2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வர்ண பூஞ்சைகளுக்கு கண்களே குறி

Editorial   / 2021 மே 26 , பி.ப. 07:50 - 1     - {{hitsCtrl.values.hits}}

“பேபி அம்மா… பேபி அம்மா… எனக் கூப்பிடும் பாட்டி அல்லது தாத்தாமாரின் குரல்களும், “ச்சி… எப்ப பார்த்தாலும் பேபி அம்மா, நோபி அம்மானுக்கிட்டு, மனுசனை நிம்மதியாகவே இருக்கவிடுறதில்ல” என, பேத்தி, பேரன்மார்கள் முணுமுணுத்துகொண்டே பதிலளிப்பர்.

இன்னும் சிலர், வேண்டா வெறுப்புக்கு, பாட்டி அல்லது தாத்தாவின் பக்கத்தில் சென்று, “என்னாவாம்” என வினவுகையில், கைக்கெட்டிய தூரத்திலிருக்கும் ஏதாவது ஒன்றை எடுக்கவே கூப்பிட்டிருப்பார். அந்தநேரத்தில் வரும் கோபத்துக்குக் குறைவே இருக்காது.

எனினும், 10, 15 நிமிடங்களுக்குப் பின்னர், அதே குரல் மீண்டும் அழைக்கும், வீட்டிலிருக்கும் வயதுபோனவர்கள் இருவரைப் பார்த்துக்கொள்வதை விட, 10 குழந்தைகளை பார்த்துக்கொள்ளலாமென, பலரும் மனம்சலிப்புற்றுக் கூறுவதையும் கேள்விப்பட்டிருப்போம்.

வீட்டிலிருக்கும் வயதானவர்களிடம் பல கதைகள் இருக்கும். இப்போதெல்லாம் அவற்றை கேட்பதற்கே நேரம் கிடைப்பதில்லை, எத்திசையில் திரும்பினாலும், கொரோனாக் கதைகளே காதுகளுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன.

2019ஆம் ஆண்டுக்குப் பின்னர், ‘கொரோனா, கொரோனா’ எனக் கேட்டுக் கொண்டிருந்த காதுகளுக்குள் தற்போது, கலர்கலராய் பூஞ்சைக் கதைகள் ரீங்காரமிடத் தொடங்கியுள்ளன. ‘கறுப்பு பூஞ்சை’, ‘வௌ்ளைப் பூஞ்சை’, ‘மஞ்சள் பூஞ்சை’ என, என்னென்ன வர்ணங்களில் பூஞ்சைகள் தொற்றிக்கொள்ளுமோ எனத் தெரியாது, பலரும் விழி பிதுங்கி நிற்கின்றனர்.



கொரோனா வைரஸின் கோரப்பசி இன்னும் ஆறவில்லை. கோடிக்கணக்கான மனித உயிர்கள், அதற்கு இரையாகி வருகின்றனர். அயல் நாடான இந்தியாவில், கொரோனாவுக்குப் போட்டியாக  ‘கறுப்பு பூஞ்சை‘ (Mucormycosis) என்ற தொற்றுத் தீவிரமாகப் பரவிவருகின்றது.

இது, அண்மைக் காலத்தில் ஏற்பட்ட ஒன்றல்ல. 2002ஆம் ஆண்டே இந்நோய் கண்டறியப்பட்டு விட்டதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றார்கள்.

‘கறுப்பு பூஞ்சை’த் தொற்றானது மண், தாவரம், உரம், ஈரமான இடங்கள், அழுகிய பழங்கள், காய்கறிகளில் பொதுவாகக் காணப்படும் பங்கஸினால் ஏற்படுகின்றதென விளக்கமளிக்கப்படுகிறது.  

பக்றீரியா, வைரஸ் போல காற்றிலும், சுற்றுப்புறங்களிலும் உள்ள இந்தப் பங்கஸானது, நாசி (மூச்சுக்குழல்) வழியே உடலுக்குள் சென்று தொற்றை ஏற்படுத்துவதோடு மெல்ல, மெல்ல உடலின் அனைத்துப் பகுதிகளிலும் பரவுகின்றது.

இதுவரை இந்தியாவில், ‘கறுப்பு பூஞ்சை‘ தொற்றுக்கு உள்ளானவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களாவர்.

‘கறுப்பு பூஞ்சைத்' தொற்றானது,  உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கே பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக, இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு கட்டுப்பாடில்லாத நீரிழிவு நோயாளர்கள்,  கொரோனாவால்  தீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்கள், உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொண்டவா்கள், தீவிர சிகிச்சைப் பிரிவில் நீண்ட காலம் சிகிச்சை பெற்றவர்கள், இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக இரும்புச்சத்து உடையவர்கள், குறைவான வெண்குருதி சிறுதுணிக்கைகளைக் கொண்டவர்கள், புற்றுநோய், எச்.ஐ.வி தொற்றாளர்கள் போன்ற நோய்களால் பீடிக்கப்பட்டவர்களுக்கே ‘கறுப்பு பூஞ்சை‘த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

‘கறுப்பு பூஞ்சை‘த் தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், அது கண்களைக் கடுமையாகத் தாக்கி,  பின்னர் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடக்கூடும்.

‘கறுப்பு பூஞ்சை‘த் தொற்றின் அறிகுறிகளாக, தீவிர தலைவலி, கண் எரிச்சல், கண் சிவப்பாகுதல், கண்ணில் வலி, கண் வீக்கம், வாய், மூக்கு, நாக்கில் நிறமாற்றம், சுவாசிப்பதில் சிரமம், நெஞ்சு வலி, இரத்தம் கலந்த சளி, வாந்தி, திடீரென பார்வை மங்குதல் போன்றவை காணப்படலாம். மேலும், கன்னத்தில் ஏற்படும் வீக்கம், வாய்க்குள் தோன்றும் கறுப்பு நிறப் புண், கண் இமைகளில் வீக்கம் போன்றவைகளும் இதன் அறிகுறிகளாகக் காணப்படுகின்றன.

‘கறுப்பு பூஞ்சை‘ நோயானது திடீரெனத் தீவிரமடைந்து பரவுவதற்கான காரணம் எதுவென்ற கேள்விக்கு, மருத்துவ நிபுணர்கள் கூறும் பதில், அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் என்பதாகவே உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவிய காலத்திலிருந்து, இதுவரை சுமார் 8,800 பேருக்கு ‘கறுப்பு பூஞ்சை‘த் தொற்றுப் பீடித்துள்ளது. தற்போது கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்ததன் விளைவாக ‘ஸ்டெரொய்ட்‘ (Steroid) சிகிச்சையின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

‘ஸ்டெரொய்ட்’ சிகிச்சையால் நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தவா்கள், அதன் பின்னா் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்திக் கொள்ளத் தவறுவதால் பலருக்கு ‘கறுப்பு  பூஞ்சை’த் தொற்று ஏற்படுகிறது. அதற்கடுத்ததாக, ‘வெள்ளைப் பூஞ்சை’, ‘மஞ்சள் பூஞ்சை’ ஆகியனவும் பரவுகின்றன.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து, 12 - 18 நாள்களுக்குள் ‘கறுப்பு பூஞ்சை‘த் தொற்றின் அறிகுறிகள் உணரப்படுவதாக மருத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தொற்றுக்கு, சிகிச்சை அளிப்பதற்கான முக்கிய மருந்தாக இருப்பது அம்ஃபோடெரிசின் பி (Amphotericin B) ஊசி ஆகும். இந்த ஊசி, ஒரு பூஞ்சை எதிர்ப்பு மருந்தாகும்.

இந்தத் தொற்றுப் பீடித்துள்ள நோயாளிகளை, கண் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள், காது, மூக்கு, தொண்டை நிபுணர்கள், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் போன்ற மருத்துவ நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் வைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்படுகின்றது.

ஏனெனில், ‘கறுப்பு பூஞ்சை‘ நோய்த்தொற்று உடலின் வெவ்வேறு பகுதிகளை ஒரே நேரத்தில் பாதிக்கும் எனவும் உயிர்காக்கும் செயல்முறைகளின் ஒரு பகுதியாக, பூஞ்சையால் பாதிக்கப்பட்ட அனைத்து திசுக்களும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட வேண்டும் எனவும் கூறப்படுகின்றது.


இதனால் சிலர் கண் பார்வையை இழக்க நேரிடும். சில சமயங்களில், இத் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, 4-6 வாரங்கள் வரை நரம்பு வழி பூஞ்சை எதிர்ப்புச் செயல்முறை தேவைப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நோயைக் கட்டுப்படுத்த, நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல்,  நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துதல், கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு காது, மூக்கு தொண்டைப் பரிசோதனை செய்தல், ஊட்டச்சத்து மிக்க உணகளை நாளாந்தம் உட்கொள்ளல், மதுபானம் அருந்துவதைத் தவிர்த்தல், புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிடுதல், நாளாந்தம்  உடற்பயிற்சி செய்தல், சுகாதாரப் பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்தல்  ஆகியவை அவசியமாகும்.

இந்தியாவில், ‘கரும் பூஞ்சை’ நோயின் தாக்கம், வீரியம் கொண்டிருக்கும் நிலையில், இலங்கையில் இந்நோயின் அச்சுறுத்தல் உள்ளதா என்ற ஐயம் மக்களிடத்தில் தலைதூக்கியுள்ளது.

 ‘கறுப்பு பூஞ்சை‘ நோய்த் தொற்றுத் தொடர்பாக, இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (SLMRI) ஆய்வுகளை மேற்கொண்டு, தமது அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக,  விசேட வைத்திய நிபுணர் பிரிமாலி ஜயசேகர, ஊடகவியலாளர் சந்திப்பின்போது பின்வருமாறு கூறியிருந்தார்; ”அம்பாறையில் ஒருவருக்கு ‘கறுப்பு பூஞ்சை’ நோய் இருப்பதாக இனங்காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சமூகத்தில் இது தொடர்பான அச்சம் நிலவுகின்றது. இருப்பினும் இலங்கையின் வைத்திய பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், 2019ஆம் ஆண்டு முதல், ‘கறுப்பு பூஞ்சை’ நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர். இதனடிப்படையில், 2019ஆம் ஆண்டு 42 பேருக்கும் 2020ஆம் ஆண்டு 24 பேருக்கும் 2021ஆம் ஆண்டில் இதுவரையில் 24 பேருக்கும் ‘கரும் பூஞ்சை’ நோய் இருப்பது இனங்காணப்பட்டு உள்ளது. இருப்பினும், இவர்களில் எவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை. இந்தக் கரும் பூஞ்சை நோய், இலங்கைக்குப் புதிதல்ல” எனவும் டொக்டர் பிரிமாலி ஜயசேகர தெரிவித்திருந்தார்.

அத்துடன், இத்தொற்றுப் பரவலடைவதற்கான அனைத்துச் சூழல் அமைப்புகளும் இலங்கையில் காணப்படுகின்றன. எமது மண்ணிலும் அந்தப் பூஞ்சை படர்ந்திருக்கின்றது எனவும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களையே இந்நோய் பீடித்துக்கொள்கின்றது எனவும் அவர் எச்சரித்தார்.

ஆக, வயதானவர்களுக்குப் பார்வை மங்கும்போது, பக்கத்தில் இருக்கும் பொருள்கள்கூடக் கண்களுக்குத் தெரிவதில்லை. பத்து குழந்தைகளையும் பார்த்துக்கொள்வோமென இளம் குடும்பஸ்தர்கள் வீராப்புப் பேசுவர். இயலாமைக்கும் வீராப்புக்கும் கூட, கண்கள்தான் பிரதானமானவை. இந்தப் பூஞ்சைகள் கூட, கண்களைத்தான் குறிவைக்கின்றன. ஆகையால், சுகாதார வழிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றுவதே சகலருக்கும் நலம் தரும்.

இளங்கோ பாரதி
ilangobharathy727@gmail.com

 

(கட்டுரையாளர்)



 


You May Also Like

  Comments - 1

  • Nishanthan Wednesday, 26 May 2021 10:21 PM

    Very well written!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .