2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

மதிப்பெண்களை நோக்கி ஓடும் தேர்வு முறைகள்

Johnsan Bastiampillai   / 2021 ஒக்டோபர் 05 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரியா இராமநாதன்

இன்றுவரை நம்முடன் தொடர்வது வெறும் ஏட்டுக்கல்வி முறமைதானா? ஏனெனில், நமது தேசிய வருமானம், நம்முடைய கல்வி முறைக்கு வெளியில் இருந்துதானே கிடைக்கிறது? மக்களில் உழைப்பு, வாழ்வு என அனைத்தும் இக்கல்வி முறைக்கு வெளியில்தானே இன்னுமே நீடிக்கிறது? கையெழுத்திடவும் வாசிக்கவும் எழுதவும் என சில அடிப்படையான பொதுவான விடயங்களை பெற்றுக்கொடுப்பதுடன், அனுபவவாத அறிவை சற்று ஒழுங்குபடுத்திய வடிவில் கிடைக்குமாறு செய்வதுமட்டும்தான் இன்றைய கல்வியின் பயனா? 

பாடசாலையில் ஓராண்டு முழுவதும் கற்ற அறிவினை மூன்று மணி நேரத்தில் மதிப்பிடும் இந்தப் பொதுத் தேர்வு முறையானது, முழுமையான ஒரு மதிப்பீடாக இருக்க இயலுமா? சிந்தித்துப்பார்த்தால் இல்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் தேர்வும் அதன் முடிவுகளும் ஒரு மாணவனின் திறமைக்கு கிடைக்கும் மதிப்பீடு.

ஆனால், இன்றைய நிலையில் பந்தயக் குதிரைகளைத் தயார்செய்வதுபோல், மதிப்பெண்களைப்பெற மாணவர்களுக்கு பலவிதங்களில் பயிற்சிகள் மாத்திரமே அதிகமாக கொடுக்கப்படுகிறது. அதிக மதிப்பெண்களைப்பெறும்   மாணவர்களே சிறந்த அறிவாளி என்ற கருத்து இன்றளவிலும் நிலைத்து நிற்கிறது. ஆனால் மதிப்பெண்களுக்கும் மாணவர்களின் தனிப்பட்ட திறமை,  ஆளுமை போன்றவற்றுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. 

ஆனாலும், சிந்தனைத் திறனற்ற அனிச்சையாக தேர்வுத் தாள்களில் மறுபதிவு செய்யும் கற்றல், பயிற்றுவிப்பு முறையே வெற்றி பெற்ற முறையாக இன்றுவரை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. நம்முடைய  கவலையெல்லாம் கைநிறைய சம்பளம் வாங்க ஏதுவான ஒரு பட்டம்; அதற்கு விலையாக எதுவும் செய்யலாம் என்ற மனோபாவம்.                                     

 அண்மையில், இணையத்தில் வாசித்த ஓர் விடயத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு சர்வதேச மாணவர் கூட்டத்தில், இந்தியாவின் அதிசிறந்த பாடசாலைகளில் இருந்தும் அதிக மதிப்பெண்கள் வாங்கிய 11ஆம், 12ஆம் ஆண்டு மாணவர்கள்   பங்கேற்றனர்.. மாநாட்டின் தொடக்கத்தில், ‘மைக்’ வேலை செய்யவில்லை. உடனே அரங்கத்தில் இருந்த அனைவரும் தொழில்நுட்பவியலாளரைத் தேட, மாநாட்டிற்கு வந்திருந்த ஏழாம் வகுப்பு பயிலும் ஜப்பானிய மாணவனொருவன் எழுந்து சென்று, அதைச் சரிசெய்ய, இந்திய  மாணவர்கள் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ஆக! ஏழாம் வகுப்பு மாணவனால் செய்ய முடிந்ததை, 12ஆம் வகுப்பு மாணவர்களால் ஏன் செய்ய இயலவில்லை என்ற கேள்வி அந்தக் கட்டுரையில் எழுப்பப்பட்டிருந்தது. ஆக, இதுதான் இன்றைய அதிக மதிப்பெண் வாங்கும் மாணவர்களின் நிலை! யதார்த்தத்துக்கு பயன்படாத வெறுமனே மதிப்பெண்களைப் பெறுவதை  குறிக்கோளாகக்கொண்டு,  மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் ஏட்டுக்கல்வியின் விபரீதம் இல்லையா?

ஒரு பாடத்தில் முழுமையான மதிப்பெண் பெறுவது என்பது, அப்பாடத்தினை   முழுமையாகத் புரிந்து படித்து கிடைப்பதால் வரவேண்டியது. ஆனால், அப்படியே மனப்பாடம் செய்து கொட்டிவிடுவதாலும் இந்த முழுமையான மதிப்பெண் கிடைக்கப்பெறும் என்பதையே அதிகமான மாணவர்கள் கைக்கொள்ளுகின்றனர். 

நடைமுறை வாழ்வின் சிக்கல்களை எதிர்கொள்வதற்கும் உதவுவதற்கும் பதிலாக, தவறான தேர்வுமுறையின் மூலம் மாணவர்கள் கடுமையான உளவியல் தாக்கத்துக்கு உள்ளாவதுடன் தேர்வில்  தோல்வியடைந்தால் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தையும் விதைத்துவிடுகிறது. 

சிந்திக்கும் ஆற்றலே ஒருவரைச் சிறப்பாக்கும். ஆனால், சிந்திக்கும் ஆற்றலையே மழுங்கடிக்கும் தேர்வுமுறையே இன்றிருப்பதால், சவலைப் பிள்ளைகளாக மாணவர்களை மாற்றிக்கொண்டிருக்கிறோம். 35 மதிப்பெண் பெறுபவன் தேர்வில்  தேறியவன். 33 மதிப்பெண் எடுத்தவன் தேர்வில் தவறியவன் என்று மதிப்பிட்டு, ‘பெயில்’ பண்ணியவனை அதேவகுப்பில் வைத்திருப்பது யோசிக்க வேண்டிய ஒரு விடயம் இல்லையா? 

இந்தப் பாடசாலையில் இத்தனை ‘A’ சித்திகள், இத்தனை மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவாகினர் போன்ற பிரம்மிக்கவைக்கும் தேர்வு முடிவுகள், பெற்றோர்களுக்கும் கல்விக் கூடங்களுக்கும் மகிழ்ச்சியையும் பெருமையையும் அளித்தாலும், உண்மையில் இந்த மதிப்பெண் கலாசாரம் கல்வியின் தரத்தை பிரதிபலிக்கிறதா என்றால், விடை? அதிலும், கல்வி பெரும் சூதாட்டமாக மாறிவிட்ட இந்தக் காலகட்டத்தில், மதிப்பெண்களை எப்படி நோக்குவது? நடைமுறையில் இருக்கும் தேர்வுமுறை மாணவர்களின் திறன்களைக் கண்டடைவதாகவோ, வளர்ப்பதாகவோ, ஊக்குவிப்பதாகவோ இல்லாது முடக்குவதாகவும் ஏற்றத்தாழ்வை அப்படியே கொண்டு செல்வதாககவும் இருப்பதே இன்றைய கல்வியுலகம் எதிர்நோக்கும் பெரும் சவால் ஆகும்.           

இத்தேர்வுமுரையானது, மாணவர்களின் அறியாமையை அளக்கிற அளவுகோலாக இருக்கிறதேயொழிய, அறிவை வளர்க்கும் அளவுகோலாக இருப்பதில்லை.  அறியாமையை அகற்றி, நல்வழிப்படுத்துவதே கல்வியின் பயன். 

ஆனால், !நீ இவ்வளவு அறியாமையுடன் இருக்கிறாய்’ என்று மாணவனை உளவியல் ரீதியாகத் துன்புறுத்தும் ஒரு முறை எவ்வாறு நன்மையைத் தருவதாக, அறிவை வளர்ப்பதாக, தனித்திறமைகளை அடையாளம் காட்டுவதாக இருக்கவியலும்? கற்றுக்கொள்வது என்பதை ஆனந்தமான ஒரு விடயமாகக் கருதுவதற்கு மாறாக, கசப்பாக்குவதே பெரும்பாலும் இன்றைய நிலை! 

தேர்வு, தேர்ச்சி, பெறுபேறுகள் எல்லாமுமே ஒருவன் உயர்ந்தவன் என்றும், இன்னொருவன் ஏதோவொரு வகையில் அவனைவிடத் தாழ்ந்தவன் என்பதையும் சுட்டுகிறது மதிப்பெண்கள் அடிப்படையில்.

மனனம் செய்தல் என்பது, ஒரு காலத்தில் தனித்திறமையாகக் கருதப்பட்டு, நினைவாற்றலைப் பெருக்குவதற்காகவே செய்யுள்களையும்  பாடல்களையும் அறிவியல், கணித விதிகளையும்  உருவாக்கினார்கள். இதுதவிர  கூர்ந்தறிதல், சிந்தித்தல், காரண காரியமுணர்தல், கவனித்தல் எனப்பல வகையான திறன்களும் உருவாக்கப்பட்டிருந்தன. 

ஆனால், இன்றோ புரிந்துகொள்ளாமலேயே மனப்பாடம் செய்தல், கணித கணக்குகளைகூட அப்படியே மனப்பாடம் செய்து ஒப்புவித்தல், புத்தகத்தில் உள்ளதை பக்க எண் உட்பட அப்படியே எழுதுதல் போன்றனவே திறமைகளாக, தவறான புரிதலோடு, மதிப்பெண்களை நோக்கி ஓடும் பந்தயக் குதிரைகளாக, மாணவர்கள் தயார் செய்யப்படுகிறார்கள் என்பதை, நம்மில் எத்தனைபேர் ஒப்புக்கொள்கிறோம்? 

100% தேர்ச்சி என்பதே, முழுமையான கல்விக்கான அளவுகோல் என்ற கருத்து திட்டமிட்டே உருவாக்கப்படுகிறது. ஆடம்பரமான தனியார் பாடசாலைகள், தனியார் வகுப்புகள், நுனி நாக்கு ஆங்கிலம் போன்றவையே சிறந்தது என்ற மாயத்திரை விரிக்கப்பட்டுள்ளது. அந்த மாயவலையின் கவர்ச்சியில் சிக்கிய பெற்றோர்களின் தொடர்ச்சியான விரட்டலில் மாணவர்கள், ‘எதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம்’ என்ற புரிதலின்றியே ஓடிக்கொண்டிருக்கின்றனர்.

தம்பிள்ளைதான் அதிக மதிப்பெண்களை எடுக்கவேண்டும் என்ற பெற்றோரின் ஆசைக்கும், தம்மாணவர்களே அகில ரீதியில் முதல் மதிப்பெண் பெறவேண்டும் என்ற பாடசாலைகளின் போட்டி வெறிக்கும் ஆளாகி, கண்கள் கட்டப்பட்ட குதிரைகள்போல் எவ்வித தெளிவும் இன்றி, நாம் போட்ட பாதையில் ஓடிக்கொண்டிருக்கின்றனர் நம்மாணவர்கள். 

இன்றைய தலைமுறையினர் மதிப்பெண்களை மட்டுமே குறியாகக்கொண்டு ஒடுவதனாலேயே அதற்காக எதற்கும் துணியும் நிலைக்குச் சென்று, தேர்வுகளில் முறைகேடான முறையில் கொப்பியடித்து அல்லது ஆள்மாறாட்டம் செய்து, தேர்வெழுதி மாட்டிக்கொண்டு தம்சுயம் இழக்கிறார்கள். அதுமட்டுமன்றி, தேர்வில் தோல்வியடைந்தால் நெஞ்சுரமற்ற முடிவுகளை எடுக்கத் துணிகின்றனர். 

உள்ளார்ந்தமான பொறுப்புணர்வின்றி ஆசிரியர்களும் குதிரைக்கு கடிவாளம் போட்டதுபோல் தமக்குக் கொடுக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தினை மாத்திரம் முடித்துக்கொடுக்கும் நோக்கம் தவிர்த்து, மாணவர்களின் கற்றலுக்கு உதவுகிற ஒரு நபராக மாறுவதுடன், அவர்களை வெறுமனே பரீட்சைக்கு மாத்திரம் தயார்படுத்தாது, மாணவர்களை தேடல் உள்ளவர்களாக மாற்றவேண்டும்.

அதற்கு, முதலில் ஆசிரியர்களும் தேடல் உள்ளவர்களாகத் தம்மை மாற்றிக்கொண்டு, வகுப்பறைக்குள் நுழையும்போது புதுப் புது விடயங்களை மாணவர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். 

நமது நாட்டின் வேலை வாய்ப்புக்கும், சமூக முன்னேற்றத்துக்கும் ஏற்ற கல்விமுறையே நமது வருங்கால சந்ததியினருக்கு உண்மையான வெற்றியைக் கொடுக்கும். அதுவரையில் அவர்கள் குதிரைப் பந்தயத்தில், ஒரு நேர்கோட்டில் ஓட மட்டுமே நாம் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருப்போம். அவர்களும் ‘புரொய்லர்’ கோழி போல, செயற்கை முட்டைகளை மட்டுமே இட்டுக்கொண்டிருப்பர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .