2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கப்பலுடன் கவிழும் சுற்றுலாத் துறை

S.Sekar   / 2021 ஜூன் 05 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ச.சேகர்

கொவிட்-19 மூன்றாம் அலை தொற்றுப் பரவலுடன், அதனைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் அமல்ப்படுத்தப்பட்டது முதல், வீடுகளில் இருக்கும் மக்கள் மத்தியில் பரவலாக பேசும் பொருளாக கொழும்பு துறைமுகத்திலிருந்து ஒன்பது கடல்மைல் தூரத்தில் தீப்பற்றிய நிலையில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அமைந்திருந்தது.

கொழுந்துவிட்டெரிந்த இந்த கப்பலிலிருந்து கடலில் வீழ்ந்த கொள்கலன்களில் காணப்பட்ட பிளாஸ்ரிக் மூலப்பொருட்கள் அலையில் அடிபட்டு இலங்கையின் மேற்கு கரையோரத்துக்கு கொண்டு வரப்பட்டதுடன், சிலாபம் முதல் களுத்துறை, ஹிக்கடுவை கடந்து இறுதியாக கிடைத்த தகவல்களில் பிரகாரம் வெலிகம கரையோரப் பகுதி வரையிலும் தரைதொட்டுள்ளதாக அறிய முடிந்தது.

இதனால் ஏற்பட்டுள்ள கடல்மாசு, கடல் உயிரினங்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து மற்றும் அதனை சீர்செய்ய தேவைப்படும் காலம் தொடர்பில் சூழல்சார் ஆர்வலர்கள் பல்வேறான தகவல்களை முன்வைத்து வரும் நிலையில், தீப்பரவல் காரணமாக சேதமடைந்த இந்தக் கப்பல் தற்போது மூழ்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கப்பலில் காணப்படும் எண்ணெய், எரிபொருள் போன்றன கடலுடன் கலக்குமாயின், அதனால் ஏற்படும் சேதம் கடல்வாழ் உயிரினங்களைப் போன்று, கடற்றொழிலை ஜீவனோபாயமாக கொண்ட கரையோர மக்களுக்கும் பொருளாதார மற்றும் ஜீவனோபாய ரீதியில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த பிரச்சனையை சீர்செய்வது தொடர்பில் உடனடித் தீர்வாக, கொழும்பு, கம்பஹா மாவட்டங்களின் கரையோர பகுதிகளைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகையை வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளதாக அறிவித்தது.

நாட்டின் பொருளாதாரம் தலைதூக்குவதற்கு தற்போதைய தேவை அந்நியச் செலாவணியாகும். உலகளாவிய ரீதியில் கொவிட் தொற்றுப் பரவலின் தாக்கம் அடங்காத நிலையில், பாரியளவிலான முதலீடுகள் உடனடியாக இலங்கைக்கு கிடைக்குமா என்பது ஒரு கேள்வியாக அமைந்துள்ளது. குறிப்பாக போர்ட் சிட்டி விவகாரத்தின் போதும் இந்தவிடயம் தொடர்பில் பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில், நாட்டின் ஏற்றுமதிக்கு அடுத்ததாக, அந்நியச் செலாவணியை ஈட்டக்கூடிய மற்றுமொரு பிரதான துறையாக, நாட்டின் சுற்றுலாத் துறையை குறிப்பிட முடியும். இலங்கையின் சுற்றுலாத் துறையில் முக்கியமான, சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த அம்சங்களில் இலங்கையின் கரையோரங்களையும் குறிப்பிட முடியும். இலங்கையின் மேற்கு கரையோரத்தில் சிலாபம் முதல் வெலிகம வரையான பகுதியில் கரையோரத்தில் பல நட்சத்திர ஹோட்டல்கள் காணப்படுகின்றன.

குறிப்பாக கொவிட் தொற்றுப் பரவலுக்கு பின்னர் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவு பயணம் செய்யும் ஹோட்டல்களும் இந்த கரையோரப் பகுதியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொற்றுப் பரவல் காணப்படும் நிலையில், உள்நாட்டில் பொது மக்கள் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச விமான நிலையங்கள் இந்த வாரம் முதல் மீண்டும் பயணிகள் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட சுற்றுலாத்துறையைச் சேர்ந்த அமைப்புகள் இதனூடாக நாட்டுக்கு அவசியமான அந்நியச் செலாவணியை ஈட்டி, நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏதேனும் வகையில் பங்களிப்பு வழங்கவும், இந்தத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு ஏதேனும் வகையில் வருமானமீட்டுவதற்கு பங்களிப்பு வழங்கவும் எதிர்பார்க்கின்றது.

இவ்வாறான சூழலில், இந்த கப்பல் மூழ்கியுள்ளமை, அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் போன்றன நாட்டின் மேற்கு கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த ஹோட்டல்களுக்கு எந்த வகையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை அடுத்து வரும் வாரங்களில் குறிப்பிடக்கூடியதாக இருக்கும். குறிப்பாக, நாட்டின் கரையோர அழகை ரசிக்க வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், தம்மால் சுற்றுப்புறச்சூழலுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் அதிகளவு அக்கறை செலுத்துகின்றனர்.

இந்நிலையில், கப்பலிலிருந்து வெளியேறிய மாசுகளால் கரையோரம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அழகை ரசிக்கும் அவர்களின் எதிர்பார்ப்பில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த கப்பல் தீப்பற்றியமை மற்றும் மூழ்கும் நிலை தொடர்பில் இலங்கையில் மாத்திரமன்றி, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற செய்திச் சேவைகள் மற்றும் இணையத்தளங்களிலும் பெருமளவு கவனம் செலுத்தப்பட்டிருந்தன.

இரசாயனக் கசிவுடன் இந்த கப்பலை நாட்டின் கரையோர எல்லைக்கு வருவதற்கு அனுமதி வழங்கியமை யார் என்பது தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துகள் காணப்படும் நிலையில், இந்த இடரினால் ஏற்பட்ட செலவுகள் மற்றும் பாதிப்புகளை குறைப்பதற்கு அரசாங்கம் உடனடியாக செயலாற்ற வேண்டிய தேவை காணப்படுகின்றது. இந்த அனர்த்தத்திலிருந்து மீட்சியடைவதற்கு பல தசாப்த காலம் சென்றாலும், உடனடியாக செயலாற்றுவதனுஸடாக நீண்ட கால அடிப்படையில் எழக்கூடிய பாதிப்புகளை கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

கடல்சார் உயிரியல் நிபுணர்கள் மற்றும் பாதுகாப்பு நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று, கடல்சூழல் பாதுகாப்பு முகவர் அமைப்பு போன்ற கடல் பாதுகாப்பு அமைப்புகளின் உதவியுடன், உலகளாவிய ரீதியில் இந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ள அமைப்புகளின் உதவிகளை நாடி, இந்த ஆபத்திலிருந்து நாட்டை இயன்றளவு பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையின் கடல் எல்லையில் அல்லது அண்மித்த பகுதியில் இவ்வாறானதொரு அனர்த்தம் ஏற்படுவது இது முதல் தடவையல்ல. இதற்கு முன்னர் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்பட்ட போது, அவற்றை எதிர்கொள்வதற்கு இலங்கை எந்தளவுக்கு தயார் நிலையில் இருந்தது என்பதுடன், அவ்வாறான அனுபவங்களிலிருந்து எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படும் போது அவற்றை தவிர்த்துக் கொள்வது தொடர்பில் இலங்கையின் தயார் நிலையை மேம்படுத்தப்படவில்லை என்பது புலனாகின்றது.

இவ்வாறு சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் நாடி, அவர்களின் அவசர தலையீடின்றி, எம்மைச் சூழ காணப்படும் கடல்வளம் என்பது பல தசாப்த காலங்களுக்கு மங்கிய நிலையிலிருக்கும் என்பதுடன், மூழ்கிய கப்பலுடன் சேர்ந்து, கடல் வாழ் உயிரினங்களை மாத்திரமன்றி, அதில் தங்கியிருக்கும் நாட்டு மக்கள், கரையோரத்தில் தங்கியிருக்கும் ஜீவனோபாயத் துறைகளும் மூழ்கிவிடும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X