2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

குறுகிய மனப்பான்மை எதற்கு? - உயர்நீதிமன்றம் கேள்வி

Freelancer   / 2022 ஜூலை 05 , பி.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில், இந்து அல்லாதவர்களை கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்க கூடாது என கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.

கும்பாபிஷேக விழா நாளை (06) நடைபெறவுள்ளது. அப்போது இந்து அல்லாதவர்களை கோவில் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாதென மனுத்தாக்கல் செய்யப்பட்டது.  

இந்த மனு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது  மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைய சட்டத்தின் நோக்கம் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை நிர்வாகம் மற்றும் நிர்வாகம் தொடர்பான சட்டத்தை ஒருங்கிணைப்பதாகும்.  அதற்கு பூஜைகளில் தலையிட அதிகாரம் இல்லை.

கோயில்களால் தொடர்ந்து பின்பற்றப்படும் 14 வழிபாட்டு முறைகளை கடை பிடிக்க வேண்டும். கோவில் திருவிழாக்கள் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டால், அது தந்திரிக்குகளின் படி மிக முக்கியமான கால அட்டவணைப்படி நடத்த முடியாது.

மேலும், அமைச்சர்கள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் மீது முழு கவனமும் செலுத்தப்படுவதால், தெய்வங்களுக்கும் பூஜைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க முடியாது.

இந்துக்கள் அல்லாதோரை பிரதான விருந்தனராக அனுமதித்தால் கோவில் சடங்குகள் பாதிக்கப்படும். குமரி கோவில் கும்பாபிஷேக விழாவில் இந்துக்கள் அல்லாதோரை அனுமதிக்க கூடாது என வாதிட்டார்.

அதனைத் தொடர்ந்து, அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், பிறரின் நம்பிக்கையில் நாம் தலையிட முடியாது. வேளாங்கண்ணி, நாகூர் தர்கா உள்ளிட்ட தலங்களுக்கு அதிகமான இந்துக்கள் பங்கேற்கின்றனர் என வாதிட்டார்.

இதை தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், வேளாங்கண்ணி, நாகர் தர்கா உள்ளிட்ட தலங்களுக்கு  நானே ஆண்டு தோறும் சென்று வருகிறேன். அதிகமான இந்துக்களும் சென்று வருகின்றனர். இதில் எந்த பாகுபாடும் இல்லை.

கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த பிரபல பாடகர் யேசுதாஸ், ஹரிவராசனம்,  ஐயப்பன்  உள்ளிட்ட இந்து கடவுள்கள் குறித்து ஏராளமான பக்தி பாடல்களை பாடி உள்ளார்.

அனைத்து இந்து மதத்தினரும் யேசுதாசின் ரசிகர்களாக உள்ளனர். இந்த விஷயத்தில் மனுதாரர் குறுகிய மனப்பான்மையுடன் பார்க்க கூடாது . பரந்த மனப்பான்மையுடன் பார்க்க வேண்டும்.

நம்பிக்கையுடன் கோவிலுக்கு வருவோர், ஒவ்வொருவரையும் அடையாள அட்டை வைத்து கண்காணிப்பது இயலாத காரியமாகும்.

ஆகவே நீதிமன்றம் இந்த விஷயத்தில் தலையிட விரும்பவில்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .