2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இலங்கையின் வீடு, நில உடைமைகள் சந்தையில் COVID-19 தாக்கம்

Editorial   / 2020 மே 10 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ச.சேகர்

நாட்டில் COVID-19 வைரஸ் பரவல் காரணமாக வீடு, நில உடைமைகள் சந்தையில் பெருமளவு தாக்கம் ஏற்பட்டுள்ளதாக KPMG வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொற்றுப் பரவல் தொடர்ந்து இடம்பெறும் நிலையில், இந்தத் தொற்றுப் பரவல் முழுமையாக முடிவுக்கு வரும் காலப்பகுதியை எவராலும் உறுதியாகக் குறிப்பிட முடியாத நிலையில், இவ்வாறு பரவல் தணிந்து பொருளாதாரம் மீட்சியடைய ஆரம்பிக்கும் நிலையில் இந்தச் சந்தையிலும் மீட்சியை அவதானிக்கக்கூடியதாக இருக்கும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலவும் உறுதியற்ற பொருளாதார சூழ்நிலை காரணமாக, அடுத்த இரு மாத காலப்பகுதிக்கு இந்தத் துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளில் மந்த நிலை காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம் அமல்ப்படுத்தப்பட்டுள்ளமையால் நிர்மாணம் மற்றும் பொறியியல் துறையில் மந்தநிலை ஏற்படும் எனவும், நிதி வழங்குவதில் ஏற்படும் தாமதங்களும் இதற்கு காரணமாக அமைந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்து எவ்வாறு செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது என்பது தொடர்பில் துறையில் தற்போது கவனம் செலுத்தப்படுகின்றது. 

நிர்மாணத்துறைக்கு அவசியமான மூலப்பொருட்கள் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டியுள்ளதால், அந்நாடுகளில் இந்தத் துறை தங்கியுள்ளது. கொள்முதல் தாமதம் மற்றும் நாணய பரிமாற்று வீதங்களில் வீழ்ச்சி போன்றன இந்தத் துறையின் செலவீனங்கள் அதிகரிப்பதற்கு காரணிகளாக அமைந்திருக்கும்.

விருந்தோம்பல் மற்றும் விற்பனைத் தொடர் போன்ற துறைகளில் COVID-19 தாக்கம் அதிகளவு காணப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருந்தோம்பலுடன் தொடர்புடைய வீடு, நில உடைமைகள் சந்தை

இலங்கையில் COVID-19 பரவல் ஆரம்பித்தத்தை தொடர்ந்து அமலிலுள்ள ஊரடங்கு சட்டம், சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளமை போன்ற காரணிகளால் சுற்றுலாப் பயணிகளின் வருகை என்பது பூஜ்ஜியமாக அமைந்துள்ளது. இதனால் நாட்டின் சுற்றுலாத் துறைசார் வருமானம் என்பது தற்போது சுமார் இரண்டு மாதங்களாக ஈட்டமுடியாத நிலையில் காணப்படுகின்றது. இந்தத் துறையின் மீட்சி என்பது, இலங்கையின் பிரதான சுற்றுலா சந்தைகளின் திறப்பு மற்றும் சர்வதேச எல்லைப் பகுதிகளின் திறப்பு ஆகியவற்றை பொறுத்து அமைந்திருக்கும். 

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, நாட்டின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 18% இனால் வீழ்ச்சியடைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது நிலவும் இந்த சூழல் மேலும் மோசமான பாதிப்பை துறையில் ஏற்படுத்தும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில் நாட்டின் சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியா மாபெரும் பங்களிப்பை வழங்கியிருந்தது. மொத்த சுற்றுலாப் பயணிகளில் 18.6 சதவீதமானவர்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து ஐக்கிய இராஜ்ஜியம், சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்களிப்பை வழங்கியிருந்தனர். இந்நிலையில் சீனாவில் பெப்ரவரி மாதம் நிலவிய முடக்க நிலை காரணமாக சீனா புதுவருட காலப்பகுதியில் கூட இலங்கைக்கு சீனாவிலிருந்து குறைந்தளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர். 2020 ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் முறையே 6.5 மற்றும் 17.7 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்திருந்தது. மார்ச் மாதத்தில் இது 70.8 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்தது. வீசா வழங்குவதில் காணப்பட்ட தாமதம், நாட்டின் சகல உள்வரும் துறைப்பகுதிகளும் மூடப்பட்டமை மற்றும் சர்வதேச பிரயாணங்களில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் போன்றன இதில் பங்களிப்பு வழங்கியிருந்தன. 

இலங்கையில் COVID-19 பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டாலும், இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நாடுகளில் இந்த நிலை எவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டு, நிலைமை வழமைக்கு திரும்புவது என்பதை பொறுத்தே இந்தத் துறையின் மீட்சி அமைந்திருக்கும். சீனாவின் பொருளாதாரம் படிப்படியாக வழமைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் இந்த வார முற்பகுதியிலிருந்து முடக்கநிலை தளர்த்தப்பட்டுள்ளது. ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்தும் தொற்றாளர்கள் பதிவாகி வரும் நிலையில், இந்நாடுகள் முழுமையாக எப்போது வழமைக்கு திரும்பும் என்பதை தற்போது உறுதியாக குறிப்பிட முடியாது. உலகளாவிய ரீதியில் தற்போது சுமார் 3 பில்லியன் மக்கள் ஏதோ ஒரு வகையில் முடக்கப்பட்டுள்ளனர். பிரயாண தடைகள், நிகழ்வுகள் இரத்தாதல், குறைந்தளவு தனிப்பட்ட மற்றும் வியாபார பிரயாணங்கள் போன்றன குறுங்கால அடிப்படையிலான தங்கியிருப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 

இந்தத் தொற்று மீண்டும் மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், இந்தத் துறையின் மீட்சி என்பது 2021ஆம் ஆண்டில் இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன. 

கடந்த சில வருடங்களில், இலங்கையில் சுற்றுலாத்துறைசார் வீடு, நில உடைமைகள் நிர்மாணம் அதிகரித்திருந்தது. சுற்றுலாத் துறைசார் கேள்விக்கு அப்பாற்பட்டதாக இந்த விநியோகம் அமைந்திருந்தது. வீட்டு அறைகள் வாடகை மற்றும் சேவையளிக்கப்படும் தொடர்மனைகள் போன்றன ஹோட்டல் அறை வாடகைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.

விற்பனை நிலையங்கள் சந்தை

விற்பனை நிலையங்கள் மற்றும் சொப்பிங் மோல்கள் போன்றன சுற்றுலாத் துறை வீழ்ச்சி மற்றும் உள்நாட்டவர்களின் குறைந்த செலவு செய்யும் நிலை காரணமாக பெரும் பின்னடைவை எதிர்கொள்ளும். உள்நாட்டவர்கள் சுகாதார அச்ச நிலை காரணமாக இந்த பகுதிகளுக்கு செல்ல முடியாமை அல்லது செல்ல விரும்பாமை காரணமாக இந்த நிலையங்கள் பாதிப்படையும். உள்நாட்டு நுகர்வோரின் வருமானம் பொருளாதார பாதிப்பினால் பெருமளவு பாதிக்கப்பட்டால் இந்த நிலை மேலும் மோசமடையும். உணவகங்களும் தற்போது வெறிச்சோடியுள்ளன. உணவு விநியோக செயற்பாடுகளை மாத்திரம் ஒரு சில உணவகங்கள் முன்னெடுக்கின்றன. கடந்த தமிழ், சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு பொருட்களை கொள்வனவு செய்து வைத்திருந்த சில விற்பனையகங்கள் அவற்றை விற்பனை செய்ய முடியாமை காரணமாக பணப்பாய்ச்சல் மற்றும் அதிகளவு தொழிற்பாட்டு செலவீனம் போன்றவற்றை எதிர்கொள்ளும். ஜுலை மாதம் நடுப்பகுதி வரை இலங்கைக்கு அத்தியாவசியப் பொருட்களைத் தவிர, ஏனைய பொருட்கள் இறக்குமதிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமையும் இந்த நிலையங்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். 

இந்த காலகட்டத்தில் வீட்டு விநியோக சேவை, ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்தல், கைடயக்க தொலைபேசிகளின் செயலிகளினூடாக பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்கள் இந்த சூழலில் பயன்பெறுவார்கள்.

இவ்வாறான நிலையில் நெருக்கடியை எதிர்நோக்கும் நிலையங்கள், தமது விற்பனை பகுதிகளுக்கான வாடகைகள் தொடர்பில் நிவாரண உதவிகளை எதிர்பார்ப்பார்கள். இந்நிலையில் கடந்த வாரம் நாட்டின் இரு முன்னணி சொப்பிங் மோல்களின் நிர்வாகங்கள் ஊரடங்கு காலப்பகுதிக்கான வாடகைகளை அறவிடுவதில்லை என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அலுவலக பகுதி சந்தை

இந்த தொற்றுப் பரவல் காரணமாக அலுவலக பகுதி சந்தை மற்றும் வாடகை பகுதி பெருமளவு பாதிப்பை எதிர்கொள்ளும். குறைந்தளவு பொருளாதார செயற்பாடுகள் இடம்பெறுகின்றமையால், அலுவலக இடப் பகுதிக்கான வாடகைகள் குறைவடையும் சாத்தியங்கள் காணப்படுகின்றன. குறுங்கால அடிப்படையில் குத்தகைக்கு பெறப்பட்ட பகுதிகள், குத்தகை நிறைவடையும் காலத்தை நெருங்கியுள்ள பகுதிகள் பெருமளவில் பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடும். ஊரடங்கு தளர்த்தப்பட்ட போதிலும், பல வர்த்தக நிலையங்கள் வழமை போன்று இயங்குவதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக தொடர்ந்தும் தொழில்நுட்பங்களின் உதவியுடன் வீடுகளிலிருந்து பணியாற்றும் செயற்பாடுகளை தொடர ஊக்குவிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இணைந்த பணியாற்றும் பகுதிகள் மற்றும் நெகிழ்ச்சியான அலுவலக பகுதிகள் போன்றன நீண்ட கால அடிப்படையில் நேர்த்தியான தாக்கங்களை கொண்டிருக்கும்.

கூட்டாண்மை நிறுவனங்களை பொறுத்தமட்டில் சுகாதாரம் மற்றும் நலன் ஆகியன தொடர்பில் கவனம் செலுத்தப்படும். சொத்துக்கள் முகாமைத்துவத்துடன் வியாபார செயற்பாடுகள் தொடர்பான தொடர்ச்சித் திட்டங்களை வியாபாரங்களுக்கு உருவாக்க வேண்டியிருக்கும். மேம்படுத்தப்பட்ட தூய்மை செயற்பாடுகள் பின்பற்றப்பட வேண்டியிருக்கும் என்பதுடன், அவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியிருக்கும். தொற்றுப் பரவலை தடுப்பதற்கு காற்றோட்ட வசதி, காற்று வடிகட்டல் வசதி மற்றும் பொது தொற்றுநீக்கல் தொடர்பில் கட்டிடங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டியது முக்கியமானதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வதிவிடங்கள் சந்தை

விருந்தோம்பல் மற்றும் வியாபார பகுதிகளுடன் ஒப்பிடுகையில் வதிவிடசார் சந்தையில் ஏற்படும் தாக்கம் குறைவாக அமைந்திருக்கும். தொடர்மனைகள் மற்றும் வீடுகள் விற்பனை மற்றும் வாடகைக்கு வழங்கல் தொடர்பான கொடுக்கல் வாங்கல்கள் குறிப்பிட்ட காலப்பகுதிக்கு தடைப்பட்டிருக்கும். குறிப்பாக விற்பனை தொடர்பான ஆய்வு விஜயங்கள் மற்றும் ஆவணப்படுத்தல்களில் ஏற்படும் தாமதங்கள் இதில் பங்களிப்பு செலுத்தும். நாட்டில் நிலவும் உறுதியற்ற பொருளாதார நிலை காரணமாக, வீடுகளை கொள்வனவு செய்ய எதிர்பார்த்திருப்போரின் தீர்மானங்களை மாற்றிக் கொள்ள, அல்லது அந்தத் தீர்மானத்தை ஒத்தி வைப்பதற்கு தூண்டுவதாக அமையும். 

தொடர்மனைகளின் விற்பனை என்பது கடந்த சில வருடங்களாக நிலவிய துறைசார் தொடர்ச்சித்தன்மையற்ற கொள்கைகளின் காரணமாக வீழ்ச்சியடைந்திருந்தது. தேசிய மட்டத்தில் இந்தத் துறைசார் மீளமைப்பு கொள்கைகள் ஏற்படுத்தப்படுவதனூடாக வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடியதாக அமைந்திருக்கும்.

பொது வசிப்பிட பகுதிகள் மற்றும் ஒரு படலையுடனான தொடர்குடியிருப்பு பகுதிகள் போன்றன வைரஸ் தொற்று பரவுவதற்கு அதிகளவு ஆபத்து நிறைந்த பகுதிகளாக அமைந்திருக்கும் என்பதால், இவ்வாறான திட்டங்கள் வடிமைப்பு மற்றும் ஏற்கனவே அமைக்கப்பட்ட வண்ணமுள்ள திட்டங்களில் இந்த விடயத்தை கவனத்தில் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

களஞ்சியப் பகுதிகள் 

சர்வதேச மட்டத்தில் விநியோகத் தொடர் பாதிக்கப்பட்டுள்ளமையால் பிரதான துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களின் செயற்பாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எவ்வாறாயினும் தொற்றுப் பரவல் காரணமாக சரக்கு கையாளலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தமது கையிருப்புத் தொகை தொடர்பில் அதிகளவு கவனம் செலுத்தக்கூடும். இதனால் களஞ்சியசாலை இடவசதிகளுக்கான தேவை அதிகரிக்கக்கூடும். மேலும் இணையமூல சந்தைகளின் அதிகரிப்பு, இவ்வாறான சந்தைகளை மக்கள் பாவிப்பது அதிகரிப்பு போன்றனவும் இந்த களஞ்சியப்பகுதிகளுக்கான தேவையை மேலும் அதிகரிக்கச் செய்யும்.

இந்த தொற்றுப் பரவல் காரணமாக உடனடியாக வீடு, நில உடைமைகள் சந்தையில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. காலப் போக்கில் நடுத்தளவு மற்றும் நீண்ட கால தாக்கத்தை மதிப்பிடக்கூடியதாக இருக்கும். பிரதான பொருளாதார துறைகளில் தாக்கம், புதிய வியாபார மூலோபாயம் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய ஊழியர்சார் தீர்மானங்கள் போன்ற நடுத்தரளவு காலப்பகுதியில் வீடு, நில உடைமைகள் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும். COVID-19 பரவலின் பின்னர் இந்த சந்தை இயங்கும் முறையில் மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக ஒரு பகுதியிலிருந்து பணியாற்றுவது, தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்துவது போன்றனவும் வீடு, நில உடைமைகள் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .