2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தோல்வி கண்ட அவசரகாலச் சட்டம் தேவையா?

Johnsan Bastiampillai   / 2021 ஒக்டோபர் 07 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

எம்.எஸ்.எம். ஐயூப்

 

 

 

அவசரகாலச் சட்டம் என்றாலேயே, மக்கள் பீதியில் உறைகின்றனர். காரணம், இதுவரை காலமும் அடக்குமுறைச் சட்டமாகவே அது பிரயோகிக்கப்பட்டு வந்துள்ளது. அரச தலைவர்கள், தாம் நல்ல நோக்கத்துடனேயே அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பிப்பதாக எப்போதும் கூறியுள்ளனர். ஆனால், நடைமுறையில் அடக்குமுறைக்காகவே அது  பாவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இலங்கையில் பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச் சட்டங்களால் தமிழ் மக்களே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில், அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையிலான போர் நடைபெற்ற காலத்தில், நீண்ட காலமாக அடிக்கடி பல்வேறு நிலைமைகளை எதிர்கொள்வதற்காக அரசாங்கங்கள் அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்துள்ளன.

அரசாங்கங்கள், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் போலவே, அவசரகால சட்டத்தையும் புலிகளை அடக்குவதற்காகப் பாவித்ததால் அவ்விரண்டு சட்டங்களாலும் மக்கள், குறிப்பாக தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டு வந்துள்ளனர்.

கொவிட் 19 நோயின் தாக்கத்தின் மத்தியில், நாட்டில் ஏற்பட்டிருக்கும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டையும் விலைவாசி உயர்வையும் காரணம் காட்டியே,  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, ஓகஸ்ட் 30 ஆம் திகதியன்று அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்தார். ஆனால், அத்தியாவசியப் பொருட்களின் சீரான விநியோகத்துக்குத் தடையாக அது செயற்படாவிட்டாலும் அந்தக் குற்றச்சாட்டின் பேரில் மக்கள் கைது செய்யப்படும் அபாயம் இருக்கிறது.

நாட்டில் அரசியல்வாதிகளும் உயர் அதிகாரிகளும், குறிப்பாக பொலிஸாரும் சட்டங்களைத் துஷ்பிரயோகம் செய்து மக்களை இம்சிப்பது ஒன்றும் புதிய விடயமல்ல. இன ஒற்றுமையை நோக்கமாகக் கொண்டே சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையின் கீழான சட்டம் (ICCPR) 2007 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. பெரும்பான்மைவாதத்தின் மூலம் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவதைத் தடுப்பதே இந்த உடனபடிக்கையின் நோக்கமாகும். ஆனால், அச்சட்டம் அனேகமாக சிறுபான்மையினருக்கு எதிராகவே பாவிக்கப்பட்டு வந்துள்ளது.

பெரும்பான்மையினர் மத்தியில், மத நிந்தனையில் ஈடுபடுவோர் பலர் உள்ளனர். அண்மையிலும் ஒரு துறவி, அரச ஊடகங்கள் மூலமாகவே அந்தப் பணியில் ஈடுபட்டார். அது, நாடாளுமன்றத்திலும் கூறப்பட்டது. ஆனால், அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆளும் கட்சித் தலைவர்களே அவரை நியாயப்படுத்துகின்றனர்.

எனினும், சில வருடங்களுக்கு முன்னர், முஸ்லிம் அப்பாவிப் பெண்ணொருவர், வண்டிச் சில்லின் படம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்து வெளியே சென்ற போது, அது பௌத்தத்தின் சின்னமான தர்மச் சக்கரம் என்றும் புனித அடையாளம் எனக் கூறியும் மத நிந்தனையில் அவர் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பல மாதங்களுக்குப் பின்னரே நீதிமன்றத்தின் மூலம் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

எனவேதான், தற்போது அமலில் உள்ள அவசரகாலச் சட்டம் தொடர்பில், சிறுபான்மை மக்களும் எதிர்க்கட்சிகளை ஆதரிப்போரும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. அண்மையில், அரசாங்கம் இந்த அவசரகாலச் சட்டத்தின் கீழ் அரிசி மற்றும் சீனி விலையை நிர்ணயித்து, வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டது. ஆனால், வர்த்தகர்கள் அவற்றை பொருட்படுத்தாததால் அரசாங்கம் அந்த வர்த்தமானி அறிவித்தல்களை வாபஸ் பெற்றுள்ளது. எனவே, தற்போதைய அவசரகாலச் சட்டம், அதன் நோக்கத்தை நிறைவேற்றத் தவறிவிட்டது.

இந்த நிலையில் அது தொடர்ந்தும் அமுலில் இருப்பதில் அர்த்தமே இல்லை. இப்போது அது, வேலை நிறுத்தங்களைத் தடைசெய்யவும் ஊடகங்களைக் கட்டுப்படுத்தவும் மாத்திரமே அரசாங்கத்துக்கு உதவும். அதாவது, அடக்குமுறைக்கு மட்டுமே அது உதவும்.

அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பிப்பது தொடர்பாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால் ஓகஸ்ட் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஒரு வர்த்தமானியில் தற்போது இலங்கையில் வேகமாகப் பரவி வரும் கொவிட் 19 தொற்றுநோயின் காரணமாக இலங்கையில் அவசர நிலையொன்று தோன்றியுள்ளதால், மக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் இயல்பு நிலையைப் பாதுகாப்பதற்காக, மக்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான வழங்கல்களையும் சேவைகளையும் நடத்திச் செல்வதற்காக, பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதற்கான அவசரகாலச் சட்டத்தை பிறப்பிக்கிறேன்“ என்ற நீண்ட வசனமொன்றை அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

அத்தோடு, அன்றே அந்த அவசரகால சட்டம் எவ்வாறு அமுலாக்கப்படும் என்பதை விளக்கும் வகையில், ஜனாதிபதியால் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மற்றொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. அதன் ஆரம்பத்தில் அவசரகாலச் சட்டத்தின் நோக்கம் விவரிக்கப்பட்டுள்ளது.

பாவனையாளர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையிலும் மக்களின் சேமநலத்தைப் பாதிக்கும் வகையிலும், அரிசி மற்றும் சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களைப் பதுக்கல், விநியோகத்துக்கு இடையூறுகளை விளைவித்தல், அதிக விலையை அறவிடுதல் மற்றும் சந்தை முறைகேடுகளைத் தோற்றுவித்தல் போன்ற நடவடிக்கைகளைத் தடுப்பதே இந்த விதிமுறைகளின் நோக்கமாகும் என அதில் ஆரம்பத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின் சீரான விநியோகத்துக்காக தகுதி வாய்ந்த அதிகாரியாக மாவட்ட செயலாளர்கள் செயற்படுவதைப் பற்றியும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் ஒருவரை நியமிப்பதைப் பற்றியும், அவ்விநியோகத்துக்கு தடையாகும் வகையில் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்படும் துறைகளின் ஊழியர்கள் தடையின்றி கடமைக்கு வருவதைப் பற்றியும், வேலைநிறுத்தங்களுக்கு இடமில்லை என்பதைப் பற்றியும் பொருட்களை பதுக்கினால் களஞ்சியசாலைகள் மற்றும் வாகனங்கள் போன்ற உடைமைகளைப் பறிமுதல் செய்வது தொடர்பாகவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்றே அவசரகால சட்டத்தின் கீழ் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளராக மேஜர் ஜெனரல் செனரத் நிவுன்ஹெல்ல, அதி விசேட வர்த்தமானி அறிவித்தல ஒன்றின் மூலம் நியமிக்கப்பட்டார். அத்தோடு, அன்றே நான்காவது வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டது. அதன்மூலம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சட்டத்தின் கீழ் எந்தெந்த சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகக் கருதப்பட வேண்டும் என்பது விளக்கப்பட்டுள்ளது.

அந்த நான்கு வர்த்தமானிகளின் கீழ் நடைமுறைக்கு வந்த தற்போதைய அவசரகாலச் சட்டத்தின் கீழ், அரிசி, சீனி போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்கி வைத்திருந்த வர்த்தகர்களின் களஞ்சியங்கள் சிலவற்றை அதிகாரிகள் பலாத்காரமாகத் திறந்து, அவற்றில் இருந்த பொருட்களை கைப்பற்றினர். பின்னர் அவை பறிமுதல் செய்யப்படாது, அதிகாரிகளால் கொள்வனவு செய்யப்பட்டு, சதோச நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டன. அரிசிக்குக் கட்டுப்பாட்டு விலையும் நிர்ணயிக்கப்பட்டது.

ஆயினும், பிரதான வர்த்தகர்கள், அவசரகாலச் சட்டத்தை பொருட்படுத்தவில்லை. அவசரகாலச் சட்டத்துக்கு முன்னரே, ஒரு கிலோ சீனிக்கு விதிக்கப்பட்ட 50 ரூபாய் சுங்க வரியை 25 சதமாகக் குறைத்து விற்பனை விலையாக 85 ரூபாய் விதிக்கப்பட்ட போதிலும் அந்த விலைக்கு அவர்கள், சீனி விற்கவில்லை. மாறாக அவர்கள், சீனியைப் பதுக்கினர். களஞ்சியசாலைகளை முற்றுகையிட்ட அதிகாரிகள் பின்னர் வரியையும் இழந்து, ஒரு கிலோகிராம் சீனியை 115 ரூபாய்க்கு விற்க அனுமதி வழங்கினர்.

அரிசிக்கும் அதுவே நடந்தது. அவசரகால சட்டத்தின் கீழ் அரிசிக்கும் நெல்லுக்கும்  கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டது. வர்த்தகர்கள் அப்போது அரிசியை பதுக்கிவிட்டு, விவசாயிகள் தமக்கு கட்டுப்பாட்டு விலைக்கு நெல்லை விற்பதில்லை என்றும், எனவே தம்மிடம் அரிசி இல்லை என்றும் கூறினர். அரசாங்கம் அடிபணிந்தது. அரிசிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டது. அன்றே தாமாகவே புதிய விலையை அரிசிக்கு விதித்த வர்த்தகர்கள், ஒரே நாளில் சந்தைக்கு அரசி விநியோகித்தனர்.

அவர்கள் பதுக்கியிருக்காவிட்டால், அந்த அரிசி எங்கிருந்து வந்தது? ஒரே இரவில் விவசாயிகளிடம் நெல்லைக் கொள்வனவு செய்து உடனே அதனைக் குற்றி அரிசியை பெற்று, விடியும்முன் பொலனறுவையிலிருந்து புறக்கோட்டைக்கு அனுப்ப முடியுமா?  

இப்போது அவசரகாலச் சட்டத்தால் எந்தப் பயனும் இல்லை. அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்குவதையும் விலை ஏற்றத்தையும் தடுப்பதே அதன் நோக்கம் என, மேற்படி வர்த்தமானி அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும், வர்த்தகர்கள் அரிசியையும் சீனியையும் பதுக்கியது மட்டுமல்லாமல், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை அரசாங்கமே வாபஸ் பெறவும் செய்தனர். தாமே விலையையும் நிர்ணயித்தனர்.

அதிகாரிகள், பதுக்கலில் ஈடுபட்ட எந்தவொரு களஞ்சியசாலையையும் பறிமுதல் செய்யவும் இல்லை, வர்த்தமானிகளில் கூறப்பட்டதைப் போல், பொருட்களைப் பதுக்கிய வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவும் இல்லை. இப்போது வர்த்தகர்கள் விதித்த அரிசி மற்றும் சீனி விலையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே, அவசரகாலச் சட்டம் தோல்வி கண்ட சட்டமாகவே இருக்கிறது.

எனினும், அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்துக்கு இடையூறாக இருந்ததாகக் கூறி, அச்சட்டத்தை அரச துறையிலுள்ள ஊழியர்களுக்கு எதிராக பாவிக்கும் அபாயம் இருக்கிறது. அதேபோல், அத்தியாவசியப் பொருட்களின் சீரான விநியோகத்துக்குத் தடையாகும் வகையில் சொல்லாலோ, எழுத்தாலோ செயற்பட்டால் அவ்வாறானவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று ஒரு வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு எதிராகவும் ஊடகங்களுக்கு எதிராகவும் அந்த வர்த்தமானிப் பிரமாணத்தைப் பாவிக்கும் அபாயமும் இருக்கிறது. இந்த நிலையில், நோக்கத்தை அடையத் தவறிய தோல்வி கண்ட அவசரகாலச் சட்டத்தை வாபஸ் பெறுமாறு, அரசாங்கத்தை எதிர்க்கட்சிகள் வற்புறுத்த வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .