2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

களிப்பின் பின்னரான கசப்பு

Princiya Dixci   / 2021 ஜூலை 24 , பி.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

18-20 கிலோக்களுக்குள் மறைந்துபோன 1,000 ரூபாய்

தெரிந்திருந்தால் கொண்டாட்டங்களைத் தவிர்த்திக்கலாம்

'வேண்டாதவற்றை விழுங்குவதை விட சிறந்ததாம் தொண்டையிலேயே வைத்துக்கொள்வது" . ஆனால், அதைக்காட்டிலும் சிறந்தது உமிழ்ந்துவிடுவது.

அது போலத்தான் சில குமுறல்களும்;  தீர்வு கிடைப்பது நிச்சயமற்றதாக இருந்தாலும் சில விடயங்களை வெளியே கொட்டும்போதுதான் அதைப்பற்றி உரியவர்கள் சிந்திக்கவாவது வாய்ப்பு கிடைக்கும்.  காலப்போக்கில் தீர்வுகளைக்கூட பெறக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தாலும் கிடைக்கலாம். 

இன்று மலையகப் பகுதிகளில் தொற்றுநோய் பரவலின் மத்தியிலும்  போராட்டக்களங்கள் உயிர்பெறுகின்றன. ஒரு சிறிய இடைவெளி; மீண்டும் அதே கோஷங்களும் கொடிகளும்! ஆனால்,   ஒரே ஒரு வேறுபாடு, முன்வைக்கப்படும் கோரிக்கைகளில் மாத்திரமே! 

1,000 ரூபாய் கிடைத்துவிட்டதென வெற்றியை கொண்டாடிய நொடிகளில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. களிப்பின் பின் மறைந்திருக்கும் நிபந்தனைகளைப்பற்றி மறுக்கப்படும் சலுகைகளும் திணிக்கப்படும் கண்டிப்புகளும் முன்னரே தெரிந்திருந்தால் சிலவேளை கொண்டாட்டங்களுக்கு  இடமிருந்திருக்காது.

கட்சிசார் பேதங்களுடனோ அல்லது சாடல்களுடனோ இக்கருத்தை முன்வைக்க நான் முயலவில்லை . இயலாமையின் வெளிப்பாடாய் ஓர்  இனத்தின் வேண்டுகோளாய் மாத்திரமே அமைகிறது இக்கட்டுரை.

பெருந்தோட்ட கைத்தொழிலின் முக்கிய அங்கமாகத் திகழும் தேயிலை,  இறப்பர் தொழிற்றுறையின் சில பகுதிகள் அரச  கூட்டுத்தாபனங்களாலும்  பெரும்பகுதி பிராந்திய கம்பெனிகளாலும்  நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. 1992ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் மூலம், பெருந் தோட்ட நிர்வாகம் பிராந்திய கம்பெனிகளுக்கு கையளிக்கப்பட்டது.

இதற்கமைய இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு நாளொன்றுக்கான கூலி தீர்மானிக்கப்படும். ஆண்டுக்கு பின்னர் அரசாங்கமானது சம்பள நிர்ணய விடயத்தில் இருந்து விலகிக் கொண்டது.  பின்னர் கம்பெனிகள் தொழிற்சங்கங்களைக்கொண்டு கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்க ஆரம்பித்தன.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பாக மிக நீண்ட காலமாகவே பேசப்பட்டு வருகின்றமை எல்லோரும் அறிந்ததே.  அதுமட்டுமல்லாது அது தொடர்பான வரலாற்றின், பல்வேறு சந்தர்ப்பங்களில் போராட்டங்களும் பணிப்பகிஷ்கரிப்பும் இடம்பெற்று வந்துள்ளன.   2014ஆம் ஆண்டு தான் அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாய் அவசியம் என்ற யோசனை தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்டன. உற்பத்திக் கொடுப்பனவு, வரவுக்கான கொடுப்பனவு, விலைக்கான கொடுப்பனவு போன்றன கம்பெனிகளுக்கு சாதகமாக அமையவே அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாய் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

தனி மனித வாழ்க்கைச் செலவும் விலைவாசிகளும் அதிகரித்து செல்லவே அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாமல், வறுமையை சுவாசிக்கும் ஒவ்வொரு தோட்டத் தொழிலாளியினதும்  குறைந்தபட்ச வேண்டுகோளாக ஆயிரம் ரூபாய் சம்பளம் அமைந்தது.

நீண்ட கால போராட்டங்களுக்கு பிறகு கடந்த வருடம் தேர்தல் வாக்குறுதியாக ஆயிரம் ருபாய் சம்பளம் கிடைக்கும் என்ற நம்பிக்கை தரப்பட்டது.

அதன்படி, இந்த வருடம் மார்ச் மாதம் முதல் பெருந்தோட்ட தொழிலார்களுக்கு அடிப்படை சம்பளமாக ஆயிரம் ருபாய் வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அறிவித்தார். இன்று அதற்கமைய சில தோட்டங்களில் சம்பளம் வழங்கப்பட்டும் வருகின்றது.

சம்பள நிர்ணய சபையால் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் அதற்காக பெருந்தோட்ட நிறுவனங்கள் முன்வைத்த   நிபந்தனைகள் தொழிற்  சங்கங்களையும்  தொழிலாளர்களையும் பாதிக்கும் விதமாக அமைந்தது.

மாதமொன்றுக்கு 13  நாள்கள் மாத்திரம் வேலை வழங்கப்படுமெனவும் ஏனைய கொடுப்பனவுகள் சலுகைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமென்பதோடு கூட்டு ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய வேண்டுமென்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இவை எல்லாவற்றையும் கடந்து இன்று பெருந்தோட்ட துறையின் பெரும்பங்கு வகிக்கும் தேயிலை தோட்ட துறையில் உருவாகியுள்ள பிரச்சினைதான் நாளொன்றுக்கான கூலியாக ஆயிரம் ரூபாயை பெறவேண்டுமானால் 18 கி​லோ கிராம் தேயிலை கொழுந்துகளை பறித்தாகவேண்டும் என நிர்வாகங்களால் தொழிலாளர்கள் நிர்பந்திக்கப்படுவது. மேலும் சில தோட்டங்களில் இது 20 கிலோ கிராமாகவும் காணப்படுகின்றது.

நிறுவனங்களால் முன்வைக்கப்படும் கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் சாத்தியமாக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளனவா என்பதையே முதலில் ஆராய வேண்டும். சிறுவயது காலத்தில், நான் திரிந்த இடமெல்லாம் வெறும் தேயிலை மலைகள்தான். ஒருவேளை அப்போது இது சாத்தியப்பட்டிருக்கலாம். ஆனால் இன்று நிலைமை அவ்வாறில்லை.

சில தோட்டங்கள் உரிய பராமரிப்பின்றி காடாகிக் கிடக்கின்றன. தேயிலை செடிகள் வளர்க்கப்படும் பரப்பும் குறைவடைந்து காணப்படுகின்றது.  இரசாயன பசளைக்கான தட்டுப்பாடு மற்றும் காலநிலையில் உண்டாகும் மாற்றங்களும் தேயிலை செடியின் வளர்ச்சியில் மாற்றத்தை  ஏற்படுத்தும். அதிக பனிப்பொழிவு காலங்களில் தேயிலையின் செழிப்பு குறைவடையும்.

தேவையான வருமானத்தைப் பெற முடியாமல் செலவுகளை ஈடு செய்ய முடியாமல் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பலர் தோட்டத்  தொழிலைக் கைவிட்டு நகர்ப்பகுதிகளை  நாடிச்  செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சரியான அளவு தேயிலையை உற்பத்தி செய்ய முடியாததால் சில தோட்டங்களில் தொழிற்சாலைகளும் மூடப்பட்டுவிட்டன. இப்படியான பல காரணங்களால் எதிர்பார்க்கும் அதிகளவான கொழுந்துகளை பறிப்பது சாத்தியமற்றதாக அமைகிறது.

ஆனால், ஒரு தோட்டத் தொழிலாளியின் அடிப்படை தேவையும் செலவும் மாத்திரம் இதில் எந்தக் காரணிகளாலும் மாற்றமடையாது  என்பதே உண்மை. 

சம்பளத்துக்கு அப்பால் ஊழியர் சேமலாப நிதி கொடுப்பனவு, நம்பிக்கை நிதி கொடுப்பனவு, தண்ணீர் வசதி, சுகாதாரம், சலுகை விலையில் தேயிலை, வீடமைப்புத் திட்டங்கள் போன்ற சேமநல வசதிகள் வழங்கப்படுவதாக முதலாளிமார் சம்மேளனம் குறிப்பிட்டாலும் அவைகளின் தரம் தொடர்பாக எப்போதுமே கேள்விகள் எழத்தான் செய்கின்றன.

தொழிலாளர்களின் சார்பில் மாத்திரம் இதைப் பற்றி சிந்திக்காது சிறிது நாட்டு நலன் பற்றியும் சிந்தித்துப் பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக தேயிலை உற்பத்தியும் பராமரிப்பும் குறைந்து வரும் நிலையில் விரக்தியால் பெரும்பாலானோர் தோட்டத் தொழிலைக்  கைவிட்டுச்  சென்றால் நாட்டின் மொத்த உற்பத்தியிலும் வீழ்ச்சி ஏற்படும். 

எதிர்காலத்தில் நிர்வாகம் செய்ய நிர்வாகிகள் மட்டும் இருந்தால் போதாது தோட்டங்களும் தேவைதானே? ஆகவே இன்றே தோட்டங்களையும் தொழிலாளர்களையும் காப்பாற்ற முன்வாருங்கள்.  என்ன செய்யவேண்டும் என்பதை ஆராய மலையக அரசியல் பிரதிநிதிகளும் தொழிற்சங்கங்களும் அரசாங்கமும் ஒன்றிணைய வேண்டும்.  களத்திலிறங்கி ஆய்வுகளை மேற்கொண்டு தேவையான முடிவுகளைப் பெற வேண்டும். 

அப்போதுதான் அவர்களின் போராட்டத்தின் நியாயத்தையும் உங்களால் உணர முடியும்.  அத்தோடு அதற்கான மாற்று வழிகளையும் பெறமுடியும். வெறுமனே செவ்விகளிலும் நேரலையிலும் ஆதரவையும் கண்டனத்தையும் தெரிவிப்பதால் மாத்திரம் மாறப் போவது எதுவுமில்லை.

பாராமுகமாய் எல்லோருமே இருந்துவிட்டால் நட்டமடையப்போவது எல்லோரும்தான்.  அவர்கள் தோளில் சுமப்பது வெறும் கூடையை அல்ல; எமது நாட்டின் பொருளாதாரத்தை. நாடு கெட்ட பின்பு, நாம் மட்டும் இருந்து என்ன பயன்? தீர்வுகளை நோக்கி நகரத் தொடங்குங்கள். அன்று தான் எல்லாமும் மாற்றமடையும்! போராட்ட களங்களிலேயே புதைந்துபோக எண்ணாதீர்கள்.  

அடிப்படையை வைத்து அடையமுடியாத தூரத்தை சிந்திப்பதன் மூலம் சென்றடையலாம்.  நாணயத்தின் இரு பக்கங்கள் போல இந்த 18 கிலோ கிராம் பிரச்சினைக்கும் தீர்வுகள் இருக்கத்தான் செய்கின்றன. 

ஒன்று, தேயிலை தோட்டங்களின் தரத்தை அதிகரித்து எதிர்பார்க்கும் தேயிலையின் விளைச்சலை இலகுவில் பெறக்கூடியதாய் செய்தல். அல்லது, நாளொன்றுக்கான ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்காக எடுக்க வேண்டிய கொழுந்தின் அளவை 18 கிலோ கிராமிலிலிருந்து குறைத்தல். இரண்டில் ஒன்றை செயற்படுத்த வேண்டியது அரசாங்கமே; எதிர்பார்ப்பு நம்முடையது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .