2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’மன்னார் சோதனைச் சாவடிகளில் சோதனை’

Niroshini   / 2021 செப்டெம்பர் 13 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

மன்னாரில் உள்ள சோதனைச் சாவடிகளில், நாளை மறுதினம் (15) முதல், கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்டதற்கான அட்டையை பரிசோதிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மன்னார் மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

அத்துடன், தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு அவ்விடத்திலேயே, பி.சி.ஆர். அல்லது அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.

மன்னார் மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில், இன்று (13) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், மன்னார் மாவட்டத்தில், 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் முடிவுக்கு வருகின்ற நிலையில் உள்ளதாகவும் 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பமாக உள்ளதாகவும் கூறினார்.

அத்துடன், விசேட தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளும், அதற்கான தரவுகள் சேகரிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், கடந்த இரு நாள்களில், மன்னார் மாவட்டத்தில், 101 பேர் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் இவர்களில் 66 பேர் நிலக்கண்ணி வெடி அகற்றும் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் பணியாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் கூறிய அவர், இவர்களில் அதிகமானவர்கள் வடமாகாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்தார்.

 

'மேலும், எதிர்வரும் புதன்கிழமையில் (15) இருந்து, சோதனைச் சாவடிகளில், தடுப்பூசியை பெற்றுக்கொண்ட அட்டை பரிசோதிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

'30 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு பி.சி.ஆர். அல்லது அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் தொற்று உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டால், அவர்களை இடைநிலை சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

'எனவே, தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத 30 வயதுக்கு மேற்பட்ட சகலரும், உடனடியாக அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரியை நாடி, புதன்கிழமைக்குள் (15) தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும்' என, வினோதன் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .