2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நாட்டை மேலும் முடக்காதிருக்க.....

Johnsan Bastiampillai   / 2021 மே 19 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஐயூப்  

கொவிட் -19 நோய், இலங்கையைத் தாக்க முற்பட்ட ஆரம்ப நாள்களில் இருந்தே, அரசாங்கம் அதைக் கட்டுப்படுத்த எடுத்த பல நடவடிக்கைகள், தெளிவற்றனவாகவும் சிலவேளைகளில் நேர்மையற்றனவாகவும் இருந்தன. அதனாலேயே, நோயின் இரண்டாவது, மூன்றாவது அலைகள் உருவானதற்கான பொறுப்பை, அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என, எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.  

ஆரம்பத்தில் அரசாங்கத்துக்கு கொவிட் - 19 நோயைக் கட்டுப்படுத்துவதைப் பார்க்கிலும், பொதுத் தேர்தலை நடத்தி, ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்வதே முக்கியமாக இருந்தது. எனவே, நாட்டில் நோய் பரவ ஆரம்பித்த முதல் வாரத்தில், (2020, மார்ச் மாதம்) நாட்டை முடக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளும்  மருத்துவர்களும் எவ்வளவோ வலியுறுத்தியும், அரசாங்கம் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்குத் தடையாகாத வகையிலேயே, ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்தது.  

அரசாங்கம், நோய்த் தடுப்பு விடயத்தில் மேற்கொண்ட மிகவும் பயனுள்ள நடவடிக்கை, அதில் முப்படைகளை ஈடுபடுத்திமையே ஆகும். ஏனெனில், படைகளிடம் பெருமளவில் ஆட்பலம் இருக்கின்றது; பொருள் வளம் இருக்கின்றது; திறமை இருக்கின்றது; தொழில்நுட்பம் இருக்கின்றது; பயிற்சி இருக்கின்றது; துணிவு இருக்கின்றது. இவை, சாதாரண காலங்களில் பயன்படுவதில்லை.   

அவர்களிடம் இருக்கும் இந்த வளங்களின் காரணமாகவே, மூன்றே நாள்களில், இரணவிலையில் பழைய ‘வொய்ஸ் ஒப் அமெரிக்கா’ கட்டடத்தை, கடந்த வருடம் மருத்துவமனையாக மாற்றினார்கள். அதேவேளை, தொற்றாளர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்களைக் கண்டுபிடிக்க, ஆளணியும் வாகனாதிகளும் அவர்களிடம் இருந்தன. கட்டளை பிறப்பிக்கப்பட்டால், இரவு, பகல் பாராது உழைக்கும் கட்டுப்பாடும் அவர்களிடம் இருக்கின்றது.  

பல கட்டுப்பாடுகள் மத்தியில், பொது மக்கள் செய்த பெரும் தியாகங்களின் காரணமாக, முதலாவது அலை, கடந்த வருடம் ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.   

ஒக்டோபர் மாதம் நான்காம் திகதி, மினுவங்கொடையில் பிராண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில், முதலாவது கொவிட்-19 நோயாளர் கண்டுபிடிக்கப்படும் போது, நாட்டில் அதுவரை 3,400 பேர் மட்டுமே தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர். அவர்களிலும் பெரும்பாலானோர் குணமடைந்து, சுமார் 150 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். கொவிட்-19 நோயால், 13 மரணங்களே அப்போது இடம்பெற்றிருந்தன.  

ஆனால், இனி கொரோனா வைரஸ் நாட்டைத் தாக்காது என்ற ஏதோ ஒரு மூட நம்பிக்கையில், ஆட்சியாளர்கள் நோயைக் கட்டுப்படுத்தியதற்கான பெருமைக்கு உரிமை கோரிக்கொண்டு இருந்தனர்.   

ஆயிரக்கணக்கான ஊழியர்கள் கடமையாற்றும் தொழிற்சாலைகள் போன்ற இடங்களில், ஆங்காங்கே அடிக்கடி பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்ற மருத்துவர்களின் ஆலோசனைகளை அவர்கள் புறக்கணித்தனர். எனவே, பிரண்டிக்ஸ் நிறுவனத்தில் ஆயிரத்துக்கு மேலாக நோயாளர்கள் அதிகரித்ததன் பின்னரே, அங்கு முதலாவது நோயாளரைப் பற்றி அறியக் கிடைத்தது.   

அப்போது, நோய் அங்கிருந்து பேலியகொட மீன் சந்தைக்கும் பரவி, அங்கிருந்து நாடு முழுவதிலும் பரவியிருந்தது. அந்த இரண்டு இடங்களிலிருந்து பரவிய தொற்றுக்கு, சுமார் 90,000 பேர் இலக்காகி இருந்தனர்.  

பின்னர், பல கட்டுப்பாடுகள் காரணமாக நாளாந்த புதிய நோயளர்களின் எண்ணிக்கை, சுமார் 800இலிருந்து 300ஆகக் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. அத்தோடு, அதிகாரிகள் ஆங்காங்கே நடத்தப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையையும் குறைத்தனர். அதனால், நிலைமை மேலும் முன்னேறுவதாகவே தெரிந்தது. எனினும், இது நாட்டின் உண்மையான நிலைமை அல்ல என்பதை, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சுட்டிக் காட்டினர்.   

எனவே, தமிழ் - சிங்கள புத்தாண்டு காலத்தில், நாட்டை முடக்காவிட்டால் நிலைமை மோசமாகும் என, அவர்கள் அரசாங்கத்துக்கு அறிவித்தனர். பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால், அரசாங்கம் அதற்கு இணங்கவில்லை. அதன் விளைவு விபரீதமாகியது. ஆயிரக் கணக்கானவர்கள் புத்தாண்டு காலத்தில், நாட்டின் பல பகுதிகளுக்கு உல்லாசப் பிரயாணங்களில் ஈடுபட்டனர். புத்தாண்டு முடிவடைந்து சுமார் ஒரு வாரத்தில், அதன் விளைவைக் காணக்கூடியதாக இருந்தது.   

இப்போது, நாளொன்றுக்கு சுமார் 2,400 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகின்றனர். நோயின் காரணமாக, நாளாந்த உயிரிழப்பு 20 க்கு மேலாக இருக்கிறது. மொத்த மரணங்களின் எண்ணிக்கை, 1,000 எட்டிவிட்டது. அப்போதும் ஆட்சியாளர்கள் நாட்டை முடக்க விரும்பவில்லை. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், இலங்கை மருத்துவச் சங்கம், மருத்துவ நிபுணர்களின் சங்கம் ஆகியன கூட்டாக, ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதி அழுத்தம் கொடுத்ததை அடுத்தே, அரசாங்கம் கடந்த வாரம் ஓரளவுக்கு நாட்டை முடக்க இணக்கம் தெரிவித்தது.  

நாட்டை முடக்குவதால், ஏற்கெனவே மிக மோசமான நிலையிலுள்ள நாட்டின் பொருளாதாரம், மேலும் பாதிக்கப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், இது நாட்டு மக்களின் உயிரைப் பாதுகாப்பது தொடர்பான விடயமாகும். இன்று மக்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்காதிருந்து, நிலைமை மேலும் மோசமானால், நாளை இதை விடப் பல மடங்கு இறுக்கமான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியிருக்கும்.   

இப்போது அரசாங்கம், நிலைமை மோசமானதற்காகப் பொது மக்களைக் குறை கூறுகிறது. உண்மைதான், பொது மக்கள் நிலைமையை உணர்ந்து, சுகாதார அறிவுறுத்தல்களை முறையாகக் கடைபிடித்து இருந்தால், நோயின் இரண்டாவது, மூன்றாவது அலைகளைத் தடுத்திருக்கலாம்.   

ஆனால், மக்கள் என்றால் எல்லோரும், ஒரே மாதிரியானவர்கள் அல்லர். கல்வி அறிவு, ஒழுக்கம், கட்டுப்பாடு, வெளியே செல்ல வேண்டிய நிர்ப்பந்தங்கள் ஆகிய பல காரணிகளால், அவர்கள் வேறுபட்டவர்கள்.   

எனவே, பொது மக்களில் பெரும்பாலானவர்கள் சுகாதார அறிவுறுத்தல்களை உதாசீனம் செய்தே வருகிறார்கள். இதைக் கட்டுப்படுத்துவதற்கே அரச இயந்திரம் இருக்கிறது. பொது மக்கள் மீது பூரண நம்பிக்கை வைக்க முடியுமாக இருந்தால், எந்தவொரு நாட்டிலும், குறிப்பாக கல்வி அறிவு உயர்ந்த மட்டத்தில் உள்ள வளர்ச்சியடைந்த நாடுகளில், ஆட்சியாளர்கள் கொவிட் - 19 நோயைக் கட்டுப்படுத்த, அந்நாடுகளை முடக்கவோ, ஊரடங்குச் சட்டம் போன்ற கட்டுப்பாடுகளை விதிக்கவோ தேவையில்லை.   

தற்போது, நாட்டில் சுமார் ஒன்றரை இலட்சம் தொற்றாளர்கள் இருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு கூறுகிறது. பி.சி.ஆர் பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை மட்டுமே, இங்கு தரப்படுகிறது.  

 நாட்டில் இரண்டு கோடிக்கு அதிகமான சனத் தொகையில் பத்து இலட்சம் பேராவது, இதுவரை அவ்வாறான பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. முழு சனத் தொகையையும் பரிசோதனைக்கு உட்படுத்தினால், இந்தப் புள்ளி விவரங்கள் இதை விட மிகவும் அதிகமாகவே இருக்கும். உண்மையிலேயே, தற்போதைய புள்ளி விவரங்களால், நாம் எம்மையே ஏமாற்றிக் கொள்கிறோம்.   

தற்போது நாட்டின் சுகாதாரத் துறை, நிலைமையைச் சமாளிப்பதில் தடுமாறுவதைக் காண்கிறோம். ஆரம்பத்தில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டதாகத் தெரிய வந்தால், பொதுச் சுகாதார அதிகாரிகள் உடனடியாக வந்து, அவரை மருத்துவமனை ஒன்றுக்கோ, சிகிச்சை நிலையமொன்றுக்கோ அழைத்துச் செல்வார்கள்.   

அத்தோடு, அவரது வீட்டில் உள்ளவர்களும் அவருடன் கடந்த இரண்டு வாரங்களில் தொடர்பு கொண்டவர்களும் தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.  

இரண்டாம் அலையின் போது, தனிமைப்படுத்தும் நிலையங்களைப் பராமரிப்பது அரசாங்கத்துக்குப் பிரச்சினையாகியது. எனவே, முதற்கட்டத் தொடர்பாளர்களை அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்த, அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.   

தற்போது, தொற்றாளர்களும் பல நாள்களாக வீடுகளிலேயே காத்திருந்துதான், மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. ஏனெனில், அவர்களை அழைத்துச் செல்ல, போக்குவரத்து வசதிகளைத் தேடிக் கொள்வதிலும் அவர்களுக்காக மருத்துவமனைகளில் கட்டில் வசதிகளை வழங்குவதிலும் சுகாதார துறையினர் பல சிக்கல்களை எதிர்நோக்கி இருக்கிறார்கள். எனவே, நோய் அறிகுறிகளைக் காட்டாத தொற்றாளர்களை, அவரவரது வீடுகளிலேயே வைத்துச் சிகிச்சை அளிக்க அரசாங்கம் திட்டமிட்டு உள்ளது.  

முறையாக அமலாக்க முடியுமாக இருந்தால், இது நல்லதொரு திட்டம் தான். இதனால் மருத்துவமனைகளில் நெரிசல் குறையும். மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவமனை ஆளணியினர் மீதான அழுத்தம் குறையும். அதனால் மோசமான நிலையிலுள்ள நோயாளர்களை, மேலும் நன்றாகக் கவனிக்க அவர்களுக்கு வாய்ப்பும் வசதியும் கிடைக்கும்.  

ஆனால், தமது கண் முன்னே, நோயாளர்கள் இல்லாத நிலையில், அவர்களது பிரச்சினைகளை மருத்துவர்கள் முறையாகப் புரிந்து கொள்வார்களா என்ற சந்தேகம் எழுகிறது. வீட்டில் தங்கியிருக்கும் ஒருவரது நிலைமை மோசமானால், அவரது உறவினர்களது தொலைபேசி அழைப்புகளின்படி, அவசரமாக நடவடிக்கை எடுக்கும் நிர்வாகப் பண்பாடு, நாட்டின் அரச நிறுவனங்களில் இருக்கின்றதா என்பதும் கேள்வியாகும்.  

இது மனிதரிடமிருந்து மனிதருக்கு மட்டுமே பரவும் நோயாகும். எனவே, பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும். மக்களோ, அதிகாரிகளோ, அரசாங்கமோ இவர்களில் எவர் தவறிழைத்தாலும், அதனால் பாதிக்கப்படப் போவது மக்களே ஆவார்.  

 எனவே, மக்களும் நிலைமையை உணர வேண்டும். மக்களின் தியாகங்களால் நோய் கட்டுப்படுத்தப்பட்டால் அதன் பெருமையை அரசாங்கம் கொள்ளையடித்துக் கொள்ளும். ஆயினும், மக்களுக்கு வேறு வழியில்லை.   

கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க, சில மாதங்களுக்கு முன்னர் கூறியதைப் போல், “நாம் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்த விடயத்தில் அரசாங்கம் தோல்வியடைய இடமளிக்கக் கூடாது” என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .