2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மற்றுமொரு பூகம்பம் காத்திருக்கிறது

Johnsan Bastiampillai   / 2022 ஜூன் 30 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

எம்.எஸ்.எம். ஐயூப்

 

 

 

 

கடந்த மே மாதம் ஒன்பதாம் திகதி, உச்சக் கட்டத்தை அடைந்திருந்த அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டம், அதேமாதம் 12ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டதை அடுத்து படிப்படியாக மழுங்கடிக்கப்பட்டு உள்ளதாகவே தெரிகிறது.

எதிர்க்கட்சியினரின் ஆர்ப்பாட்டங்களும் நீர்த்துப் போயுள்ளதாக தெரிகிறது. அதேபோல், ரணிலின் நியமனம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு பெரும் ஆறுதலையும் கொண்டு வந்துள்ளது.

வரலாறு காணாத, பொருளாதார நெருக்கடியின் விளைவாக, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, எரிபொருளுக்காக மைல் கணக்கிலும் நாட்கணக்கிலுமான வரிசைகள் உருவாகி, பல மணித்தியாலங்கள் நீடித்த மின்வெட்டு அமலாக்கப்பட்டு, மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக கொதித்தெழுந்து, அரசாங்கம் மண்ணைக் கௌவும் நிலை, மே மாதம் ஆரம்பத்தில் உருவாகியிருந்தது.

மக்களின் எதிர்ப்பை சமாளிப்பதற்காக ஜனாதிபதி, ஏப்ரல் மாதம் மூன்றாம் திகதி, தமது அமைச்சர்களை இராஜினாமாச் செய்யுமாறு பணித்து, பலகட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க முயன்றார். ஏனைய கட்சிகள், அதற்கு இணக்கம் தெரிவிக்காததை அடுத்து, சித்திரைப் புத்தாண்டின் பின்னர், இளம் உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையை ஜனாதிபதி  நியமித்தார். ஆயினும், பொருளாதார பிரச்சினைக்குத் தீர்வு காண, அந்த அமைச்சர்களாலும் முடியாமல் போனது. 

இந்த நிலையிலேயே, அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவால் கொழும்புக்கு அழைக்கப்பட்ட அவரது ஆதரவாளர்கள், மே மாதம் ஒன்பதாம் திகதி, அலரி மாளிகை முன்னாலும் காலிமுகத் திடலிலும் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களைத் தாக்கினர். இதனால் நாடு முழுவதிலும் வன்முறை பரவி, அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

அத்தோடு, பிரதமர் மஹிந்த இராஜினாமாச் செய்து, திருகோணமலையில் கடற்படை தளத்தில் தஞ்சம் புக நிர்ப்பந்திக்கப்பட்டார். நாட்டில் அராஜகம் தாண்டவமாடியது.   ஜனாதிபதியும் பதவியை துறந்து வெளியேறுவாரா என்று சிந்திக்கும் அளவுக்கு நிலைமை கொந்தளிப்பாக இருந்தது.

உருவாகியிருக்கும் அரசியல் நெருக்கடியைத் தீர்க்க, ஏனைய கட்சிகளால் முன்வைக்கப்பட்ட சகல அரசியல் திட்டங்களுக்கும் ஏற்கெனவே, ஜனாதிபதி இணக்கம் தெரிவித்து வந்தார். தமக்கு அமைச்சர் பதவிகளைப் பெறுவதற்காக விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினர், சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற போதே, அவர் அதற்கும் தயாராகி, தமது அமைச்சர்களை இராஜினாமாச் செய்யுமாறு பணித்தார். காபந்து அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிய போது அதையும் ஏற்றுக் கொண்டார்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என, மைத்திரியால் ஆரம்பிக்கப்பட்டு, ஏனைய பல குழுக்களால் முன்மொழியப்பட்ட போது, அவர் அதற்கும் இணங்கினார். அவசியமானால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையையே இரத்துச் செய்வதற்கும் தாம் சம்மதம் தெரிவிப்பதாகவும் அறிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோர வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிய போது, முன்னர் அதனை நிராகரித்தவர் பின்னர், அந்த ஆலோசனைப் படியும் நடவடிக்கை எடுத்தார். இந்த நிலைக்கு ஜனாதிபதியை தள்ளிய போராட்டம் தான், ரணிலில் வருகையால் மழுங்கடிக்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி, ஜனாதிபதியின் இல்லத்தின் முன்னால் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தின் நோக்கம், ஜனாதிபதியை வெளியேற்றுவதேயாகும். அது சகல வகையிலும் நியாயமானதாகவே இருந்தது.
முதலாவதாக, அவருக்கு கிடைத்த மக்கள் ஆணையே முறைகேடாகப் பெறப்பட்டதாகும். அது, நாட்டில் இனவாதத்தைத் தூண்டி பெறப்பட்ட ஆணையாகும்.

அதேவேளை, ஜனாதிபதியோ அவரது அரசாங்கமோ கடந்த தேர்தல்களின் போது, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டனர்.
அது மட்டுமல்லாமல் அவர்களது முடிவுகள், இலங்கையை பொருளாதார ரீதியாக பிச்சைக்கார நாடாக மாற்றிவிட்டது. அந்த முடிவுகளால், நாட்டில் ஒரு சிலர் தவிர்ந்த இரண்டு கோடியே இருபது இலட்சம் மக்களில், ஒவ்வொருவரினதும் வாழ்க்கைக் கனவுகள் சிதறடிக்கப்பட்டுள்ளன.

“தோல்விகண்ட ஜனாதிபதியாகப் பதவி துறக்க நான் விரும்பவில்லை” என ஜனாதிபதி அண்மையில் ‘புளும்பேர்க்’ செய்திச் சேவையிடம் கூறியிருந்தார். அதாவது, தாம் தோல்வி கண்ட ஜனாதிபதியாக இப்போது இருப்பதை அவர் ஏற்றுக் கொள்கிறார். எனவே, தமக்கு மக்களின் ஆணை இருக்கிறது எனக் கூறுவதற்கு, அவருக்கோ அரசாங்கத்துக்கோ தொடர்ந்தும் எந்த உரிமையும் இல்லை. அவர்கள் வெளியேறுவதே நாட்டு நலனுக்கு உகந்ததாகும்.

ஆனால், மக்கள் போராட்டங்களால், அரசாங்கத்துக்கு இப்போது அவ்வளவு ஆபத்து இல்லைப் போல் தான் தெரிகிறது. நாளாந்தம் புதுப்புது நடவடிக்கைகள் மூலம், அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த காலிமுகத் திடல் ஆர்ப்பாட்டத்தைப் பற்றி, இப்போது செய்திகள் அரிதாகவே வெளியாகின்றன.

எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டங்களும் இப்போது நடைபெறுவதில்லை. ரணில் பிரதமராகப் பதவியேற்க முன்னர், முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரியால் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தை, ரணில் கையிலெடுத்து முன்நகர்த்திச் செல்கிறார்.

அத்திட்டம் வெற்றியடைந்தால், சகல பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்பதாகவே, பிரதமர் ரணிலும் அரசாங்கத்தின் ஏனைய தலைவர்களும் கூறுகின்றனர். அரசாங்கம் இத்திட்டத்தை விரும்பும் முன்னரே, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அதனை வலியுறுத்தி வந்தமையால், அக்கட்சியும் அதற்கு ஆதரவு தெரிவித்து வருகிறது; அல்லது அதனை எதிர்ப்பதில்லை. 

ஆயினும், பொதுவாக அரசாங்கத்துக்கு எதிரான சகல சக்திகளும் அரசியல் ரீதியாக இப்போது சங்கடமான நிலைமையை எதிர்நோக்கி இருக்கின்றன. அவற்றுக்கு சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் ஆரம்பித்துள்ள திட்டத்தை எதிர்க்கவும் முடியாது; ஆதரிக்கவும் முடியாது. பல தசாப்தங்களாக, சர்வதேச நாணய நிதியத்தையும் உலக வங்கியையும் எதிர்த்து வரும் இடதுசாரிகளின் நிலைமையும் அதுவேயாகும்.

இத்திட்டம் வெற்றியளித்தால், அரசாங்கம் நாட்டை அழிவுப் பாதைக்கு இழுத்துச் சென்ற, தமது கடந்த கால அத்தனை பாவங்களையும் அதன் மூலம் மூடி மறைத்துக் கொள்ளும். இதுவே, கொவிட்- 19 விடயத்திலும் நடைபெற்றது.

இரண்டாவது, மூன்றாவது, நான்காவது கொவிட் அலைகள் அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகளாலேயே ஏற்பட்டன. அவற்றின் மூலம் நாட்டின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, வெளிநாட்டு செலாவணியைத் தேடித் தரும் துறைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. ஆனால், தடுப்பூசியின் மூலம் நோய் கட்டுப்படுத்தப்பட்ட போது, அரசாங்கம் கடந்த கால நடவடிக்கைகளை மறந்து, நோயை கட்டுப்படுத்தியதாக மார்தட்டிக் கொண்டது. எனவே அரசாங்கத்தின் தற்போதைய திட்டத்தை ஆதரிப்பது, எதிர்க்கட்சிகளுக்கு கஷ்டமான காரியமாகும்.

அதேவேளை, மக்கள் அத்திட்டத்தின் மீது பூரண நம்பிக்கை வைத்து இருக்கும் நிலையில், அதனை எதிர்த்தால் தாம் மக்களின் கோபத்துக்கு ஆளாகலாம் என்ற அச்சமும் அவர்களுக்கு இருக்கிறது. அத்திட்டத்தை விமர்சிக்கும் வகையிலான மாற்றுத் திட்டம் ஒன்றும் எந்தவோர் எதிர்க்கட்சியிடமும் இல்லை. எனவே அவர்கள் அதற்குத் தடையாகாத வகையில் செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

மஹிந்த பிரதமர் பதவியை இராஜினாமாச் செய்து, நாட்டில் அராஜக நிலைமை தோன்றிய போது, நாட்டில் ஸ்திரத்தன்மைக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் பிரதமர் பதவியை ஏற்க முன்வந்தார். அதனை மக்கள் விடுதலை முன்னணியோ வேறு எந்தவொரு கட்சியோ விமர்சிக்கவில்லை.

எனினும், நாடு மீண்டும் அராஜகத்தை நோக்கி இழுக்கப்படும் நிலைமை உருவாகி வருவதையும் அவதானிக்கலாம். பெற்றோலியக் கூட்டுத்தாபத்திடம் இருந்த எரிபொருள், ஏறத்தாழ முடிவடைந்தமையே இதற்குக் காரணமாகும். அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே, ஜூலை 10ஆம் திகதி வரை எரிபொருள் வழங்கப்படும் என அரசாங்கம் திங்கட்கிழமை (27) அறிவித்தது. அதாவது, சாதாரண மக்களுக்கு எரிபொருள் விற்கப்படாது. ஏற்கெனவே மிகச் சிறிதளவே அவர்களுக்கு எரிபொருள் கிடைத்தது. அதற்காகவும் நாள்கணக்கில் வரிசைகளில் காத்துக் கொண்டு இருக்க நேர்ந்தது; இப்போது அதுவும் இல்லை.

இந்த நிலைமை, சமூகத்தின் சகல துறைகளையும் பாதிக்கும். உணவுப் பஞ்சம் மேலும் அதிகரிக்கும். நோயாளர்கள், வீடுகளிலேயே இறக்கும் நிலைமை ஏற்படும். ஏற்கெனவே, அவ்வாறான சம்பவங்கள் பல பகுதிகளில் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலைமை, உலக சந்தையின் விலையேற்றத்தின் காரணமாகவோ வேறு இயற்கை அனர்த்தமொன்றின் காரணமாகவோ ஏற்பட்டதல்ல; ஆட்சியாளர்களின் நிர்வாக அசிரத்தையின் காரணமாக ஏற்பட்டது என்பதை, இப்போது மக்கள் அறிந்துள்ளனர்.

எனவே, மக்களின் கோபம் மீண்டும் பூகம்பமாக வெடிக்கலாம். அது வன்முறையாக மாறினால், நகரப்புறங்களிலும் தோட்டப் புறங்களிலும் பட்டினிச் சாவு சாதாரண நிலைமையாக மாறலாம். எனவே, அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுவதை தடுப்பது, எதிர்க்கட்சிகளினதும் போராட்டக்காரர்களினதும் பொறுப்பாகும்.        

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .