2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கல்வியுடன் கலைப்பணி

Johnsan Bastiampillai   / 2021 ஒக்டோபர் 17 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அருட்சயா மரியராஜா 

(முதலாம் வருட மாணவி,

நாடகமும் அரங்கக் கலைகளும்,

சுவாமி விபுலானந்த அழகியல் கற்கை நிறுவகம்,

கிழக்கு பல்கலைக்கழகம்)

 

இலங்கை நாடகப்பள்ளி தனது ஐந்தாவது  ஆண்டு நிறைவை திங்கட்கிழமை (18)  காண்கிறது. அதையொட்டிய சிறப்பு நிகழ்வாக,   நாட்டின் தற்போதைய கொவிட்-19 பெருந்​தொற்று சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, கலை நிகழ்ச்சிகள் நடைபெறாத போதிலும்,  மட்டுப்படுத்தப்பட்ட பார்வையாளர்களுடன் 23ஆம் திகதி சனிக்கிழமை, ‘அரங்க ஆளுமைகள் நால்வர் ' நூல் வெளியீடு,   திருமறைக் கலாமன்ற கலைத்தூது கலையகத்தில், மாலை நான்கு மணிக்கு நடைபெறவுள்ளது. அன்று அரங்கியல் நூல்களின் கண்காட்சியும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாடகப்பள்ளி - இலங்கை

காத்திரமான தமிழ் நாடகங்களை மேடையேற்றுவதற்காகவும் அரங்கியல் செயற்பாடுகள் குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தில் மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் அனைத்து அரங்கியலாளர்களுக்கும் சென்றடைய வேண்டும், அரங்கியல் ஆவணங்கள் பேணப்படவேண்டும் போன்ற உயர்ந்த  நோக்கங்களின் அடிப்படையில்,  ‘கல்வியுடன் கலைப்பணி’ எனும் மகுட வாக்கியத்துடன் ‘நாடகப்பள்ளி’ (School of theatre) கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியர் பாக்கியநாதன் நிரோஷனால் 2016.10.18 அன்று   கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது.

இதுவரை நாடகப்பள்ளியால், 1- அரங்கியல் வலைதளம், 2- அரங்கியல் நூலகம், 3- அரங்கியல் ஆவணப்படுத்தல் (நூலாக்கம்), 4- கூத்துருவ நாடகங்களை அதிகம்      தயாரித்தல், 5- அரங்கியல் பயிற்சிப் பட்டறைகள், 6- ‘விருட்ஷமாகும் விழுதுகள்’  ஆவணத் தொடர், 7-  சர்வதேச இணையவழி அரங்கியல் கருத்தரங்கு போன்ற காத்திரமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அரங்கியல் வலைதளம்

நாடகப்பள்ளி ஆரம்பிக்கப்பட்ட போது உலகில் உள்ள அனைத்து தமிழ்  நாடகவியளாளர்கள், பாடசாலை - பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் என அனைவருக்கும் பயன்படக்கூடிய வகையில் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதில், ‘அரங்கியல் வலைத்தளம்’ முதன்மையானது.

இ முகநூலில்  ‘நாடகப்பள்ளி’  பக்கம் உருவாக்கப்பட்டு, நாடகம் சார்ந்த கட்டுரைகள், புகைப்படங்கள், காணொளிகள் என நாடகமும் அரங்கியலும் கற்கும் அனைவருக்கும் பயன்படக்கூடிய தகவல்கள் தொடர்ச்சியாகப் பதிவிடப்படுகிறது. அத்துடன், ஈழத்தில் நாடகம் சார்ந்த செயற்பாடுகள் எங்கே நடைபெற்றாலும் அவற்றை அனைவருக்கும் அறியச்செய்யவும் இத்தளம்  பயன்படுகிறது.

உலகளாவிய ரீதியில், நாடகம் சார் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் பலர்,  இத்தளத்தில் இணைந்துள்ளமை மகிழ்ச்சிக்குரியது. அவ்வாறான பலரின் அரங்கியல் சார் கட்டுரைகள், இத்தளத்தில் தொடர்ந்து  பதிவிடப்படுகின்றன.

அரங்கியல் நூலகம்

நாடகப்பள்ளி இயக்குநர் பா. நிரோஷன், மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரில் கற்ற காலத்தில், ஆய்வுத் தேவைக்காக நாடக நூல் ஒன்றைத் தேடிய போது, அந்நூல் எங்கும்  கிடைக்கவில்லை. அதனால் ஆய்வின் தலைப்பை மாற்ற வேண்டிய நிலை  ஏற்பட்டதாக, அரங்கியல் நூலகம் பற்றி அவருடன் உரையாடுகையில் அறிந்துகொள்ள முடிந்தது.

 பின்னர், ஆசிரியர் தொழில் கிடைத்து கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் பணியாற்றிய  போது, எதேச்சையாக பழைய புத்தகங்கள் விற்பனை செய்யும் கடைக்கு சென்ற போது, அவர்  ஆய்வுக்காகத் தேடிய அந்த நாடக நூல் கவனிப்பாரின்றி தரையில் குவிக்கப் பட்டு இருந்ததைக்கண்டு, இப்படி எத்தனையோ நாடகம் சார்ந்த நூல்கள் கேட்பாரின்றி பயன்படாமல்  எங்கங்கெல்லாம் சிதறி இருக்கும் என்றெண்னி அவ்வாறான நூல்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற சிந்தனையில் உதித்ததே அரங்கியல் நூலகம் ஆகும்.

இதுவரை  ஈழத்திலும், புலம்பெயர் தேசத்தில் இருந்தும் வெளிவந்த நாடகம் சார்ந்த நூல்கள், சஞ்சிகைகள் என பாடசாலை மாணவர் முதல் பல்கலைக்கழக விரிவுரையாளர் வரை பலரினதும் உதவியுடன் நூல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

தற்போது அரங்கியல் நூலகம் கொழும்பை மையப்படுத்தி இருந்தாலும் காலப்போக்கில் நாட்டின் தமிழர் தேசமெங்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

அரங்கியல் ஆவணப்படுத்தல் ( நூலாக்கம்)

இதுவரை முழுமையாகப் பேசப்படாத விடயங்களைத் தேடி, அவற்றை ஆவணப்படுத்தல் இதன் பிரதான செயற்பாடு ஆகும்.  அந்த வகையில், ஈழத்தில் பலநூறு நாடக குழுக்கள் இயங்கி, நாடகப் பணிகள் ஆற்றியபோதிலும் மிகச் சில நாடக குழுக்களே இன்று போற்றப்படுகின்றன.

ஆதலால், எதிர்கால தேவைகருதி இயங்கியல் நிலையில் உள்ள நாடக குழுக்களை ஆவணப்படுத்தி, ‘ ஈழத்து தமிழ் நாடக நிறுவனங்கள்’  எனும் நூலும், அதேபோல் நாடகப்பணியாற்றிய தமிழ் நாடக ஆளுமைகளை ஆவணப்படுத்தி, ‘ ஈழத்து தமிழ் நாடக ஆளுமைகள்’  எனும் நூலும், நாடகப்பள்ளி நடத்திய சர்வதேச அரங்கியல் கருத்தரங்க உரையாடலை தொகுத்து, ‘அரங்க ஆளுமைகள் நால்வர்’ எனும் நூலும், இளம் கலைஞர்களின் அரங்கச் செயற்பாடுகளை தொகுத்து, ‘ஈழத்து அரங்கில் இளம் ஆளுமைகள்’ என நான்கு  நூலாக்கம் இதுவரை  செய்யப்பட்டுள்ளது.

கூத்துருவ நாடகங்களை அதிகம் தயாரித்தல்

ஈழத் தமிழர் அரங்கில், பல்வேறு முறைகளில் பாரம்பரியம் பேணப்படுகிறது. அதிலிருந்து அடுத்த கட்டத்துக்கு நகரும் வண்ணம்,  பார்வையாளர்களின்  சூழலுக்கு ஏற்ப, அனைவரும் இரசிக்கத்தக்கதாக, ஈழத்தில் தமிழர் பிரதேசமெங்கும் உள்ள ஆடல் பாடல் மரபுகளை ஒன்றினைத்து, சமகால கதைக்கருக்களை எடுத்து, கூத்துருவ நாடகமாகத் தயாரிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, 2018ஆம் ஆண்டு கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியர்களால் நிகழ்த்தப் பெற்ற, ‘இராமநாத வித்தகம்’ கலைவிழாவில் ‘வீர நங்கையர் புரம்’ கூத்துருவ நாடகம் தயாரிக்கப்பட்டு, மேடையேற்றப்பட்டது. இதில் 60 கலைஞர்கள் (அதிபர்கள், ஆசிரியர்கள்) பங்கு பற்ற வெள்ளவத்தை இராமகிருஷ்ண  அரங்கில், அரங்கு நிறைந்த பார்வையாளர்களுடன் மேடையேற்றப்பட்டது.

அதேபோல், கொழும்பு பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரியின் கலைவிழா 2018இல்,  அப்பாடசாலை மாணவர்களும் நாடகப்பள்ளி கலைஞர்களுமாக  50 பேர் இணைந்து  மேடையேற்றிய ‘கரிகாலன்’ கூத்துருவ நாடகம், கொழும்பு தமிழ்ச் சங்கத்திலும்  தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி ஸ்தாபகர் நினைவு தினத்தன்று ‘அந்தி மாலை’ கூத்துருவ நாடகம் மேடையேற்றப்பட்டது. தயாரிக்கப்பட்ட அனைத்துக் கூத்துருவ நாடகங்களின் கதைக் கருக்களும் சமகால ஈழத்தமிழரின் வாழ்வியலையும் இடர்பாடுகளையும் கதைக்கருவாகக் கொண்டமைந்தமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, ‘வீர நங்கையர் புரம்’ கூத்துருவ நாடகம், ஈழத்து போராட்ட வாழ்வியல் வடிவில் பெண்களில் பங்களிப்பை பேசியது.

அதுபோல், ‘ கரிகாலன்’ பேசப்படாத தியாகத்தையும் வாழ்வியல் சிதைவையும் காட்டிக்கொடுப்பையும் பேசியது.  இவ்வாறே ஏனைய படைப்புகளின் கதைக்கருக்களும் அமைந்திருந்தன.

அரங்கியல் பயிற்சிப் பட்டறை

வருடாவருடம் பாடசாலை மாணவர்களின் திறன், ஆளுமைகளை வளர்க்கும் நோக்கிலும் பரீட்சைக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்தும் நோக்கிலும் அரங்கியல் பயிற்சிப் பட்டறைகள் நிகழ்த்தப்படுகின்றன. கொழும்பு றோயல் கல்லூரி நடத்தும் நாடகப் பட்டறைகளில் பங்குதாரர்களாகவும் வளவாளராகவும்  நாடகப்பள்ளியினர் தொடர்ந்து  பங்காற்றுகின்றனர்.

2019ஆம் ஆண்டு கொழும்பு இந்துக் கல்லூரி பிரதான மண்டபத்தில்  நடத்தப்பட்ட அரங்கியல் பயிற்சிப் பட்டறையில், இங்கிலாந்து அவைக்காற்று கலைக் கழகத்தின் க.பாலேந்திரா, ஆனந்தராணி பாலேந்திரா போன்றோரும் வளவாளர்களாக கலந்து கொண்டனர். பயிற்சிப் பட்டறையில் நூற்றுக்கணக்கான  மாணவர்கள் பங்கு கொள்வது குறிப்பிடத்தக்கது.

‘விருட்ஷங்களாகும் விழுதுகள்’ ஆவணத் தொடர்

அர்ப்பணிப்புடன் தொடர்ந்து  அரங்கத்துறையில் பணியாற்றிவரும் இளம் கலைஞர்களில் அரங்கியல்  செயற்பாடுகள், வாரத்தில் ஒருநாள் ‘விருட்ஷங்களாகும் விழுதுகள்’ஆவணத் தொடராக பா. நிரோஷனால் எழுதப்பட்டு, நாடகப்பள்ளி  இணையத்தில் வெளியாகிறது. இத்திட்டத்தில் அரங்கியல் துறைகளில் ஈடுபடுகின்ற அனைத்து கலைஞர்களின் செயற்பாடுகளும் ஆவணப்படுத்தப்பட்டு முழுமையாக நூலாக்கம் செய்யப்பட்டுள்ளது.

 சர்வதேச  இணையவழி அரங்கியல் கருத்தரங்கு

 கடந்த காலங்களில் அர்ப்பணிப்பு டன் அரங்கப் பணியாற்றிய பல தமிழ் நாடக ஆளுமைகளை நாங்கள் மறந்து விட்டோம்; அறியாமல் போனோம். அவர்கள் சார்ந்த விடயங்களை, உலகறியச் செய்ய வேண்டிய பொறுப்பு  எங்களுக்கு உண்டு என்ற நோக்கத்துடன் இச்செயற்பாட்டு ஆரம்பிக்கப்பட்டது. குறிப்பாக, ‘அறிந்தவற்றையும் அனுபவத்தையும் கூறுவோம்; அறியாதவற்றை செவிமடுப்போம்’ என்ற அரங்க சிந்தனையில் உலகெங்கும் உள்ள  தமிழ் நாடக ஆளுமைகளை இணைத்து  உரையாற்றியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X