2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘வங்கர்’ கிராமம்

Johnsan Bastiampillai   / 2021 ஒக்டோபர் 05 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வ. சக்திவேல்

shagthivel@gmail.com

 

 

 “எமது கிராமம், மட்டக்களப்பு மாவட்டமாக இருந்தாலும், அம்பாறை மாவட்டத்தின் ஓரமாக, காடு சார்ந்த சூழலில் அமைந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்துக்குள் இருக்கும் நாம், குடிநீருக்காக அருகிலுள்ள அம்பாறை மாவட்டத்திற்குச் சென்றுதான் குடிநீரைப் பெற்றுவரவேண்டியுள்ளது. அந்தப் பகுதி, அதாவது எமது கிராமத்தின் ஒருபகுதியில், சகோதர சிங்கள மக்களும்  வாழ்கின்றார்கள். அவர்கள் வாழும் பகுதியில், அம்பாறையிலிருந்து வரும் இக்கினியாகல குளத்திலிருந்து நீர், வாய்க்கால் வழியாகச் செல்வதால், அம்மக்களுக்கு நீர்ப் பிரச்சினை கிடையாது. ஆனால், எமது பகுதியில் அமைந்துள்ள வாய்க்கால்கள் அனைத்தும், தூர்ந்துபோய், வரண்டு காணப்படுகின்றன. ஒரு கிராமத்தில், இரு இனங்கள் வாழ்ந்தாலும், இரண்டும் இரு வேறு பிரிவுகளாகத்தான் பார்க்கப்படுவதாக நாம் உணர்கின்றோம். அருகிலுள்ள சகோதர இன மக்களுக்கு நீர் விநியோகிக்கப்படுவது போல், எமக்கும் வழங்கினால் நாம் குடிநீருக்காக அலையவேண்டியதில்லை” என்கின்றனர் கிராமம் 25 மக்கள்.

இன்று நேற்றல்ல; இவர்கள் இக்கிராமத்தில் குடியேறிய காலமிருந்து, குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டுதான் வருகின்றார்கள். மிகவும் தொலைதூரம் சென்று, தலையில் வைத்து குடிநீரைப் எடுத்து வருவதால், தாம் பல உபாதைகளுக்கும் உட்படுகின்றோம் எனத் தெரிவிக்கும் இவர்கள், தமது கிராமத்தை ஊடறுத்துச் செல்லும் வாய்க்கால் ஊடாக, நீர் கிடைக்குமாக இருந்தாலே போதும் என்கின்றனர். நாம், எமது மேட்டு நிலத்தில் தொழில் செய்து, பிழைத்துக் கொள்வோம். எமது கிராமத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் குழாய் மூலமான குடிநீர் வழங்கப்படுகின்றது. அதனைக்கூட எமக்கு பெற்றுத்தருகின்றார்கள் இல்லை என ஆதங்கம் தெரிவிக்கின்றனர். 

“இதனை நீர்பாசனத்திணைக்களத்தினர் வந்து பார்வையிட்டும் இன்னும் சீர் செய்து தருகின்றார்களில்லை, பிரதே செயலாளருக்குக் கடிதங்கள் கொடுதுள்ளோம்.
“இவைகள் அனைத்தையும் உற்றுநோக்கிப் பார்க்கும் போது, எமது கிராமத்திலுள்ள தமிழ் மக்களை வேறுபடுத்திக் காட்டுவதாகத்தான் நாம் உணர்கின்றோம். அதிகாரிகளிடம் பலமுறை எமது கிராமத்தின் பிரச்சினைகள் குறித்து மேலதிகாரிகளுக்கு அறிவித்தால், ‘அனைத்தும் வரும், வரும்’ எனத் தெரிவிக்கின்றார்களே தவிர, எதுவும் வந்ததாகத் தெரியவில்லை” என  25ஆம் கிராமத்திலுள்ள  மக்கள் தெரிவிக்கின்றனர். 

“எங்கள் கிராமத்தில், மின்சார வசதி இருந்தாலும் வீட்டு மின் இணைப்பைக்கூடப் பெறுவதற்கு எம்மிடம் வசதிகள் இல்லை.  அதனைப் பெற்றுத் தருவதற்கும் யாரும் முன்வருகின்றார்களும் இல்லை. வீதிகளும் குன்றும் குழியுமாக, மோசமாகப் பழுதடைந்து காணப்படுகின்றன. இதனால் நடந்துகூடச் செல்லமுடியாத நிலைமை காணப்படுகின்றது. அண்மையில், ஒரு பெண்ணுக்கு பாம்பு தீண்டியது; அவரை வைத்தியசாலைக்கு இந்த வீதியால் எடுத்துச் செல்வதற்கு மிகுந்த சிரமப்பட்டோம்; வைத்தியசாலைக்குச் சென்றவேளை அப்பெண்ணுக்கு விசம் ஏறிவிட்டது. எனினும், தெய்வாதீனமாக அவர் உயிர் பிழைத்துவிட்டார்.

“எங்கட கிராமத்தில் கடந்த அரசாங்கம் இருந்த காலத்தில் செமட்டன வீட்டுத்திட்டத்தின் கீழ் வீடமைப்புத் திட்டம் ஒன்று நிருமாணிக்கப்பட்டு அது இன்றுவரைப் பூர்த்தி செய்ய முடியாமல் அரைகுiறாகக் காணப்படுகின்றது. இது தொடர்பில் யாரும் கவனத்தில் எடுக்கின்றார்கள் இல்லை. தலையில் வைத்து தண்ணிக்குடத்தை சுமந்து சுமந்து தலை விறைத்துவிட்டது. “எங்கட கிராமம் வங்கர்ல கிடக்கிறமாதிரி உள்ளது”என 70 வயதுடைய பெண் ஒருவர் தெரிவிக்கின்றர்.

“இந்தக் கிராமத்தில், முதல் தலைமுறை மறைந்து, இரண்டாவது தலைமுறைதான் வாழ்ந்து வருகின்றது. இரண்டு தலைமுறைகள் கடக்கின்ற நிலையிலும், இந்தக்  கிராமத்திலுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கவிலலை என்றால், இனி நாங்கள் என்ன செய்வதென்று தெரியாதுள்ளது”   என,கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மனிதன், ஓரளவுக்கேனும் தானும் தனது குடும்பமும் என உழைத்து, உண்டு ஆராக்கியமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கு அவன் சார்ந்த சூழலை  அமைத்துக் கொடுக்க வேண்டியது துறைசார்ந்தவர்களின் தலையாய கடமையாகும்.

மட்டக்களப்பு மவாட்டத்தின் போரதீவுப்பற்றுப் பிரதேசத்துக்கு உட்பட்ட றாணமடு கிராம சேவையாளர் பகுதிக்கு உட்பட்டதே 25ஆம் எனும் கிராமமாகும்.  அங்கு 20 தமிழ் குடும்பங்களும் 42 சிங்களக் குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றார்கள். யுத்தகலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட இக்கிராமம், அன்று தொடக்கம் இன்றுவரை ஒரு பரிணாமத்தை எட்டாத நிலையிலேயே இருக்கிறது. 

யுத்த காலத்தில், பலமுறை இடம்பெயர்ந்து, மீளக் குடியமர்ந்துள்ள போதிலும் அங்குள்ள மக்களுக்கு சுகாதார வசதிகள், போக்குவரத்து வசதி, வீதி புனரமைப்பு, குடிநீர், தபாலக வசதி உள்ளிட்ட எதுவுமற்ற நிலையில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

25 ஆம் கிராமத்திலுள்ள சிங்கள மக்களிடம் வினவியபோது, “ சகோதர தமிழ் மக்கள், மிகுந்த அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வாழ்கின்றார்கள். நாம் அருகிலிருந்து கவனிக்கின்றோம். அந்த மக்கள் மத்தியில், இள வயது திருமணம், முறையான கல்வியின்மை, ஆரோக்கியமின்மை, குடிநீர்ப் பிரச்சினை போன்ற  பல தேவைகளைத் தாங்கியவாறு, அவர்கள் சகித்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள். அந்த மக்களுக்கு யாராவது உதவுவதற்கு முன்வர வேண்டும்” என, சிங்கள மக்களின் ஆதங்கம் காணப்பட்டது. 

“காட்டு யானைகளைத் தடுப்பதற்கு எல்லைப்பகுதியில்  மின்சார வேலி அமைக்கும் செயற்பாடுகளுக்குத் திட்டமிடல்கள் இடம்பெற்றுள்ள, தற்போது வரட்சி அதிகமாக உள்ளதனால் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் அதிகம் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் கிராமங்களுக்கு குடி நீரை வழங்குவதற்காக நீர்தாங்கிகளை மாவட்ட செயலகத்தினூடாக போரதீவுப்பற்றுப் பிரதேச சபைக்கப் பெற்றுக்கொடுத்துள்ளோம். கடந்த அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட செமட்ட செவன வீட்டுத்திட்டத்தின் கீழ் தமது பிரசேத்திற்கு 29 திட்டங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன அதில் இதுவரையில் 7 செயற்றிட்டங்கள் மாத்திரமே பூரணப்படுத்தப்பட்டுள்ளன. மிகுதியான வீட்டுத்திட்டங்கள் அனைத்தும் அரைகுறையாகத்தான் உள்ளன. இதுபற்றி நாம் மாவட்ட செயலகத்திற்கும், வீடமைப்பு அதிகார சபைக்கும் அறிவித்துள்ளோம். மேலும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ஏனைய திட்டங்களை முன்னுரிமைத் தேவகள் அடிப்படையில் கிராமங்கள் தோறும் அமுல்ப்படுத்தப்பட்டு வரப்படுகின்றன” என போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி தெரிவித்தார்.

கடந்த காலங்களிலிருந்து பல்வேறு கோரிக்கைகளுக்காக தமிழர்களும் சிங்களவர்களும் சண்டை பிடித்து, இறுதியில் ஆயுதம் ஏந்தி போராடி ஆளுக்கு ஆள் பகைமையை வளரத்தார்கள் என்பதை சர்வதேசமே அறியும். ஆனாலும் இலங்கையில் சிறியதொரு குக் கிராமத்தில் தமிழர்களும் சிங்களவர்களும், மிகவும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் இக்கிராமத்திலுள்ள தமிழ் மக்களின் அபிவிருத்தி என்பது, எட்டாக்கனியாக இருப்பது மிகவு வேதனைக்குரியதாகும். 

அடிப்படை வசதிகள் அற்றுக் காணப்படும் இக்கிராம மக்களுக்கு ஆதாரம் வழங்குவது சம்மந்தப்பட்டவர்களின் தலையாய கடமையல்லவா? உரிமைகள் மறுக்கப்படுகின்றபோது அதனைத் தட்டிக்கேட்டாலும் அதற்கு தட்டிக்கழிப்பது பதிலாக அமைந்துவிட முடியாது. 

எனவே போதீவுப்பற்றுப் பிரதே செயலாளர் தெரிவித்தது போன்று மக்களின் முன்னுரிமைத் தேவைகள் அடிப்படையில் செயற்பட்டு சமாதானம், இன ஒற்றுமையில் திகழும் 25 ஆம் கிராம மக்களின் துயரங்களைத் துடைக்க அரச அதிகாரிகளும் தனவந்தர்களும் புலம்பெயர் அமைப்புகளும் முன்வரவேண்டும். 

 ‘காடும் காடு சார்ந்த முல்லை நிலத்தில்’ தினத் தினம் தமது வாழ்வுக்காய் போராடும் மக்களின் துயரங்களில் ஒரு சிறு அளவேனும் துடைப்பதற்கு யாரேனும் முன்வருகின்றார்கள் என்ற வார்த்தைகள் கேட்டாலே அது, அக்கிராம மக்களுக்குத் தேனமிர்தமாய் இருக்கும் என்பதுபோல், அங்குள்ளவர்கள் தமது வாழ்வைக் கழித்து வருகின்றனர். 

எனவே, ‘அறம் செய்ய விரும்பு’ என ஒளவையார் கூறியது போன்று, உதவுவதற்கு மனம் படைத்தவர்கள்  25 ஆம் கிராமத்துக்குச் சென்று, அங்குள்ள மக்களின் துயரங்களில் முடியுமானவற்றை செய்துகொடுக்க வேண்டும் என்பதையே,  அந்தக் கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .