2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பேராசிரியர் சந்த்ரா குணவர்தன: கல்விப் புலத்தில் முன்னுதாரண அறிவாளுமை

Johnsan Bastiampillai   / 2021 செப்டெம்பர் 20 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜே.டீ. கரீம்தின் 
(PhD Reading - UKM)
சிரேஷ்ட விரிவுரையாளர்,
கல்வி பீடம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

 

 

 

இலங்கையின் மூத்த கல்வியியலாளர்,  ஆராய்ச்சியாளர், பேராசிரியர் சந்த்ரா குணவர்தன 30.08.2021 அன்று, தனது 81ஆவது வயதில் எம்மிடமிருந்து விடைபெற்றார். பேராசிரியர் சந்த்ரா குணவர்தனவின் மறைவு, இலங்கை கல்வியியலாளர்களிடத்தில் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

1940.03.15 அன்று அளுத்கமையில் பிறந்த பேராசிரியர், இலங்கை கல்விப் புலத்தில் பல்வேறு பணிகளை ஆற்றியவர். இன, மத, பால், மொழி வேறுபாடுகளின்றி அவர் ஆற்றிய கல்விப் பணிகள் காத்திரமானவை. 

கல்வி மற்றும் சமூக விஞ்ஞானத் துறைகளில் ஆராய்ச்சி கலாசாரத்தை இலங்கையில் பொதுவாகவும் பல்கலைக்கழகங்களில் குறிப்பாகவும் ஏற்படுத்தியவர் அவர். கல்வியியலாளர்கள், பேராசிரியர்கள், கல்விமான்கள், கலாநிதிகள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்களின் வாண்மைத்துவ விருத்தியில் பங்களிப்புச் செய்து, பல ஆளுமைகளை உருவாக்குவதில் பங்களிப்புச் செய்தவராகவும் கருதப்படுகிறார். 

இலங்கை அரச பல்கலைக்கழகங்களில் இரண்டு கல்வி பீடங்களில் ஒன்றான இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்வி பீடத்தை உருவாக்கிய (Mother of Faculty of Education- OUSL) பெருமை இவரையே சாரும். அவர் மரணிக்கும் வரை இலங்கை திறந்த பல்கலைக்கழக கல்வி பீடத்தின் Emeritus Professor ஆக தனது கல்விப் பணியினை ஆற்றினார். 

இவர் 1993 - 1995 வரை இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞானத் துறை  தலைவராகவும் 1995 முதல் 2001 வரை அப்பீடத்தின் பீடாதிபதியாகவும் 2003 முதல் 2006 வரை கல்வி பீடத்தின் பீடாதிபதியாகவும் கடமையாற்றியவர். 

மட்டுமன்றி, பல சந்தர்ப்பங்களில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தராகவும் தனது பங்களிப்பை நல்கியுள்ளார். Sri Lanka Association for the Advancement of Education (SLAAED) எனும் நிறுவனத்தின் ஸ்தாபக அங்கத்தவர்களில் ஒருவரான இவர், 1987 காலப் பகுதியில் அதன் உதவித் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழக கல்வி பீடத்தில் இவர் விரிவுரையாளராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்வித்துறை பேராசிரியர் வெற்றிடத்துக்கான விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. அதற்கு அவர் விண்ணப்பிக்கத் தீர்மானித்திருப்பதை அறிந்த கொழும்பு பல்கலைக்கழக கல்வி பீட விரிவுரையாளர்கள், எதிர்காலத்தில் அங்கேயே பேராசிரியராக அவர் பணியாற்ற எவ்வித போட்டியுமின்றி வழிவிடுவதாகவும் தொடர்ந்தும் கொழும்பு பல்கலைக்கழகத்திலேயே பணியாற்றுமாறும் அவரிடம் வேண்டுகோள் விடுத்தனர். எனினும், தனது பங்களிப்பினை மேலும் விரிவுபடுத்தும் நோக்கிலும் கல்வி சார்ந்த தனது தலைமைத்துவ பங்களிப்பை பரந்தளவில் வழங்கும் நோக்கிலும் அவர் 1993இல் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்வித் துறை பேராசிரியராக பதவி ஏற்றார்.

கலாநிதி டீ.ஏ. கொத்தலாவல, மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியாக கடமையாற்றியதை அடுத்து பேராசிரியர் சந்த்ரா, இரண்டு தவணைகள் இப்பீடத்தில் பீடாதிபதியாக கடமையாற்றினார். அக்காலப்பகுதியில் பல இளம் விரிவுரையாளர்களின் வாண்மைத்துவ விருத்திக்கு வழிகாட்டினார். மேலும் இக்காலப்பகுதியில் முன்பள்ளி கல்வி தொடர்பான பல நிகழ்ச்சித் திட்டங்கள் நடத்தப்பட்டன. 

முன்பள்ளி பருவ துறையை தொடங்குவதற்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கிகாரமும் இவரது தலைமைத்துவத்தின் விளைவால் பெறப்பட்டதாகும். அது மட்டுமல்லாது, இவரது வழிகாட்டலின் பேரில் விஷேட துறையும் ஆரம்பிக்கப்பட்டது. குறிப்பிட்ட துறை, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் மட்டுமே காணப்படுகின்றமை இங்கு கோடிட்டுக் காட்டத்தக்கது. 

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஒரு துறையாக இருந்த கல்வித் துறையை (Department of Education) மாணவர்களின் கணிசமானளவு தொகையினரையும் போதுமானளவு விரிவுரையாளர்களையும் கொண்டு இத்துறை வளர்ச்சி அடைந்ததன் காரணமாக, பேராசிரியர் அவர்கள் பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் கல்வித்துறையை ஒரு பீடமாக  (Faculty of Education) கட்டியெழுப்பி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கிகாரத்தைப் பெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அதிலும் வெற்றி கண்டார்.

புதிய பீடத்தினை மேலும் வினைத்திறன் மிக்கதாக செயற்படுத்த கொழும்பு பல்கலைக்கழகத்தின் கல்வி பீடம், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஏனைய பீடங்கள் மற்றும் உபவேந்தர்களான பேராசிரியர் உமா குமாரசாமி, பேராசிரியர் உபாலி விதான பதிரன ஆகியோரின் ஆதரவையும் பெற்றார்.

அடிப்படையில் இவர் ஓர் ஆசிரியர். ஆசிரியத்துவத்தையே விரும்பினார். இவரது ஆசிரியரான மிகப் பிரபல்யமான பேராசிரியர் சுவர்ணா ஜயவீரவால் ஈர்க்கப்பட்டு, கல்வி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். பேராசிரியர் சுவர்ணா ஜயவீரவினுடனான நட்பின் மூலம் பெண் ஆராய்ச்சி மையத்தில் (CENWOR) பணியாற்ற அவருக்கு வாய்ப்பு கிடைத்ததுடன் பல்வேறுபட்ட தேசிய மற்றும் சர்வதேச மாநாடுகளில் பங்கேற்கும் வாய்ப்புகளும் பல சஞ்சிகைகளிலும் புத்தகங்களிலும் ஆய்வுக் கட்டுரைகளை எழுதும் வாய்ப்புகளும் கிட்டின.

CENWOR, National Assessment & Accreditation Council, India Commonwealth of Learning Canada, University of London, Sri Lanka Association for the Advancement of Science & Sri Lanka National Education Commission  போன்ற நிறுவனங்களின் நிதி உதவியுடன் பல்கலைக்கழக விரிவுரையாளர்களை இணைத்துக் கொண்டு, பல்வேறுபட்ட செயற்றிட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, நாட்டின் கல்விக் கொள்கைகளை வகுப்பதையும் அவற்றை செயற்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதையும் செவ்வனே மேற்கொண்டுள்ளார்.  இளம் விரிவுரையாளர்களுக்கு புலமைப் பரிசில்களைப் பெற்றுக் கொடுத்து, வெளிநாடுகளில் அவர்களின் முதுமாணி, கலாநிதி கற்கை நெறிகளைத் தொடர்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். 

Commonwealth of learning (COL) உடனான இவரது தொடர்பு குறிப்பிடத்தக்க பல விளைவுகளைத் தந்துள்ளன. COL உதவியுடன் இவர் பலதர வகுப்பு கற்பித்தல், மாணவர் நட்பான பாடசாலை போன்ற நிகழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். COL இன் உதவியுடன் கல்வி நிர்வாக சேவை, அதிபர் சேவையில் பணியாற்றுவோரின் வாண்மைத்துவத்தை விருத்தி செய்யும் நோக்கில் MA in Teacher Education எனும் சர்வதேச கற்கை நெறியை அறிமுகப்படுத்தினார். இவ்வாறு இவரது கல்விப் பங்களிப்பானது சர்வதேசம் வரை சென்றது. 

தனது குடும்பத்தில் கடைசி பிள்ளையான இவருக்கு, நான்கு சகோதரர்கள் உள்ளனர். இவரது கணவரும் ஒரு கல்வியியலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
ஒரு நாட்டின் அபிவிருத்தியில், கல்வியின் பங்களிப்பானது மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. அந்த வகையில் அவரது பங்களிப்புகளைக் காத்திரமாக வழங்கியதுடன், எதிர்காலத்தில் கல்வி ரீதியான பங்களிப்புகளை ஆற்றக்கூடிய சிறந்த கல்வியியலாளர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் அதற்கான தளங்களையும் ஒருங்கே உருவாக்குவதில் இவர் நல்கிய பங்களிப்பு மிகவும் மகத்தானது. 

கல்வியினூடாக சிறந்ததொரு தேசத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பில் அவருக்கிருந்த தொலைநோக்குக்கு ‘இது உனது நாடு; இது உனது பல்கலைக்கழகம்; இது உனது பீடம்’  எனும் அவரது கூற்று சான்று. 

அந்தவகையில், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்விப் புலத்திலுள்ள அனைவரும் சிறந்த ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு, பேராசிரியர் சந்த்ரா குணவர்த்தனவை முன்னுதாரணமாகக் கொள்வது இன்றியமையாததாகும். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X