுத்தல்கள் ஆகியவற்றுக்குப் பின்னணியில் அரசியல் தரப்பினரின் ‘அரசியல் நலன்’ என்ற காரணி, எப்போதும் செல்வாக்குச் செலுத்திக் கொண்டே இருக்கின்றது. 

அரசியலமைப்பு திருத்தங்கள் நிறைவேற்றப்படுவதை, சிறுபான்மைச் சமூகங்களால் முற்றுமுழுதாக தடுக்க முடியாது. சில சந்தர்ப்பங்களில் தமிழ், முஸ்லிம் எம்.பிக்கள் எல்லோரும் ஒன்றிணைந்தால், அவ்வாறான அசாதாரண நிகழ்வுகள் சாத்தியப்படலாம். என்றாலும், பொதுவில் இன்றைய நிலைவரப்படி அது நடைமுறைச் சாத்தியமற்றது. 

இருப்பினும், வகுக்கப்படுகின்ற கொள்கைகள், சட்டத் திருத்தங்கள், யாப்புத் திருத்தங்கள் உள்ளடங்கலாக அனைத்து விதமான அரச தீர்மானங்களிலும் ஒரு சமூகமாக, தனித்த இனக் குழுமமாக தங்களுடைய நலனையும் வகிபாகத்தையும் முடியுமானவரை உறுதிப்படுத்த வேண்டிய தேவை, பெரும்பான்மைச் சமூகத்துக்கும் உள்ளது; சிறுபான்மை இனங்களுக்கும் உள்ளது. 

அந்த வகையில், கடந்த காலங்களில் யாப்புத் திருத்தங்கள், சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்ட போது, முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் எவ்வாறு அப்பணியைச் செவ்வனே செய்திருக்கின்றார்கள்? அதேபோல், 22ஆவது திருத்தத்திலாவது தமது சமூகத்துக்காக புத்திசாலித்தனமாக செயற்பட்டு இருக்கின்றார்களா என்று ஆராய வேண்டியுள்ளது. 

அரசியலமைப்பின் 17,18,19,20,22 ஆவது திருத்தங்கள் நிறைவேற்றப்பட்ட போது, முஸ்லிம் கட்சிசார் மற்றும் பெரும்பான்மையினக் கட்சிசார் முஸ்லிம் எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் இருந்தனர். சிலர் இடைக்காலத்தில் பதவியிழந்த போதிலும், கணிசமானோர் மேற்படி எல்லாத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் எம்.பிக்களாக பதவி வகித்தனர். 

குறிப்பாக, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அரசியல் களத்தில் இயங்குநிலையில் இருந்தன. 19ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்ட போது, தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லா மட்டும் எம்.பியாக இருக்கவில்லை. 

அதுதவிர, மேற்குறித்த எல்லா திருத்தங்களின் போதும், மூன்று கட்சித் தலைவர்களும் நாடாளுமன்றில் அங்கம் வகித்தனர். பிரதான முஸ்லிம் கட்சிகளுக்கு எம்.பிக்களும் இருந்தனர். அத்துடன் அண்ணளவாக 20 இற்கு குறையாத முஸ்லிம் எம்.பிக்கள் சபையில் இருந்தனர்.

எனவே, ஒவ்வொரு திருத்தத்துக்கும் கையை உயர்த்துகின்ற முஸ்லிம் எம்.பிக்கள் இந்தத் திருத்தங்களில், முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகள் உறுதிப்படுத்தபடுவதற்கு பாடுபாட்ட கடந்தகால பதிவுகள் உண்டா? அல்லது சமூகத்துக்குப் பாதிப்பான அரசியல் தீர்மானங்களை, கூட்டாக எதிர்த்த வரலாறு இருக்கின்றதா?

எந்தவோர் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலோ, சட்டமூலம் தொடர்பிலோ அதிலுள்ள சாதக-பாதங்களை முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் தமது மக்களுக்கு தெளிவுபடுத்தவில்லை. மாறாக, முட்டாள்தனமாகத் தாம் மேற்கொண்ட தீர்மானங்களையும், சரி என நியாயப்படுத்துவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். 

தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள 22ஆவது திருத்தத்தில், நல்ல பல விடயங்கள் உள்ளன என்பதை மறுக்கவியலாது. இதன் பின்னால் யாருக்கு உள்நோக்கம் இருந்தாலும், பொதுவில் இது மிகவும் வரவேற்கத்தக்க ஒரு திருத்தமாகவே நோக்கப்படுகின்றது. 

அரசியலமைப்பு சபையை ஸ்தாபித்தல், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமித்தல், தேசிய பெறுகை ஆணைக்குழு, கணக்காளர் ஆணைக்குழுவை  உருவாக்குதல், அமைச்சுகளின் எண்ணிக்கை, பிரதமர் பதவி நீக்கம் தொடர்பான சரத்து, இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பான ஏற்பாடு, இரண்டரை வருடங்களில் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் போன்றவை இதில் உள்ள முக்கியமான விடயங்களாகக் கருதப்படுகின்றன.  

இத்திருத்தத்தின்படி, அரசியலமைப்பு சபைக்கு அதிக அதிகாரம் வரும் என்பதும், ஆணைக்குழுக்களின் தலைவர் மற்றும் உறுப்பினர் நியமனத்தின் போது அரசியலமைப்பு சபையின் ஆலோசனையானது தவிர்க்க முடியாததாக ஆக்கப்பட்டிருக்கின்றது என்பதும் இங்கு முக்கியமானது. இதனை முஸ்லிம்கள் ஒரு சமூகமாக கூர்ந்து கவனிக்க வேண்டும். 

அதாவது, முக்கியமான ஆணைக்குழுக்களிலாவது நியாயமான அடிப்படையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். அப்படியாயின் ஆணைக்குழுக்களை நியமிக்கின்ற அதிகாரத்தைக் கொண்டுள்ள அரசியலமைப்புப் பேரவையில் முஸ்லிம்களின் வகிபாகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். 

இதுவரையும் 22ஆவது திருத்தத்தின் இறுதி வடிவம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. என்றாலும், இதற்கு முன்னைய இரு திருத்தங்களில் காணப்பட்டதைப் போல (பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அல்லது பன்மைத்துவ சிந்தனையுடைய) புத்திஜீவிகள், விடயம்சார் தொழில்வாண்மையாளர்கள் உள்வாங்கப்படும் விதத்திலான சொற்பிரயோகத்தையே 22 ஆவது திருத்தமும் கொண்டிருக்கும் என முஸ்லிம் அரசியல் நோக்கர் ஒருவர் கூறுகின்றார். 

இதற்கு முன்பிருந்த இதேபோன்ற இரு சபைகளில் இரு முஸ்லிம் பிரதிநிதிகள் இருந்தார்கள். அவர்கள் தமது அதிகாரத்துக்கு உட்பட்ட அனைத்து முயற்சிகளையும் சமூகத்துக்காக மேற்கொண்டார்கள். மக்களின் வாக்குகளைப் பெற்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரை விட, இவர்கள் சிறப்பாகச் செயற்பட்டார்கள். இதனை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.

இருப்பினும், என்னதான் முஸ்லிம் புத்திஜீவிகளின் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்பட்டாலும், அவர்கள் சில எல்லைகளைத் தாண்டிச் செல்ல மாட்டார்கள் என்பதே இயல்பாகும். ஆகவே, படித்த, அறிவுள்ள, பக்குவமான முஸ்லிம் எம்.பி ஒருவரை அரசியலமைப்புப் பேரவையில் உள்வாங்கக் கூடிய ஏற்பாடு 22 இல் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது. 

முஸ்லிம் தலைவர்கள், கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தனர். பலம் பொருந்திய அமைச்சர்களாக இருந்தனர். அதிகார பீடத்தின் செல்லப் பிள்ளையாக ஒட்டியிருந்தனர். அப்போதெல்லாம் சமூகத்தின் உரிமைகளை, அபிலாஷைகளை, நலன்களை வென்றெடுப்பதற்காக முன்னிற்காத இவர்கள், அரசியலமைப்பு பேரவையில் பிரதிநிதியானால் மட்டும் சாதித்துவிடுவார்களா என்பது நியாயமான கேள்விதான் 
அதுமட்டுமன்றி, பன்மைத்துவ சிந்தனையும் சமகாலத்தில் சமூகத்தின் மீதான அதீத அக்கறையும் கொண்ட புத்திசாலியான, துணிச்சலான, பக்குவமான முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தேடிப்பிடிப்பது என்பதும் அவ்வளவு இலேசுப்பட்ட காரியமல்ல என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். 

அரசியலமைப்புப் பேரவையில், ஒன்றுக்கும் உதவாத ஓர் எம்.பியை, அவர் ஒரு முஸ்லிம் என்ற ஒரு காரணத்துக்காக மட்டும் அங்கத்தவர் ஆக்குவதை விட, முஸ்லிம் புத்திஜீவி ஒருவரே உறுப்பினராக இருப்பது எவ்வளவோ பரவாயில்லை என்ற மாற்றுக் கருத்தையும் இவ்விடத்தில் மறுதலிக்க முடியாது.

ஆனால், பொதுவாக நோக்கும்போது, புத்திஜீவி ஒருவரை விட அரசியல்வாதிதான் துணிச்சலுடன் செயற்படக் கூடியவர். அப்படியான ஒருவர் அங்கத்துவம் வகித்தால், முஸ்லிம் சமூகத்தின் பிரநிதித்துவத்தை, நலனை ஆணைக்குழுக்கள் ஊடாகவும் வேறு வழிகளிலும் உறுதிப்படுத்த அது உதவியாக அமையும் என்ற அனுமானத்தின் அடிப்படையிலேயே இக் கருத்தை முஸ்லிம் நோக்கர்கள் ஒருசிலர் முன்வைக்கின்றனர். 

முஸ்லிம் அரசியல்வாதிகளின் கடந்த காலச் செயற்பாட்டை உற்றுநோக்குகின்ற போது, அவர்களின் அங்கத்துவம் தேவையே இல்லை என்ற மாற்றுக் கருத்தும் இல்லாமலில்லை. 

முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் அன்றன்றைக்கான அரசியலை மட்டும் மேற்கொள்ளாமல், தூரநோக்கத்துடன் முன்னகர வேண்டிய தேவை இன்னும் நிறைவேற்றப்படவிலலை. கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு திருத்தங்கள், சட்ட ஏற்பாடுகளுக்கு கண்ணைமூடிக் கொண்டு கையை உயர்த்தியமை கண்கூடு. 

அதுபோலவே, அரசியலமைப்பு பேரவையில் காத்திரமான முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கும் அதனூடாக ஆணைக்குழுக்களிலும் இன்னபிற அமைப்பாக்கங்களிலும் சமூக நலனை பாதுகாப்பதற்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிற்க வேண்டும் என்ற கோரிக்கை, முஸ்லிம் அரசியல் பரப்பில் வெகுகாலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. 

ஆனால், மக்களின் எந்தக் கோரிக்கைகளையும் அபிலாஷைகளையும் கணக்கிலெடுக்காமலேயே முஸ்லிம் அரசியல் தலைவர்களும் எம்.பிக்களும் குறைந்தது 25 வருடங்களாக செயற்பட்டு வருகின்றார்கள். அதனால் சமூகம் நிறையவே இழந்திருக்கின்றது. 

ஒருவேளை, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தமானது, முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை, நலனை காத்திரமாக உறுதிப்படுத்தத் தவறுமாயின், இந்த இழப்புகள் இன்னும் அதிகரிக்கலாம். அதனை அப்போது ‘விதி' என்பீர்கள். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .