2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சந்தனவெட்டை கிராமத்தில் கண்டெடுத்த ‘குண்டுமணி’

Johnsan Bastiampillai   / 2021 ஒக்டோபர் 12 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

அ.  அச்சுதன்

 

காசிராசா வினோஜா, கடந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி, மூன்று ஏ சித்திகளையும் ஒரு பீ சித்தியையும் இரண்டு சீ சித்திகளையும் ஒரு எஸ் சித்தியையும் பெற்றுக்கொண்ட ஒரு கிராமத்து மாணவி. அனைத்துப் பாடங்களிலும் ஏ தரச் சித்திகளைப் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டுதல்கள், பரிசளிப்புகள், வாழ்த்துதல்களைக் கேட்டுக் கேட்டு சலிப்படைந்திருக்கும் பலருக்கு, இச் செய்தி ஒரு விடயமாகவே இருக்காது. அப்படித்தானே?

தமது பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மகிழ்வடைகின்ற மாணவர்கள் மத்தியில், தனது அடுத்தகட்ட கல்விக்கான வழி என்ன என்ற ஏக்கத்துடன் இருப்பவள்தான் வினோஜா என்கிற வினோ.

தமது பிள்ளைகளின் பெறுபேறுகளைக் கூறியும் பிறரிடம் பெருமைப்பட்டு விளம்பரப்படுத்திக்கொள்ளும் பெற்றோர்கள் மத்தியில், தனது பிள்ளையின் உயர்தரக் கல்விக்கான வழி என்ன என்ற ஏக்கத்துடன் இருப்பவர்தான் வினோவின் தாயார் தவமணி. வினோவின் தந்தை 14 ஆண்டுகளாக குடும்பத்தை தனியே தவிக்க விட்டு பிரிந்துசென்றுவிட்டார்.

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் அடிப்படை வசதிகள் மிகக் குறைந்த கிராமம் சந்தனவெட்டைக் கிராமம். கட்டைபறிச்சான் தெற்கு கிராம சேவகர் பிரிவில் உள்ளது. இங்குள்ள மக்கள் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். ஒட்டுவட்டவன் மலை, கயல்வேந்தன் மலை, சுவாமிமலை, கயல்கொடி மலை ஆகிய மலைத் தொடர்களின் இருபக்க அடிவாரங்களிலும் சுமார் 90 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர்.

மூதூர் நகரத்திலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அருகிலுள்ள கயல்வேந்தன் குளத்தில் மீன்பிடித்தல், விறகு எடுத்தல், தர்மம் எடுத்தல், கூலிவேலை செய்தல் போன்றவற்றை தமது வருமானமீட்டும் வழிகளாகக் கொண்டுள்ளனர். நாளாந்தம் கிடைக்கின்ற சிறிதளவு உணவுத் தேவையைத் தவிர வேறு சேமிப்புகளோ முதலீடுகளோ இல்லை.

2016 ஆம் ஆண்டுவரை சாதாரண தரம்வரை கற்றவர்கள் இங்கு எவரும் இருக்கவில்லை. எழுத்தறிவு அற்றவர்கள் அதிகம் உள்ளனர். வறுமை காரணமாக பாடசாலைக்குச் சென்று, இடை விலகியவர்கள் மிக அதிகம். வறுமை, பசி, பட்டினி என்ற வார்த்தைகளுக்கான அர்த்தம் சந்தனவெட்டைக் கிராமத்தில்தான் உள்ளது. இங்குள்ள பிள்ளைகள் இன்னமும் கல்லிலும், முள்ளிலுமே நடக்கின்றனர். மூதூரில் இதுவரை கொங்கிறீற் வீதியைக்காணமுடியாத கிராமம் சந்தனவெட்டை கிராமமே.

தரம் 5 வரை வகுப்புக்களைக்கொண்ட பாடசாலை ஒன்று உள்ளது. சிறார்களுக்கு கல்வி வழங்குகின்ற முன்பள்ளி ஒன்று, மத வழிபாட்டுக்குரிய சிறிய சிவலிங்கேஸ்வரர் ஆலயமும், சிறிய ஜெப ஆலயமும் உள்ளது. பலநோக்கு கட்டடம் ஒன்று உள்ளது. இதுதான் வினோவின் ஊர்.

இப்போது கூறுங்கள்! வினோ சாதனைப் பெண்தானே. அவளது பெறுபேறு சரித்திரச் சாதனைப் பெறுபேறுதானே. சந்தனவெட்டை வரலாற்றில் வினோ ஒரு கலங்கரை விளக்குத்தானே.

வினோவுக்கு ஆரம்பக் கல்வியை வழங்கிய பாடசாலை சந்தனவெட்டை ஸ்ரீ ஐங்கரன் வித்தியாலயம். இப்போது ஒரேயொரு கட்டடத்துடன் இயங்கிவருகிறது. வினோ ஆரம்பக் கல்வி கற்கும்போது கட்டடம் இருக்கவில்லை. கடந்த 2006 இல் இடம்பெயர்ந்தபோது வினோவுக்கு வயது இரண்டு. ஓராண்டு கழித்து மீண்டும் வந்தபோது ஊர் இருக்கவில்லை. இருந்த ஓரிரு ஓலைக் குடிசைகளும் அழிக்கப்பட்டு காடாக காட்சியளித்தன. சந்தனவெட்டை கிராம மக்களை அரசாங்கம் அம்மன்நகரின் கயல்வேந்தன் குளக்கரைப் பகுதியில் இருந்த காட்டுப்பதியை துப்பரவுசெய்து அங்கு தகரத்தில் குடிசைகளை அமைத்து குடியமர்த்தியது.

அப்போது தொண்டு நிறுவனங்களால் அமைத்துக்கொடுக்கப்பட்ட தகரக் கொட்டகைதான் பாடசாலையாக இருந்தது. அந்தத் தகரக் கொட்டகைப் பாடசாலையில்தான் வினோ தனது கல்வியை ஆரம்பித்தாள். புல் வெளியில் விரிப்பொன்றில் மாணவர்கள் அமர்ந்திருக்க ஆசிரியர் சிறிய கல்லில் இருந்து கற்பிக்கும் பாடசாலையில் வினோ கற்றவள்.

சிறு வயதுமுதலே கல்வியில் ஆர்வமிருந்தாலும் வறுமை அதற்குத் தடையாக இருந்தது. வினோவின் குடும்பத்துக்கு மட்டுமல்ல சந்தனவெட்டைக் கிராம மக்கள் அனைவருக்குமே பசி பட்டினி உணவு என்ற தேவையே பிரதானமாக இருந்தது. இதனால் தகரக் கொட்டகையில் பாடசாலை நடந்தாலும் பிள்ளைகள் அங்கு சென்று கல்வி கற்பதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் அரசின் திட்டப்படி பாடசாலை நிருவாகமும் தொண்டு நிறுவனங்களும் பிள்ளைகளுக்கு உணவு வழங்கும் திட்டத்தை கொண்டுவந்தனர். இதனால் மாணவர்களின் வருகை சற்று அதிகரித்தது. இருப்பினும் அதிபரும் ஆசிரியர்களும் வீடு வீடாகச் சென்று பிள்ளைகளை அழைத்து வந்து கல்வி புகட்டும் வழக்கம் இருந்தது.

இவ்வாறான சூழலில் கற்ற வினோ 2014 புலமைப் பரிசில் பரீட்சையில் 119 புள்ளிகளைப் பெற்றுச் சித்தியடைந்தாள். சகல வசதிகளையுமுடைய பிள்ளைகள்கூட சித்தியடையத் தவறுகின்ற நிலையில் வினோ முதன்முதலில் தனது கிராமத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து சாதனை படைத்தாள்.

சந்தனவெட்டையில் தரம் 5 வரையே வகுப்புகள் இருந்தது. இனி தொடர்ந்து கற்பதானால் 8 கிலோமீட்டர்கள் தாண்டி கட்டைபறிச்சானுக்கு வரவேண்டும். வருவதானால் காட்டுப்பாதையூடாக சைக்கிளும் இல்லாமல் யார் வினோவை அழைத்துச் செல்வார்கள்? அதனால் தாயார் தவமணி, இறையாற்றுவெளி ஆற்றைக்கடந்து,  கிணாந்திமுனை வயல்வெளி ஊடாக 4 கிலோமீட்டர் தூரத்திலுள்ள இருதயபுரம் வித்தியாலயத்துக்கு வினோவைக்கொண்டு சேர்த்தார். 2015 தொடக்கம் 2018 வரை இருதயபுரம் வித்தியாலயத்தில் கல்வி கற்ற வினோ கல்வியில் மிகுந்த கெட்டித்தனமாக இருந்தாலும் பாடசாலைக்குச் செல்லும் நாட்கள் குறைவாகவே காணப்பட்டது. வறுமை, போக்குவரத்து சிரமம் என்பன காரணமாக இருந்தன.

அடிக்கடி பாடசாலைக்கு வராமல் நிற்பதும், சுகவீனமென்று சாக்குப்போக்குச் சொல்வதுமாக இருந்த வினோவை அவதானித்த பாடசாலை முதல்வர் அருட்சகோதரி கவிதா அவர்கள், அங்கு கல்வி கற்பித்த ஆசிரியை செல்வி. ஜசோயா குரூஸ் அவர்களின் உதவியைப் பெற்று மூதூரிலுள்ள டிமென்லோ மகளிர் இல்லத்தில் வினோவைச் சேர்ப்பித்து மூதூர் புனித அந்தோனியார் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்க அனுமதியும் பெற்றுக்கொடுத்தார்.

2019 ஆம் ஆண்டுதரம் 10 இல் அந்தோனியார் மகாவித்தியாலயத்தில் இணைந்த வினோவுக்கு மாணவர் இல்லத்தில் கிடைத்த ஆதரவும், பாடசாலையில் கிடைத்த அக்கறையும் அவளை கல்வியில் ஆர்வம் காட்டவைத்தது.

2020 இல் நாட்டில் ஏற்பட்ட கொவிட் அசாதாரண சூழ்நிலை வினோவின் கல்வியிலும் பாதிப்பை ஏற்படுத்தாமலில்லை. பயணக்கட்டுப்பாடு காரணமாக வினோ வீட்டிலிருந்து கற்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இணையவழிக் கல்வியை வினோவால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. கையடக்கத் தொலைபேசியே இல்லை. பின்னர் கணனிக் கல்வியை எப்படி எதிர்பார்ப்பது. சேர்ந்து கேட்டுப் படிப்பதற்கும் கிராமத்தில் கற்றவர்கள் எவருமில்லை. வினோவுக்கு இருந்த ஒரேயொரு வாய்ப்பு கையிலிருந்த பாடப்புத்தகங்கள் மற்றும் கடந்த கால வினாப்பத்திரங்கள் மாத்திரமே. படித்தாள். விடாமுயற்சியுடன் படித்தாள். பரீட்சை எழுதினாள், வளர்ச்சியடைந்த கல்விச் சூழல் உள்ள கிராமத்து மாணவர்களும் பெற்றோரும் மூக்கின்மேல் விரல் வைத்து நோக்குமளவுக்கு வினோ சந்தனவெட்டை கிராமத்தில் மூன்று ஏ தரச் சித்திகள் அடங்கலாகப் சித்தி பெற்று சாதனை படைத்தாள்.

அடுத்த நிலை என்ன? வினோ இனி என்ன செய்யப்போகிறாள்? இந்த வினாக்களுக்கு விடையாக மேலும் பல வினாக்கள் எழலாம்.

உயர்தரத்தில் கலைப்பிரிவில் தான் கல்வி கற்று ஓர் ஆசிரியராக வந்து சந்தனவெட்டை கிராமத்திலுள்ள பிள்ளைகளுக்கு கல்வியை போதிக்கவேண்டும். என்பதே வினோவின் அசைக்கமுடியாத இலக்கும் நம்பிக்கையும். அதை மெய்ப்பிக்கும் விதத்தில் தான் பரீட்சை எழுதிவிட்டு வீட்டிலிருந்த காலத்தில் தன்னைச் சூழ இருந்த தனது கிராமச் சிறார்களுக்கு தன்னாலியன்ற கல்வியை கற்பித்து வந்திருக்கிறாள் வினோ.

கற்ற கல்வியை தனது கிராமத்துப் பிள்ளைகளுக்கு கொடுக்கவேண்டுமென்ற உயரிய குணம் இப்போதே வினோவுக்குள் சுடராக ஒளிர்ந்துகொண்டிருக்கிறது.

வினோ தனது உயர்தரக் கல்வியைத் தொடர மீண்டும் அன்னை தெரேசா மாணவர் இல்லத்துக்குச் செல்லப்போகிறாள். அதே உதவும் உள்ளங்கள் வினோவை இருகரம் நீட்டி அழைக்கிறார்கள். மீண்டும் மாணவர் இல்லத்தின் ஆதரவு, மீண்டும் அதே பாடசாலையின் உயர் சேவையும் அக்கறையும்…

அன்பான உறவுகளே...! நாம் என்ன செய்யப்போகிறோம். சந்தனவெட்டை கிராமத்தின் சாதனை மகள் வினோவின் இலட்சியத்தை நிறைவுசெய்ய நம்மால் ஆனது என்ன?

பசித்தவர்களுக்கு உணவளிப்பதுதான் உண்மையான தருமமும், பெறுமானமும். தேவை உள்ள இடத்தில்தான் சேவை செய்யவேண்டும். சந்தனவெட்டையின் எதிர்காலக் கல்வி வளர்ச்சிக்காக முளைத்திருக்கும் வினோ என்கின்ற வீரியமான பயிருக்கு உரமூட்டுவதுதான் கல்விப்புலத்துக்கு இருக்கக்கூடிய தலையாய பொறுப்பு.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .