2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

ஆட்சிக்காலம் முடிவுற்ற உள்ளூராட்சி சபைகள் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்

Johnsan Bastiampillai   / 2023 மார்ச் 26 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

உள்ளூராட்சி சபைத் தேர்தல் எப்போது நடக்கும் என்ற இழுபறிகளுக்கு மத்தியில், அச்சபைகளின் ஆயுட்காலம் ஞாயிற்றுக்கிழமை (19) நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ளது. 

உள்ளூராட்சி சபைகளின் ஆயுட்காலம் தற்காலிகமாக மீண்டும் நீட்டிக்கப்படாவிட்டால், அவற்றை நிர்வகிக்கும் அதிகாரம் அச்சபைகளின் ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்களுக்குக் கிடைக்கும். தேர்தல் நடைபெற்று, புதிய சபை உறுப்பினர்கள் அதிகாரத்துக்கு வரும்வரை இது நடைமுறையில் இருக்கும். 

நாட்டிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சிக்காலம் காலாவதியாகியுள்ள போதிலும், உள்ளூராட்சி சபைகள், உறுப்பினர்கள் செய்த சேவைகள் பற்றிய கேள்விகள், முன்னேற்ற நிலைமை பற்றிய கேள்விகள் இன்னும் காலாவதியாகவில்லை. 

இதற்கு முன்னர் கடைசியாக 2018 பெப்ரவரியில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இடம்பெற்றது. இச்சபைகளின் நான்கு வருட ஆட்சிக்காலம், 2022இல் முடிவடைந்திருந்த நிலையில், ஒரு வருடத்துக்கு காலநீட்டிப்புச் செய்யப்பட்டிருந்தது. 

இதற்கமையவே, 340 சபைகளின் ஆட்சிக்காலம் மார்ச் 19 நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ளது. ஒக்டோபர் மாதம் முடிவடையும் எல்பிட்டிய பிரதேச சபை மட்டுமே, இப்போது அதிகாரத்தில் இருக்கின்றது. இதற்கமைய, 29 மாநகர சபைகள், 36 நகர சபைகள், 275 பிரதேச சபைகளுக்கு தேர்தல் நடத்த வேண்டிய தேவையுள்ளது. 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு உண்மையில் அரசாங்கத்துக்கு உள்ளார்ந்த முனைப்பும் இல்லை; அரச கஜானாவில் அதற்கான நிதியும் இல்லை. 
இந்தப் பின்னணியில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திகதியில் தேர்தல் நடைபெறவில்லை. ஏப்ரல் 25ஆம் திகதியும் வாக்கெடுப்பு இடம்பெறுவதற்கான நிகழ்தகவுகள் குறைவாகவே தெரிகின்றன. 

தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர். என்ன காரணத்துக்காகத் தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நினைக்கின்றதோ அதே காரணத்துக்காகவே அரசாங்கம் தேர்தலை நடத்தாமல் போக்குக் காட்டுகின்றது எனலாம். 

உரிய காலத்தில் தேர்தலை நடத்துவதன் மூலம் மக்களின் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்பது நூறு சதவீதம் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்தாகும். இதில் மறுபேச்சுக்கே இடமில்லை. 

ஆனால், இப்போது தேர்தலை நடத்த வேண்டுமென குரல் எழுப்புகின்ற அரசியல் தரப்புகள் மற்றும் அதற்கு முட்டுக்கட்டை போடுகின்ற தரப்புகளில் 99 சதவீதமானோரின் உள்நோக்கம், ‘ஜனநாயகத்தை காப்பாற்றுவது’ அல்ல என்பது நாடறிந்த இரகசியமாகும். 

மாறாக, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சி நிரல் இருக்கின்றது. அதற்காகவே ஜனநாயகத்தை கையில் எடுத்துள்ளார்கள். சஜித் பிரேமதாஸ ஆட்சியிலும் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சியிலும் இருந்தாலும், இதுதான் நடந்திருக்கும். 

இவ்விடத்தில் ஒரு முக்கியமான கேள்வி எழுகின்றது. அதாவது, வாக்கெடுப்பை நடத்தி, உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியை நிறுவினால் மட்டும், ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு விடுமா? கடந்த காலத்தில் சபைகளில் நடந்த மக்கள் விரோத, ஜனநாயக விரோத செயல்களை கணக்கிலெடுக்க வேண்டியதில்லையா என்ற வினாக்களுக்கு விடை தேட வேண்டியிருக்கின்றது. 

அந்தவகையில், தற்போது ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்துள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளும் சாதித்தவைகள் எவை, சாதிக்கத் தவறியவை எவை? அதன் உறுப்பினர்கள் மக்களுக்கு எந்தளவு சேவையாற்றி உள்ளார்கள்? அதில் எத்தனை பேர் சித்தியடைந்து உள்ளார்கள் போன்ற மீளாய்வு அவசியமாகின்றது. 

எத்தனையோ உள்ளூராட்சி சபை ஆட்சிகளை, நாம் கடந்து வந்து விட்டோம். இப்போது இன்னுமோர் உள்ளூராட்சித் தேர்தலை வேண்டி நிற்கின்றோம். இந்தச் சூழ்நிலையில், நாம் விதைத்த வாக்குகளின் கடந்தகால அறுவடைகள், எவ்விதம் உள்ளன என்பதை கணக்கிட்டுப் பார்ப்பது காலத்தின் தேவையாகும். 

உள்ளூராட்சி சபைகள்தான் நாட்டின் ஆட்சிக் கட்டமைப்பின் அடித்தளமாக உள்ளன எனலாம். பெரும்பாலும் இங்கிருந்துதான் மாகாண சபைக்கும் பாராளுமன்றத்துக்குமான மக்கள் பிரதிநிதிகள் உருவாகின்றார்கள். 

எனவே, நாட்டில் உண்மையான ‘கட்டமைப்பு மாற்றம்’ ஒன்று உருவாக வேண்டும் என்றால், அது அடிமட்டத்தில் இருந்து இடம்பெற வேண்டும் என்ற அடிப்படையில், தற்போது ஆயுட்காலம் முடிவுற்றுள்ள உள்ளூராட்சி சபைகள், தலைவர்கள், உறுப்பினர்களின் செயற்பாடுகள் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டியது கட்டாயமாகின்றது. 

பல சபைகளும் கணிசமான உறுப்பினர்களும் கடந்த ஐந்து வருடங்களில் தம்மால் முடிந்தளவு மக்களுக்கு சேவையாற்றி இருக்கின்றார்கள் என்பதை மறுக்க முடியாது. ஆனால், ஜனநாயக வழிமுறை ஒன்றின் ஊடாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகளவான பிரதிநிதிகள், அதற்கு மாற்றமான முறையில் காலத்தைக் கடத்திவிட்டுச் சென்றிருக்கின்றார்கள் என்பதையும் மறந்து விடக்கூடாது.  

அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு, மக்களை ஏமாற்றுகின்ற பாணியிலும் சட்டத்துக்குப் புறம்பாகவும் செயற்பட்ட அனைவரது நடவடிக்கைகளும் அறிக்கையிடப்பட்டு அவர்கள் மீது சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 

உள்ளூராட்சி சபை தலைவர், உறுப்பினர்கள் செய்த சமூக விரோத காரியங்கள், சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றி நாம் அறிவோம். சபைகளில் இடம்பெற்ற ஊழல்கள் பற்றியும் நிறைய குற்றச்சாட்டுகள் உள்ளன. இதன் ஆகப் பிந்திய சம்பவமாக,  கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடியைக் குறிப்பிடலாம். 

அதேபோல், உள்ளூராட்சி சபை தலைவர்கள், உறுப்பினர்கள் என்ற கோதாவில் சண்டித்தனம் பேசியவர்கள், சமூக விரோத செயற்பாட்டில் ஈடுபட்டவர்கள், மண் அகழ்தல் போன்ற வருமான மையக் காரணங்களுக்காக அதிகாரத்தைப் பயன்படுத்தியோர், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

நாம் இன்னும் அறியாதவை ஏராளம் இருக்கலாம் என்ற அடிப்படையில், அனைத்து விடயங்களும் மீள்வாசிப்பு செய்யப்பட்டு, நல்ல உறுப்பினர்களும் பொருத்தமற்ற உறுப்பினர்களும் அடையாளப்படுத்தப்பட வேண்டும். அதன்மூலம் இனியாவது மக்கள் சரியான தெரிவுகளை மேற்கொள்ளலாம். 

ஒரு பாடசாலை மாணவனுக்கு வருட இறுதியிலும் தவணை முடிவிலும் முன்னேற்ற அறிக்கை வழங்கப்படுகின்றது. ஓர் ஊழியனுக்கு தகைமைகாண் சேவைக்காலம் என்று உள்ளது. அக்காலத்தில், அவரது செயற்பாடுகள் அவதானிக்கப்பட்டே தொழில் உறுதிப்படுத்தப்படும். அதுமட்டுமன்றி, ஒவ்வோர் ஊழியரின் மீதும் வருடாந்த மதிப்பீடு மேற்கொள்ளப்படுவது வழக்கமாகும். 

எனவே, அரசியல் ஆளுகைக் கட்டமைப்பிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். தேர்தல் என்பது ஜனநாயகத்தின் கதவாக இருப்பது சரிதான். ஆனால், அந்த கதவின் வழியாக உள்ளே வருபவர்கள், என்ன வேண்டுமென்றாலும் செய்து விட்டுப் போகலாம் என்று இருந்து விட முடியாது. 

தேர்தல் மற்றும் ஜனநாயகத்தின் உண்மையான பிரதிபலன்களை மக்கள் அனுபவிக்கும் வகையில் உள்ளூராட்சி சபைகள் தொடக்கம், மாகாண சபைகள், பாராளுமன்றம் வரை அனைத்து ஆளுகைக் கட்டமைப்புகளும் பொறுப்புடன் செயற்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதற்கான பொறிமுறை  உருவாக்கப்படுவதும் முக்கியமானது. 

ஓர் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர், மக்களுக்கு சேவையாற்றாமல், கள்ளத்தனமான காரியங்களில் ஈடுபட்டு விட்டு, கடைசியில் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்து விடுவாராயின் அல்லது மக்கள் அவருக்கு பாடம் புகட்டவில்லை என்றால், அதன் தொடர் விளைவுகள் மிக மோசமானவையாக இருக்கும். 

அந்த உள்ளூராட்சி சபை உறுப்பினர், அடுத்த முறை இதே கள்ளத்தளத்தோடு மாகாண சபைக்கும், பின்னர் பாராளுமன்றத்துக்கும் போக எத்தனிப்பார். சமகாலத்தில், இவரை விட கள்ளத்தனமான, சமூக சிந்தனையற்ற அரசியல்வாதிகள் அடுத்த உள்ளூராட்சி தேர்தலில் புதிதாக களமிறங்குவார்கள். 

இது பெருமளவுக்கு இலங்கை அரசியலில் நடந்தேறி விட்டது. இதனை மாற்ற வேண்டியுள்ளது. நாட்டின் ஆட்சியாளர்களை, அவர்களின் போக்குகளை திருத்த வேண்டுமாயின் அதற்கான படிமுறைகள் உள்ளூராட்சி சபைகளில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். 

இதன்படி, இப்போது ஆட்சிக்காலம் முடிவுற்றுள்ள உள்ளூராட்சி சபைகளிடம் இருந்தும், அதன் உறுப்பினர்களிடம் இருந்தும் தனித்தனியான முன்னேற்ற அறிக்கை கோரப்பட்டு, அது மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதுமட்டுமன்றி, சபைகளின் செயற்பாடுகள் பற்றிய மக்களின் கருத்தும் அறியப்பட வேண்டும். 

இப்போதாவது அரசும் மக்களும் விழித்துக் கொள்ளவில்லை என்றால் எதிர்காலம் இன்னும் மோசமானதாக இருக்கும். இதைவிட மோசமான அரசியல்வாதிகள் உள்ளூராட்சி சபைகளில் இருந்து, பாராளுமன்றம் வரை சென்று, மக்களை மறந்து ஆட்சி செய்வார்கள்.  

அந்தவகையில், இன்னுமோர் உள்ளூராட்சித் தேர்தலுக்கு அவதிப்படுவதை விட, இது அவசரமாகச் செய்யப்பட வேண்டிய பணியாகும்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .