2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஆரோக்கியம் கெட்ட ​ஆரோக்கியபுரம்

Princiya Dixci   / 2021 ஜூலை 24 , பி.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அபிவிருத்தி என்ற போர்வையில் அ​ழிக்கப்படும் வளங்கள்

முல்லைத்தீவு, கொக்காவில் பிரதேசத்தில் சட்ட விரோத கிரவல் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட பகுதி, கடந்த வாரம் முற்றுகையிடப்பட்டு, கிரவல் அகழ்வில் ஈடுபட்ட  கனரக வாகனங்களுடன் அதன் சாரதிகள்  கைது செய்யப்பட்டு உள்ளமையானது, பிரதேச மக்கள் மத்தியில்  நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இதுவரைகாலமும் இவற்றைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகள் கண்மூடியிருந்தார்களா? எனவும் கேள்வியெழுப்பி உள்ளனர்.

முல்லைத்தீவு  மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசத்தில்  2,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பகுதிகளில் பெருங்காடுகள்   அழிக்கப்பட்டு, கிரவல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தொடர்பில் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதனால், புத்து வெட்டுவான், பழைய முறிகண்டி, ஐயன்கன் குளம், மருதங்குளம் உள்ளிட்ட பல விவசாய கிராமங்களில் வாழும் மக்கள் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில், பலதரப்பட்ட நியாய பூர்வமான காரணங்களை அந்த மக்கள் முன்வைத்திருக்கின்றனர்.

 போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின்  அபிவிருத்தி என்பது, பிரதான நோக்கமாக இருந்தாலும் வளங்களை அழிப்பது என்ற விடயத்தில்,  அக்கறை காட்ட வேண்டிய இன்றைய சூழலில், அவிருத்தி என்ற போர்வையில் ஏராளமான வளங்கள் அழிக்கப்படுகின்றன. இந்த வளங்கள் மீள் உருவாக்கம்  அல்லது, அழிக்கப்படுகின்ற வளங்களுக்கு மாற்றீட்டு வளங்களை உற்பத்தி செய்தல் என்பது, இல்லாத நிலையும் காணப்படுகின்றது.

குறிப்பாக, இந்தப் பிரதேசத்தில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் காடுகள்  அழிக்கப்பட்டு, கிரவல் அகழ்வுகள்  மேற்கொள்ளப்படுகின்றன. கிராமிய போக்குவரத்துக்காகப் புனரமைக்கப்படும்  வீதிகள் எவையும்  கனரக வாகனங்கள் பயணிக்க கூடிய வகையில் பெரும்பாலும் புனரமைக்கப்படுவதில்லை. இவ்வாறான கிரவல் அகழ்வு மேற்கொள்ளப்படும் பிரதேசத்துக்கு அண்மித்த  கிராமங்களில் இருக்கின்ற வீதிகள் எவையும், அவ்வாறு  புனரமைக்கப்படவில்லை.

அதாவது, முல்லைத்தீவு மாவட்டத்தையும் கிளிநொச்சி மாவட்டத்தையும் பிரிக்கின்ற அக்கராயன் - முறிகண்டி வீதி, துணுக்காய் - கொக்காவில் வீதி என்பன  புனரமைக்கப்பட்ட போதும், இந்த வீதிகளினூடாகக்  கனரக வாகனங்களின் போக்குவரத்தின் காரணமாக, வீதிகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன.

இதனால் வறுமைக்கோட்டின் கீழ்  அன்றாடம் இயற்கையோடும் வனவிலங்குகளோடும்  போராடித் தங்களுடைய  வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்லுகின்ற  மக்கள்,  தொடர்சியாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்

அதாவது, குறித்த கிராமங்களுக்குச் செல்லும் இந்த வீதிகள்,  புனரமைக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கூட உரிய முறையில் பயன்படுத்தப்படாத நிலையில், கனரக வாகனங்களின் போக்குவரத்துக் காரணமாக, முழுமையாகச் சேதமடைந்திருப்பதால், இந்தக் கிராமங்களுக்கான போக்குவரத்துகள் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது.

இந்தப் பிரதேசத்தில் நோய்வாய்ப்பட்டவரை உரிய காலத்துக்கு வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில், பலர் உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. இதைவிடக் கடந்த பத்து ஆண்டுகளில் இந்த மக்கள் அனுபவித்த துன்ப துயரங்களும் ஏராளம்.

அதாவது, ஒரு பாடசாலைக்கு ஆசிரியர் செல்வதாக இருந்தால், ஏ-9 வீதியில் இருந்து  600 ரூபாய் ஓட்டோவுக்குக் கொடுக்கவேண்டும். மீளவும்  அந்த ஆசிரியர் ஏ9 வீதிக்கு வருவதற்கு 600 ரூபாய் கொடுக்க வேண்டும். அந்தப் பாடசாலையில் கற்பிக்கின்ற ஆசிரியர், தன்னுடைய சம்பளத்தின் பெரும்பகுதியை போக்குவரத்துக்கு செலவழிக்கிற ஒரு நிலைமையைக் காணமுடிகின்றது.

இதுபோன்று, தினக்கூலி செய்யும் மக்கள் படும் கஷ்டங்கள் ஏராளம். வளமான சமதரைகளாகவும் சோலைகளாகவும் காணப்பட்ட இந்தப் பகுதிகள்,  இன்று பல ஆயிரம் ஏக்கர் வரையான பகுதிகளில்  காடுகள் அழிக்கப்பட்டு, கிரவல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு, பாரிய குன்றும் குழிகளுமாகக் காணப்படுகின்றன. குறிப்பாக, ​ஆரோக்கியபுரம் பகுதிகளிலும் இவ்வாறான நிலைமை காணப்படுகின்றது.

 இந்த நிலையில், கடந்த வாரம் கொக்காவில் பிரதேசத்தில் சட்ட விரோத கிரவல் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட பகுதி, முற்றுகையிடப்பட்டு கிரவல் அகழ்வில் ஈடுபட்ட  கனரக வாகனங்களுடன் அதன் சாரதிகள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதாவது, துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வனப்பகுதியிலேயே குறித்த முறையற்ற கிரவல் அகழ்வு முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.  குறித்த விடயம் தொடர்பில், இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைவாக, கொழும்பிலிருந்து வருகை தந்த  புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகத்தின் மண் அகழ்வாராய்ச்சி தள சட்ட பிரிவினை அமலாக்கும் அதிகாரிகள், இராணுவப் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளால் குறித்த பகுதி சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டு, சட்டவிரோத செயற்பாட்டை தடுத்து நிறுத்தியதுடன்,  நடவடிக்கை மேற்கொண்டுள்ளமையானது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன்போது கிரவல் அகழ்வுக்கு அனுமதிக்கப்பட்டமைக்கு மாறாக, அகழ்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளமை அவதானிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் மீது நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட பகுதிக்கு மேலதிகமாக அகழ்வு மேற்கொள்ளப்பட்டமை, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மாறாக 20 அடிக்குமேல் அகழ்வு மேற்கொண்டமை போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில், 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர், பாரிய கிரவல்  அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வந்துள்ள நிலையில், அவ்விடயம் தொடர்பில் ஊடகங்களில் செய்திகளும் வெளிக்கொண்டு வரப்பட்டன.

ஆனாலும், குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு வந்ததுடன், அங்கு சுற்றாடலைப் பாதிக்கும் வகையில் அகழ்வுப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.

  குறித்த சட்டவிரோத செயற்பாடுகளை, இதுவரை கண்டுகொள்ளாத பிரதேச செயலகம், மாவட்ட செயலகம், வனவள பாதுகாப்பு பிரிவு, வனஜீவராசிகள் திணைக்களம், கனியவள திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்கள், அரசியல்வாதிகள் போன்ற பொறுப்புமிக்க பதவிகள் வகிப்போர் இந்த விடயங்கள் தொடர்பில் ஏன் கவனம் செலுத்தவில்லை என்பது  தொடர்பில் மக்கள் தொடர்ந்தும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .