2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சிறுமட்ட விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க USAID மற்றும் FAO உதவி

S.Sekar   / 2023 மார்ச் 10 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகளின் உணவு, விவசாய ஸ்தாபனமானது (FAO), சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவரமைப்புடனும் (USAID), விவசாய அமைச்சுடனும் இணைந்து இலங்கையின் உலர், இடை வலயங்களில் நெல்லை அடிப்படையாகக் கொண்ட சூழற்றொகுதிகளின் உற்பத்தித்திறனையும், நெகிழ்வுறுதியான தன்மையையும் அதிகரிக்கவுள்ளது.

இலங்கையில் நெற்செய்கைக்காகப் பயன்படுத்தப்படும் 890,000 ஹெக்டயர் விவசாய நிலத்தில் எழுபத்தைந்து சதவீதமானது சிறு மட்டத்திலான விவசாயிகளின் கீழ் உள்ளது. நாட்டில் அதிகளவான உற்பத்திக்கான சாத்தியக்கூறுகள் காணப்பட்ட போதிலும், இலங்கையில் நெல் பயிரிடப்படும் பிரதான சூழற்றொகுதிகளில் (உலர், இடை வலயங்கள்) கடந்த 10 ஆண்டுகளில் உற்பத்தித்திறனானது மந்தமான போக்கிலோ அல்லது குறைவடைந்தோ செல்கின்றது. இது ஆசியாவில் உள்ள ஏனைய நெல் விளையும் நாடுகளில் காணப்படும் உற்பத்தி அதிகரிப்புக்கு முரணானதாக காணப்படுகின்றது. 

உலர், இடை வலயங்களில் நெல் உற்பத்தித்திறனானது வெறுமனே 10 சதவீதத்தால் அதிகரித்தால் கூட, இலங்கை 0.5 மில்லியன் தொன் அரிசியை மேலதிகமாக உற்பத்தி செய்யக்கூடியதாயிருக்கும். உற்பத்தித்திறன் மிக்க, வினைத்திறனான பயிர்ச்செய்கை நுட்பங்களை அறிமுகப்படுத்தினால், குறைந்தளவான நீர் மற்றும் இரசாயன உள்ளீடுகளுடன், குறைந்த செலவில் அதிகளவான உற்பத்தித்திறனை அடைய முடியும்.  மிகவும் வினைத்திறனான பயிர்ச்செய்கையானது ஏனைய பயிர்களுக்கு ஏறத்தாழ 100,000 ஹெக்டயர் நிலத்தை விடுவித்து, நாடு இறக்குமதியை நம்பியிருக்கும் நிலையைக் குறைக்கும்.

FAO, USAID, விவசாய அமைச்சின் விவசாயத் திணைக்களம் ஆகியன இணைந்து உலர், இடை வலயங்களில் நெல் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கான செயற்திட்டத்தை உருவாக்கி வருகின்றன. மனிலாவிலுள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் (IRRI), அரசாங்கம், கல்வியாளர்கள், விவசாய விஞ்ஞானிகள், சிவில் சமூகம், தனியார் துறை ஆகியவற்றைச் சேர்ந்த நிபுணர்ளுடனும், பங்குதாரர்களுடனும் இணைந்து FAO ஆனது இந்த வாரம் ஒரு ஆரம்ப செயலமர்வை நடத்தியது. நெல் உற்பத்தித்திறனை அதிகரிக்கத் தேவையான தொழிநுட்பங்களையும், திறன்களையும் விவசாயிகள் பெற்றுக்கொள்வதை அதிகரிப்பதற்கான சூழலை உருவாக்க ஒரு திட்ட வரைபடத்தை இதில் பங்குபற்றியவர்கள் உருவாக்கினர்.

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான USAID பணிப்பாளர் கேப்ரியல் கிராவ் இந்த செயலமர்வில் பங்குபற்றியோரிடையே உரையாற்றும் போது 'விவசாய அமைச்சு, தனியார் துறை, FAO மற்றும் USAID ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பானது இலங்கையில் உணவு பாதுகாப்பை அதிகரிப்பதற்கும் அப்பாற்பட்டதாகும் என்றார். இலங்கையின் விவசாயத்துறையை மானியத்திலிருந்து சந்தை அடிப்படையிலான, தனியார் துறை சார்ந்த, போட்டி விவசாயமாக மாற்றுவதே எங்களது ஒருங்கிணைந்த நீண்ட கால நோக்கமாகும். இதை அடைவதற்கு, புதிய தொழில்நுட்பங்கள், திறமையான அமைப்புகள் மற்றும் விவசாயத் துறையில் அனைத்து பங்குதாரர்களின் நீண்ட கால அர்ப்பணிப்பு ஆகியன முக்கியமானவையாகக் காணப்படும்;' எனத் தெரிவித்தார்.

'தொழிநுட்பம் ஒருபோதும் விவசாயிக்கு மாற்றீடாக அமையாது, ஆனால் தொழிநுட்பத்துடன் விவசாயி விவசாயத்தை மாற்றுவார் - மாற்ற வேண்டும். சிறு விவசாயிகள் இலங்கையின் விவசாயத் துறையின் முதுகெலும்பாக உள்ளனர், மேலும் இந்த முயற்சியின் மூலம், குறைந்த நிலத்தையும், உள்ளீடுகளையும் பயன்படுத்தி அவர்களின் உற்பத்தித்திறனையும், இலாபத்தையும் அதிகரிப்பதற்குத் தேவையான தொழிநுட்பங்களையும், திறன்களையும் கொண்ட பெருமளவான சிறு நெல் விவசாயிகளை ஆயத்தம் செய்ய முடியுமென நாங்கள் நம்புகின்றோம். விவசாய அமைச்சு, USAID, சிறு நெல் விவசாயிகள் ஆகியோரின் ஒத்துழைப்புகளின் ஊடாக, இந்தத் திட்டம் இலங்கையை உணவுப் பாதுகாப்பு மிக்க நாடாக மாற்றுவதற்கான பாதையில் உறுதியாக பயணிக்க முடியும்' என இலங்கை மற்றும் மாலைதீவுக்கான FAO பிரதிநிதி விம்லேந்திர ஷரன் தெரிவித்தார்.

FAO மற்றும் USAIDஇன் தொடர்ச்சியான ஒத்துழைப்புடன் முன்னோக்கி கொண்டு செல்வதற்காக, செயலமர்வின் மூலம் உருவாக்கப்பட்ட சிபாரிசுகள் விவசாய அமைச்சர் கௌரவ. மகிந்த அமரவீரவுக்கு இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்கப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .