2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு....

Johnsan Bastiampillai   / 2021 செப்டெம்பர் 01 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

வ. சக்தி 

 

 

இலங்கையில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாகக் கோரத்தாண்டவமாடிய யுத்தத்தால் பல அப்பாவி உயிர்கள் காவு கொள்ளப்பட்டும், பலர் தங்களது அங்க, அவயவங்ளை இழந்தும் உள்ளார்கள். இவற்றினைவிட விபத்துகள், பேரிடர்கள் மூலமாகவும் பாதிக்கப்பட்டு பலர் தத்தமது அவயங்களை இழந்த நிலையில் வடுக்களைச் சுமந்து கொண்டு இம்மண்ணில் உலாவுகின்றனர். 

தேக ஆரோக்கியமுள்ள மனிதர்கள் பிறரிடம் கையேந்துகின்றார்கள். ஆனாலும் தமது இயற்கை உறுப்புகள் இருந்த காலத்தில் செயற்பட்டதுபோல் தற்போது நடமாடி முடியாத நிலையிலும் தாம் பிறருக்குப் பாராமாக இருந்து விடக் கூடாது என்ற நோக்கத்துடன் மாற்றுத்திறனாளிகள் இழந்த அவயங்களையும் பொருட்படுத்தாது பல கடின உழைப்பாளர்களாகவும், தொழில் முயற்சியாளர்களாகவும் காணப்படுகின்றார்கள்.

இவ்வாறு சுயமாக அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டாலும் அவர்களுக்குத் தேவையான செயற்கை அவயங்களைப் பெற்றுக் கொள்வதில் பல்வேறு சவால்களையும் இடர்களையும் எதிர்கொள்வதாகத் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில்தான் டென்மார்க் நாட்டில் அமைந்துள்ள வாணி சமூக பொருளாதார சுயமேம்பாட்டு நிறுவனம் மட்டக்களப்பில் அமைந்துள்ள தெரிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் ஆதரவுடன், கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களால் கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களை வழங்கி வைத்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில், பல்வேறு காரணங்களால் சுமார் 859 பேர் கால்களில் பாதிப்புற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளார்கள். அதில், 192 பேர் ஒருகால் அல்லது இரண்டு, கால்களையும் இழந்தவர்களாவர். இவர்களில் தற்போது 14 பேருக்கு மாத்திரம்தான் செயற்கைக் கால்களை வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு, அண்மையில் மட்டக்களப்பு வெல்லாவெளியில் நடை​பெற்றது.  

மிகுதியாகவுள்ள கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு, செயற்கைக் கால்களை வழங்க வேண்டியுள்ளது. இச்சந்தர்ப்பத்தில்தான் அரசாங்கமும், அரச சார்பற்ற அமைப்புகளும் தனவந்தர்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு மனமுவந்து உதவ முன்வர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

தற்போது கம்போடியாவின் தரத்துக்கு ஏற்ப செயற்கை கால்களை உற்பத்தி செய்யும் மன்னாரில் அமைந்துள்ள வாழ்வோதையம் அமைப்பினர் இந்த செயற்கை கால்களை தயாரித்துக் கொடுத்துள்ளார்கள். இந்த நல்ல காரியத்துக்கு டென்மார்க்கில் அமைந்துள்ள வாணி எனும் சகோதரி அவருடைய அமைப்பினூடாக நிதி உதவி செய்துள்ளார்.

செயற்கைக் கால்களைப் பெற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகள் இவ்வாறு தெரிவித்துள்ளார்கள். “மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மறுமலர்சியை நோக்கி்ச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிகாரிகள் செயற்பட்டு வருவதையிட்டு அகமகிழ்கின்றோம். இன்னும் மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் பல தேவைகள் உள்ளன. நாங்களும், அனைவரும் எதிர்பார்ப்பது போல் பல சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம். இருட்டில் இருக்கும் எம்மை வெளிச்சத்தில் தூக்கி விட்டுவதற்கு  அனைவருக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதன் ஒரு கட்டம்தான் தற்போது நடைபெற்றுள்ளது, அதற்காக எமது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்” எனத்  தெரிவித்தார்கள். 

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைத் தலைவர் தம்பிப்போடி வசந்தராசா தெரிவிக்கும்போது, “மாற்றுத்திறனாளிகள் அதிகம் கஸ்டப்பட்டு அதிக வலிகளைச் சுமந்தவர்களாக சமூகத்தில் காணப்படுகின்றவர்கள். இவ்வாறான நிலையிலும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனேக மாற்றுத்திறனாளிகள் சிறப்பாக சுயதொழில்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். 

இரண்டு கால்களும் உள்ளவர்கள் மற்றவர்களிடம் இரந்து வேண்டிக் கொள்கின்ற இக்காலகட்டத்தில் கால்களை இழந்த இந்த மாற்றுத்திறனாளிகள் இவ்வாறு உழைத்து முன்னேறுவதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. இவ்வாறானவர்கள்தான் பலசாலிகள்; இவர்கள் மற்றவர்களுக்கு உதாரணபுரிஷர்களாக வாழ்ந்து வருகின்றார்கள். பல இன்னல்களைத் தாங்கிக் கொண்டு வாழ்ந்து வரும் இவ்வாறான மாற்றுத்திறனாளின் வாழ்வாதாரத்துக்கு மேலும் உதவ வேண்டும்.  மிகுதியாகவுள்ள கால்களை இழந்தவர்களுக்கும் செயற்கை கால்களை பொருத்துவதற்கு தனவந்தர்கள் முன்வரவேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.  

செஞ்சிலுவை அமைப்பின் மட்டக்களப்புக் கிளைத் தலைவரின் கருத்துகளுக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்திலே பல்வேறு காரணங்களால் சுமார் 859 பேர் கால்களில் பாதிப்புற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளார்கள். அதிலே 192 பேர் ஒருகால் அல்லது இரண்டு, கால்களையும் இழந்தவர்கள் உள்ளார்கள் என அறிய முடிகின்றது.  ஏனைய மாற்றுத்திறனாளிகளுக்கும் கடந்த காலங்களில் வழங்கிய செயற்கை கால்கள் பழுதடைந்த நிலையில் வாழ்ந்து வருவோருக்கும் அரசாங்கம், தன்னார்வ தொண்டர் அமைப்புகள் உதவவேண்டும் என்பது கட்டாயமாகும். ]

டென்மார்க் நாட்டில் அமைந்துள்ள வாணி சமூக பொருளாதார சுயமேம்பாட்டு நிறுவனம் தற்போது முன்வந்தள்ளதுபோல், புலம் பெயர் தேசத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு தன்னார்வ அமைப்புகளும், தனி நபர்கள்கூட, மட்டக்களப்பிலே வாழ்கின்ற 859 பேருக்கும் உதவ முன்வரும் பட்சத்தில், அது ‘காலத்தினால் செய்த உதவி ஞாலத்தில் மாழப் பெரிது’ என்பதற்கு எடுக்துக்காட்டாக அமையும். 

 இயற்கையாக அல்லது செயற்கையான விடயங்களால் அங்க அவயங்களை இழந்தவர்களுக்கு செயற்கை அவயங்களை இழந்ததென்பது ஈடு செய்ய முடியாததொன்றாகும். அவயங்களை இழந்தவர்களுக்கு செயற்கை அவயங்கள் பொருத்தப்படும்போது அவை அவர்களுக்கு ஏதுவாகவும், இலகுவாகவும் அமையும் விதத்தில் வழங்க வேண்டும்.

“மாற்றுத்திறனாளிகள் பின்னடைவாக இருக்கக்கூடாது அவர்களும் முன்மாதிரியாகத் திகழ வேண்டும். அனேகமாக மாற்றுத்திறனாளிகள் தொழில் முயற்சிகளிலும், ஏனைய வாழ்வாதார  செயற்பாடுகளிலும் மேம்பட்டிருக்கின்றார்கள். ‘எம்மைவிட மிகவும் வலிதான மனப்பக்குவம் உடையவர்கள் மாற்றுத்திறனாளிகள்’.  நாங்கள் எமது சேவைக் காலத்தில் மக்களுக்குத் தேவையான அனைத்து சேவைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்ற  நோக்கத்துடன் நாமும் செயற்பட்டு வருகின்றோம்” என போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி தெரிவிக்கின்றார்.

பிரதேச செயலாளர் தெரிவிப்பது போன்று அரச இயந்திரமும், அரச சார்பற்ற அமைப்புகளும், வடுக்களைச் சுமந்து நிற்கும் மக்களின் குறைகளைத் தீர்த்து வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செற்பட வேண்டும் என்பதுவே அனைவரின் எதிர்பார்ப்பாகவுள்ளது. 

இயற்கையாகவோ அல்லது மனித நடவடிக்கை மூலமாகவோ பாதிப்புறும் மக்களுக்கு ஆதரவு வழங்குவது துறைசார்ந்தவர்களின் தலையாய கடமையல்லவா? 

எனவே துறைசார்ந்தவர்களும், தனவந்தர்களும் தன்னார்வ அமைப்புகளும் முன்வந்து மாற்றுத்திறனாளிகள் வாழ்விலும் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முன்வர வேண்டும். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X