2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அரசாங்கம் நம்பிக்கையை பாதுகாக்குமா?

Kanagaraj   / 2015 பெப்ரவரி 09 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஐயூப்


கடந்த அரசாங்கத்தின் தலைவர்களும் அதிகாரிகளும் செய்த ஊழல்கள், மோசடிகள் பற்றி இலஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் கடந்த சில வாரங்களில் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கையை அவதானிக்கும் போது இரண்டு விடயங்கள் தெளிவாகின்றன.

முதலாவதா, தேசபக்தர்கள் என்றும் சிங்கள மக்களின் பாதுகாவலர்கள் என்றும் கூறிக்கொண்டிருந்த முன்னாள் அரசாங்கத்தின் தலைவர்கள், காட்டாட்சியையே நடத்தியிருக்கிறார்கள் போலும். இரண்டாவதாக, இந்த முறைப்பாடுகளின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது அவற்றில் பெரும்பாலானவை விசாரணையின்றியே மறக்கப்பட்டுவிடலாம் என்பது. ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தொல்வியடைந்ததன் பின்னர் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளைப் பார்த்தால் பிலிப்பைன்ஸில் மார்கோஸினதும் எகிப்தில் முபாரக்கினதும் டியூனீசியாவில் பென் அலியினதும் ஆட்சியே எவருக்கும் நினைவுக்கு வரும். இந்த செய்திகள் உண்மையாக இருந்தால் தேசப்பற்றின் பெயரால் முன்னாள் ஆட்சியாளர்கள் எந்தளவு பாரிய மோசமான ஊழல்களை மூடி மறைத்துக்கொண்டு இருந்தார்கள் என்று எவரும் வியப்படையவே செய்வார்கள்.

மறைத்து வைக்கப்பட்டு இருந்த யானைக் குட்டிகள் நாளாந்தம் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபயவும் தம்மிடம் இருந்த இரண்டு யானைக் குட்டிகளை அரச அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.

ஆங்காங்கே கைவிடப்பட்ட கோடிக் கணக்கு ரூபாய்கள் பெருமதியான சொகுசு வாகனங்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. சமையலறை வசதிகளும் உள்ள இரண்டு பஸ்களும் அண்மையில் கண்டெடுக்கப்பட்டன. சந்தேகத்திற்கிடமான ஆயுத கொள்கலன்களும் ஆயுதக் கப்பல்களும் கண்டெடுக்கப்படுகின்றன. ஆயிரம் கிலோ ஹெரோயினை இலங்கைக்கு கொண்டுவந்ததாகக் கூறப்படும் வெலே சுதா என்ற சந்தேகநபருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மட்டுமன்றி முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளார் என்று செய்திகள் கூறுகின்றன.  
பாரிய ஊழல்கள் தொடர்பாக எதிர்க் கட்சிகளினால் குற்றஞ்சாட்டப்பட்ட மஹிந்தவின் சகோதரரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் , புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.

அதேபோல், குற்றஞ்சாட்டப்பட்டு வந்த நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவும் நாட்டைவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். வெலே சுதா என்ற போதைப்பொருள் வர்த்தகரினால் பெயர் குறிப்பிடப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபரும் தப்பிச் சென்றுவிட்டார். 


ஒரு சிலர் சம்பந்தமாக மட்டுமே அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுத்துள்ளது. ஊழல் மோசடி சம்பந்தமாக சந்தேகிக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், வெலே சுதாவின் வாக்குமூலத்தில் பெயர் குறிப்பிடப்பட்டதாகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஆகியோர் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 


அதோடு, சுமார் முப்பது ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கி வந்தவரும் பிரபாகரன் கொல்லப்பட்டதன் பின்னர் புலிகள் அமைப்பின் தலைமை பதவியைப் பொறுப்பேற்றவருமான கே.பி என்றழைக்கப்படும் செல்வராசா குமரன் பத்மநாதனின் கடவுச்சீட்டையும் கைப்பற்றுமாறு நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. இதனை தமிழ் மக்களும் பாராட்டியிருப்பார்கள். ஆனால், அது ஊழல் சம்பந்தமான விடயம் அல்ல. 


ஊழல் பேரவழிகளை மடக்கிப்பிடித்து அவர்கள் கொள்ளையடித்த மக்களின் பணத்தை மீண்டும் பெற்றுக்கொண்டு மக்களுக்கு சலுகைகளையும் நிவாரணைங்களையும் வழங்குவது அரசாங்கத்தின் கடமையாகும். ஆனால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் போதிய வளங்கள் இல்லை என்று கடந்த ஆட்சியின் போதே கூறப்பட்டது. எனவே, தற்போது ஆணைக்குழுவிடம் குவிந்துள்ள குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது ஆணைக்குழு இந்தக் குற்றச்சாட்டுக்களை எப்போது விசாரித்து முடிக்கும் என்ற கேள்வி எழுகிறது. 


அதேவேளை, இந்த ஆணைக்குழுவின் சில அதிகாரிகளுக்கு எதிராகவும் கடந்த காலத்தில் சில குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு இருந்தன. எனவே, குவிந்துள்ள குற்றச்சாட்டுக்களை இந்த ஆணைக்குழு விசாரித்து முடிக்குமா என்ற கேள்வி மீண்டும் எழுகிறது. அது ஒருபுறமிருக்க, இப்போது ஜனாதிபதி சிறிசேனவின் அரசாங்கம், ஜனநாயகத்துக்காக எடுத்த சில நடவடிக்கைகள் காரணமாக நாட்டிற்குள்ளும் சர்வதேச ரீதியிலும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பும் அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக இருப்பதாக தெரிகிறது.


இந்த நிலையில் தற்போதைய எதிர்க்கட்சிகள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி இருக்கின்றன.  அவர்களால் அரசாங்கத்தை விமர்சிக்கவும் முடியாது. அதனை ஆதரிக்கவும் ஆடியாது. கூடுதலாக ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்களைக் கொண்ட தற்போதைய அரசாங்கத்தை விமர்சிக்காமல் இருந்தால் அவர்கள் அடுத்த பொதுத் தேர்தலை எதிர்நோக்க முடியாது. அரசாங்கத்தின் குறைகளை காணாது மக்களை மீண்டும் தம்பக்கம் வென்றெடுக்க முடியாது. ஆனால், அரசாங்கத்தின் தலைவராக இருப்பவர் பிரதான எதிர்க்கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் என்பதால் அவர்கள் அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கவும் முடியாது.


உதாரணமாக இம்முறை வரவு - செலவுத் திட்டத்தை எடுத்துக்கொள்ளலாம். இந்த வரவு - செலவு திட்டத்தால் மக்களுக்கு பெருமளவு சலுகைள் வழங்கப்பட்டுள்ளன. எனவே எதிர்ககட்சிகள் அதனை விமர்சிக்க முடியாது. அதனை விமர்சிக்காது மக்களை வென்றெடுக்கவும் முடியாது. ஆனால் இது ஜனாதிபதி சிறிசேன, கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்குறுதியளித்த வரவு - செலவு திட்டமாகும். அவர் இப்போது பிரதான எதிர்க்கட்சியின் தலைவராக இருக்கிறார். அதனாலும் எதிர்க்கட்சிகள் அதனை விமர்சிக்க முடியாது.


எனவே, இப்போது அரசாங்கத்தை விமர்சிக்கும் பொறுப்பை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருக்கும் சிறு கட்சிகளான தினேஷ் குணவர்தனவின் ஐக்கிய மக்கள் முன்னணி, விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி போன்ற கட்சிகள் ஏற்றுள்ளன. அதேவேளை அவர்கள் மஹிந்தவை மீண்டும் பதவியில் அமர்த்த உத்திகளையும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். 


இதற்காக அவர்கள் ஐ.ம.சு.மு.வில் இருக்கும் வாசுதேவ நாணயக்காரவின் கட்சி போன்றவற்றோடு இணைந்து புதிய அரசியல் கூட்டணியை உருவாக்க முயற்சிப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. அவ்வாறானதோர் முயற்சி நிச்சயமாக சிறுபான்மை மக்களுக்கு எதிரானதாகவே கருத வேண்டியுள்ளது.  தென்பகுதி மக்கள் தற்போதைய அரசாங்கம் தொடர்பாக மகிழ்ச்சியுறுவதற்கு முக்கிய காரணம் கடந்த 29ஆம் திகதி நிதி அமைச்சர் சமர்ப்பித்த குட்டி வரவு-செலவு திட்டமாகத் தான் இருக்க வேண்டும். இது எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலை நோக்காகக் கொண்டு முன்வைக்கப்பட்ட வரவு-செலவு திட்டம் என தேசிய விமல் வீரவன்ச கூறியிருந்தார். சிலவேளை இது உண்மையாகவும் கூடும். 


ஆனால், கடந்த அரசாங்கம் தேர்தல்களை முன்னிட்டே விலைவாசியை குறைத்ததைப் போல் இந்த அரசாங்கமும் விலைவாசியை குறைப்பதாக கூறுவது அவ்வளவு நியாயமில்லை. ஏனெனில் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதே சலுகைகளை வழங்க இது போன்ற வரவு-செலவு திட்டமொன்றை முன்வைப்பதாக மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் விக்ரமசிங்கவும் கூறியிருந்தனர். ஆனால், எதிர்வரும் பொதுத் தேர்தலை அடுத்து, இதே அரசாங்கம் பதவிக்கு வந்து விலைவாசியை அதிகரித்தால் வீரவன்ச கூறுவது உண்மையாகிவிடும். அரசியலில் எதனையும் எதிர்பார்க்கலாம்.


தமிழ் மக்கள் இந்த அரசாங்கம் தொடர்பாக மகிழ்ச்சியடைய போதிய காரணங்கள் இருக்கின்றன. கடந்த அரசாங்கம் பதவியல் இருந்த காலத்தில் வடபகுதி அரசியல்வாதிகள், படையதிகாரிகளை ஆளுநராக நியமிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டனர். ஆனால் அப்போதிருந்த மஹிந்த அரசாங்கம் அதனை நிறைவேற்றவில்லை. வடமாகாணசபை முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஜனாபதிபதி மஹிந்த அது தொடர்பாக வாக்குறுதியளித்து இருந்தார். ஆனால், அவர் அதனை நிறைவேற்றவில்லை.


புதிய அரசாங்கம் சகல மாகாண ஆளுநர்களையும் மாற்றும் போது அதனை நிறைவேற்றியது. அதேபோல், வடமாகாணசபையின் பிரதம செயலாளருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும்பாலான மாகாண அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டமையினால் அவர்களது அந்த கோரிக்கையும் நிறைவேறியது. அமைச்சரவைக்கு அப்பால் தேசிய கொள்கை வகுப்புக்காக புதிய அரசாங்கம் தேசிய நிறைவேற்றுச் சபை என்றதோர் சபையை அமைத்துள்ளது. அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களும் அங்கம் வகிக்கிறார்கள். இவை அனைத்தும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு கிடைத்த அங்கீகாரங்களாகும். ஜனாதிபதி சிறிசேனவின் சுதந்திர தின உரையையும் நிச்சயமாக தமிழ் மக்கள் விரும்பியிருப்பார்கள்.


ஆனால், அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி தொடர்ந்தும் மக்கள் மகிழ்ச்சியடையும் வகையிலேயே நிகழ்வுகள் இடம்பெறுமா என்பதே இப்போது மக்கள் முன் உள்ள கேள்வியாகும். ஊழல்களை ஒழிப்பது சம்பந்தமான அரசாங்கத்தின் வாக்குறுதியைப் பற்றியே மிகவும் கூடுதலாக சந்தேகிக்க வேண்டியுள்ளது. இதற்கு முன்னர் அமைச்சர்களாக இருக்கும் போது மாபெரும் ஊழல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்ப்பட்ட சிலர் இந்த அரசாங்கத்திலும் இருக்கிறார்கள். அவர்கள் அரசாங்கத்தில் முக்கிய இடங்களை கைப்பற்றிக்கொண்டிருக்கும் போது, ஊழல்களை ஒழிக்க முடியுமா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.


சில சட்டத்தரணிகள் சாதாரண மக்களின் வழக்குகளுக்காக நீதிமன்றங்களில் ஆஜராவதில்லை. அவர்கள் ஒரு வழக்குக்கா ஒரு நாள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு சுமார் 1 இலட்சம் ரூபாய் அறவிடுகிறார்கள். அவ்வாறானவர்கள் அந்தத் தொழிலை ஒரு பக்கம் வைத்துவிட்டு அரசியலில் குதிக்கிறார்கள். அது ஏன் என்பதும் அவ்வாறானவர்கள் தாம் இழந்த வருமானத்தை அரசியல் மூலம் தேட முயற்சிக்க மாட்டார்களா என்பதும் நல்லாட்சிக்கான எதிர்ப்பார்ப்புக்களை சற்று சிதறடிக்கின்றது.


தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் கடந்த அரசாங்கத்தை விட இந்த அரசாங்கத்தைப் பற்றி நம்பிக்கை வைக்கலாம். ஏனெனில், மஹிந்த அரசாங்கம் தான் இலங்கை வரலாற்றில் பதவிக்கு வந்த படு மோசமான இனவாத அரசாங்கம். இந்த அரசாங்கம் மிக இலகுவாக வட மாகாண ஆளுநரை மாற்றிய போதும் மஹிந்த, இனவாத ஆணவத்தின் காரணமாக அதனை செய்யவில்லை. அதனை செய்திருந்தால் சிங்கள் மக்கள் அவருக்கு எதிராக செயற்பட்டிருப்பார்கள் என்று கூறவும் முடியாது. 


ரணிலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் தற்போதைய அரசாங்கத்தை உண்மையிலேயே வழிநடத்துபவர்கள். அவர்கள் மஹிந்தவைப் போன்ற இனவாதிகளல்லர். அதாவது, அவர்கள் தமிழ் மக்களை மையமாக வைத்து முடிவுகள் எடுப்பவர்கள் என்பதல்ல. ஆனால் ராஜபக்ஷ குடும்பத்தோடு ஒப்பிடுகையில் இவர்கள் எவ்வளவோ சிறந்தவர்கள். ஆனால் அரசாங்கம் எதிர்க் காலத்தில் பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கும் போது அதனால் மக்களின் கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்று அரசாங்கம் கருதும் போது நாம் எதிர்ப்பாராதவையும் இடம்பெறலாம். 


விரைவில பொதுத்தேர்தல் ஒன்று நடைபெறும் என்பதே பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாக இருக்கிறது. புதிய அரசாங்கத்தின் 100 நாள் திட்டம் முடிவடைந்தவுடன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றே பிரதமர் விக்கிரமசிங்க அண்மையில் கூறியிருந்தார். அதேவேளை, பொதுச் சமாதானம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் சமர்ப்பித்துள்ள நம்பிகக்கையில்லா பிரேரணையில் அரசாங்கம் தோல்வியடைந்தால் உடனடியாக நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றும் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறிகொத்தாவில் நடைபெற்ற ஐ.தே.க. செயற்குழுக் கூட்டத்தின் போது கூறியிருக்கிறார்.


புதிய அரசாங்கத்தில் குறைப்பாடுகள் இருக்கலாம். ஆனால் சிறுபான்மை மக்கள் கடந்த ஜனவரி 8ஆம் திகதிக்கு முன்னர் இருந்ததைப் போலல்லாது ஒருவித நிம்மதியுடன் இருக்கிறார்கள் என்றே கூற வேண்டும். எனவே, திடீரென பொதுத் தேர்தல் நடைபெற்றால் கடந்த ஜனவரி 8ஆம் திகதிக்கு முன்னர் இருந்த நிலைமை மீண்டும் ஏற்படாதிருக்கும் வகையில் சிறுபான்மையினக் கட்சிகள் செயற்பட வேண்டியுள்ளது. அது சிக்கலான முடிவாவது நிச்சயம். ஏனெனில் சிறுபான்மை மக்களின் வாக்குகளால் பதவிக்கு வந்த ஜனாதிபதி சிறிசேன, பொதுத் தேர்தலின் போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு தலைமை தாங்குகிறார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அம்மக்கள் விரும்பிய ஐ.தே.க., அவரது கட்சிக்கு எதிராக போட்டியிடப் போகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .